Monday, 22 September 2014

இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்

இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல்


‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது.
கூகுள் சாம்ராஜ்யம்
எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத்துள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கூகுள் செயல்படுகிறது. 52 ஆயிரம் பேருக்கும் மேலாக தற்போது இந்த கம்பெனியில் பணியாற்றுகின்றனர்.
அத்தகையப் பெரும் இணைய சாம்ராஜ்யத்தின் முதுநிலை துணைத்தலைவராகத் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். ‘ஆண்ட்ராய்ட் ஒன்’ என்பதைப் புதிதாக கூகுள் அறிவித்த போது அவர் பிரபலமடைந்தார்.
ஆலமரமாய்…
சுந்தர் பிச்சை 2004-ம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். 2011- ல் கூகுள் குரோம் ப்ரவுசர் ,
ஜிமெயில், ஆப்ஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான உலகளாவிய பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
2013 முதல் ஆண்ட்ராய்ட் மென்பொருளுக்கான பொறுப்பாளராகவும் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
1998- ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் எனும் இரண்டு நண்பர்களால் இந்த கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. உலகிலுள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.
ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தகவல்கள் கூகுளில் தேடப்படுகின்றன. அதி விரைவாக கூகுள் வளர்ச்சியடைந்துள்ளது.பல புதிய மென்பொருள் சேவைகளும் அதனால் வெளியிடப்பட்டுள்ளன.
ஜிமெயில் எனப்படும் கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் பிளஸ், கூகுள் டாக், கூகுள் மேப்ஸ், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் போன்ற பல்வேறு கிளைகளை பரப்பி பிரம்மாண்டமான ஆலமரமாய் அது வளர்ந்துள்ளது.ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் மதிப்பில் அதன் வியாபாரம் விரிந்துள்ளது.
விரியும் ஆதிக்கம்
சமீபத்தில் குரோம் ப்ரவுசர் என்னும் இணைய உலவியையும் கூகுள் வெளியிட்டது. அது தற்போது இணைய ப்ரவுசர்களின் மார்க்கெட்டில் 32 சதவீதத்தை கைப்பற்றி உள்ளது.
ஆண்ட்ராய்டு என்னும் செல்போனை இயக்கும் மென்பொருள்தளத்தையும் அது வெளியிட்டது. அதனால் செல்போன்களின் துறையில் பெரும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் கைகளில் விளையாடும் டச் ஸ்கிரீன் செல்போன்களில் ஏற்பட்டுள்ள புதுமைகளுக்கு எல்லாம் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் எனும் மென்பொருளும் ஒரு காரணம். தற்போது செல்போன் உள்ளிட்ட 120 கோடி கருவிகளில் ஆண்ட்ராய்ட் மென்பொருள் பயன்படுகிறது.
சென்னையின் புதல்வர்
சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்தவர். மேல்படிப்புக்காக மேற்குவங்கத்தை சேர்ந்த கரக்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்து படித்தாவர். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்
எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ.
பட்டமும் பெற்றவர். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.
சுந்தர் பிச்சையைப் பற்றி கூகுள் நிறுவனத்தின் தலைவரான லாரி பேஜ் “அவர் ஆழமான தொழில்நுட்ப அனுபவம், உற்பத்தி மீதான சிறப்பான கண்காணிப்பு, தொழில் முனைப்புத் திறமை ஆகியவற்றின் அரிய ஒருங்கிணைப்பாக இருக்கிறார்” எனப் பாராட்டுகிறார்.
சுந்தர் பிச்சையின் அப்பா சென்னையில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு கம்பெனியான ஜிஇசியில் எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருந்துள்ளார். சுந்தர் பிச்சைக்கு 11வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
அடுத்த பாய்ச்சல்
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் மென்பொருள் மூலம் தனது அடுத்த தயாரிப்புகளைத் திட்டமிட்டு வருகிறது. அவற்றில் தானே வழி அறிந்து செல்லும் கார், ஆண்ட்ராய்ட் டிவி மிக முக்கியமானவை கூகுள் திட்டமிடுகிற கார் தெருக்களில் ஒரு போது, இனி நீங்கள் உங்கள் காரில் எந்த இடத்துக்கு போக வேண்டும் எனக் குறிப்பிட்டு விட்டால் போதும்.
செயற்கைக்கோள்கள் மூலமாக உருவான வரைபடங்கள் மூலம் இயங்கும் கூகுள் மேப்ஸ் துணையோடு, உங்கள் கார் உலகின் எந்த மூலைக்கும் தரைவழியாகத் தானே வழிகளை அறிந்து செல்லும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட டிவிகளை உருவாக்கும் முயற்சியில் தற்போது கூகுள் ஈடுபட்டுள்ளது. அப்படிப்பட்ட டிவிகள் வந்தால் அவை தற்போதைய தொழில்நுட்பங்களில் இயங்கும் டிவிகளை காலாவதி ஆக்கும். அவை புதிய தலைமுறை டிவிகளாக இருக்கும். உங்கள் குரல்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படக்கூடியவையாக இந்த டிவிக்கள் இருக்கும்.
கூகுள் கண்ணாடி எனும் கருவியை மாட்டிக்கொண்டாலே போதும் நம்மால் இணையத்தைப் பார்க்க முடியும் என அண்மையில் கூகுள் அறிவித்தது நினைவிருக்கலாம். அத்தகைய கருவிகள் இன்னமும் முழுமையாக மார்க்கெட்டுக்கு வரவில்லை. அவை எல்லாம் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன.
அத்தகைய திட்டங்களில் முக்கிய பங்காற்றுபவராக சுந்தர் பிச்சை உருவாகி உள்ளார். ஆண்ட்ராய்ட் ஜீனியஸ் என அவர் அழைக்கப்படுகிறார். 
Source: Tamil The Hindu.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...