செய்திகள் - 27.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : திருநற்கருணை உலகின் நம்பிக்கை உணவு
2. முதியோர் தின திருப்பலியில் திருத்தந்தை பெனடிக்ட்
3. திருத்தந்தை : அமைதியை ஏற்படுத்த அஞ்ச வேண்டாம்
4. கிறிஸ்தவப் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கண்டனம்
5. நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குகொள்ள விசுவாசிகளுக்கு அழைப்பு
6. தென்சூடானில் சண்டை தொடர்ந்தால் மனிதாபிமானப் பேரிடர் ஏற்படக்கூடும்
7. உலக சுற்றுலா தினம்(செப்.27), ஐ.நா.செய்தி
8. அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்
9. வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : திருநற்கருணை உலகின் நம்பிக்கை உணவு
செப்.27,2014. திருநற்கருணையில் இயேசுவை சந்திப்பதில் உலகு தனது நம்பிக்கையைக் காண்கிறது என்று, அனைத்துலக நற்கருணை மாநாட்டு அமைப்பினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2016ம்
ஆண்டு சனவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெறவுள்ள 51வது
அனைத்துலக நற்கருணை மாநாட்டுக்குத் தயாரிப்பாக நடந்த கூட்டத்தின்
பிரதிநிதிகளை திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை
இவ்வாறு கூறினார்.
திருநற்கருணை, கிறிஸ்தவ நம்பிக்கையின் உணவு, ஆயினும், இவ்வுணவின் ருசியையும், இவ்வுணவு தரும் நம்பிக்கையையும் இவ்வுலகு பெருமளவு இழந்து வருகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை.
2016ம் ஆண்டு சனவரி 25 முதல் 31 வரை நடைபெறவுள்ள 51வது அனைத்துலக நற்கருணை மாநாடு, “நம்மிலுள்ள கிறிஸ்து, நம் மகிமையின் நம்பிக்கை” என்ற தலைப்பில் இடம்பெறும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. முதியோர் தின திருப்பலியில் திருத்தந்தை பெனடிக்ட்
செப்.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று முதியோருக்கு நிகழ்த்தும் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்வார் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறக்குறைய நாற்பதாயிரம் முதியோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிகழ்த்தும் திருப்பலியில், 87 வயதாகும் முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் கலந்துகொள்வார்.
இத்தாலி, இந்தியா, அர்ஜென்டீனா, காங்கோ
குடியரசு போன்ற நாடுகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயதான அருள்பணியாளர்களும்
திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவார்கள் என்று, திருப்பீட குடும்ப அவை அறிவித்துள்ளது.
அக்டோபர் முதல் தேதி அனைத்துலக முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, திருப்பீடம் இஞ்ஞாயிறன்று அந்நாளைச் சிறப்பிக்கின்றது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில், “நம்மையும், நம்
விருப்பங்களையும் நம் வாழ்வின் மையமாக வைப்பதற்குரிய மனநிலை இருக்கின்றது.
இது மனிதப் பண்புதான். ஆனால் இது கிறிஸ்தவப் பண்பு அல்ல” என்று எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : அமைதியை ஏற்படுத்த அஞ்ச வேண்டாம்
செப்.27,2014. அமைதி, இணக்கவாழ்வு, ஒப்புரவு, ஒன்றிப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதற்கு அஞ்ச வேண்டாம், ஏனெனில் அவை இழப்போ, தோல்வியோ அல்ல, மாறாக வெற்றியே என்று, வெனெசுவேலா நாட்டுக்குச் செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெனெசுவேலாவில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த அனைத்துலக அமைதி வாரத்துக்கு திருத்தந்தை அனுப்பிய செய்தியில், ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் அமைதிச்சுடர் இருப்பதால், உலகில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த அனைத்துலக அமைதி வாரக் கூட்டத்தில், கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், யூதர், முஸ்லிம்கள் என, பலமதப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வெனெசுவேலா தலைநகர் கரகாஸ் திருப்பீடத் தூதர் பேராயர் ஆல்தோ ஜோர்தானோ அவர்களுக்கு, திருத்தந்தையின் இச்செய்தி அனுப்பப்பட்டு, இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
மேலும், இயேசு சபை மறைப்பணியாற்றுவதற்கு மீண்டும் அங்கீகரிக்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம்
இயேசு சபையினர் ஜேசு ஆலயத்தில் இச்சனிக்கிழமை மாலை நடக்கும் நன்றித்
திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்து கொள்வது அவரது
சனிக்கிழமை நிகழ்வில் உள்ளது.
1773ம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட இயேசு சபை, 1814ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி அத்தடை அகற்றப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. கிறிஸ்தவப் போதகர் கொலை செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் ஆயர்கள் கண்டனம்
செப்.27,2014.
பாகிஸ்தானில் தேவநிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்யானக் குற்றச்சாட்டில்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த
கிறிஸ்தவப் போதகர் ஒருவர் காவல்துறை மனிதர் ஒருவரால் சிறைக்குள்ளேயே
சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதற்குத் தங்களின் வன்மையான கண்டனத்தைத்
தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
இவ்வன்செயல் குறித்துப் பேசிய பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைய இயக்குனர் செசில் ஷேன் சவுத்ரி அவர்கள், கொலை செய்யப்பட்டுள்ள Zafar Bhatti என்ற கிறிஸ்தவப் போதகர் ஏற்கனவே சிறைக்காவலர்களாலும் உடன் கைதிகளாலும் மிரட்டலுக்கு உள்ளாகியிருந்தார் எனவும் கூறினார்.
ராவல்பிண்டியின் Adyala சிறையில், கிறிஸ்தவப் போதகர் Zafar Bhattiயின்
உடல் குண்டுக் துழைத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. 2012ம் ஆண்டு
ஜூலை மாதம் தேவ நிந்தனைக்குற்றம் சுமத்தப்பட்டுச் சிறைவைக்கப்பட்ட 45 வயதான
Zafar Bhatti மீதான குற்றச்சாட்டிற்கு இதுவரை எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என, ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
மேலும், இதே குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முஹம்மத் அஸ்கர் என்பவர், படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்தார் செசில் ஷேன் சவுத்ரி.
ஆதாரம் : Fides
5. நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குகொள்ள விசுவாசிகளுக்கு அழைப்பு
செப்.27,2014. அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் என எல்லாரும் நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குகொள்ள வேண்டுமென, இந்திய ஆயர் ஒருவர் வேண்டுகோள்விடுத்தார்.
வருகிற
அக்டோபர் 19ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி
மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா ஆயர்
கிஷோர் குமார் குஜூர் அவர்கள், திருமுழுக்குப் பெற்றுள்ள எல்லாரும் மறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
உலகின்
பல்வேறு நாடுகளில் நடக்கும் மறைபரப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம்
அல்லது அவற்றுக்கு நிதியுதவி செய்யலாம் அல்லது அவற்றுக்காகச் செபிக்கலாம்
எனவும் ரூர்கேலா ஆயரின் மேய்ப்புப்பணி அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : AsiaNews
6. தென்சூடானில் சண்டை தொடர்ந்தால் மனிதாபிமானப் பேரிடர் ஏற்படக்கூடும்
செப்.27,2014. தென்சூடானில் சண்டை தொடர்ந்து இடம்பெற்றால் மனிதாபிமானப் பேரிடர் ஏற்படக்கூடும் என அந்நாட்டு ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்சூடானின் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் எத்தியோப்பியாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளவேளை, ஜூபாவில் கூட்டம் நடத்திய தென்சூடான் ஆயர்கள், அந்நாட்டின் அனைத்து வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமாறும், போர் நன்னெறிக்குப் புறம்பானது என்றும் கூறியுள்ளனர்.
ஆயர்களாகிய தாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, ஆனால் மேய்ப்பர்கள், எனவே இறந்துகொண்டிருக்கும் விசுவாசிகளுக்காகக் குரல் கொடுக்கிறோம் எனவும், சண்டை மேலும் தொடர்ந்தால் துன்புறும் மக்களின் நிலைமை மேலும் மோசமடையும் எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென்சூடானில்
இடம்பெற்ற சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும்
நூறாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
தென்சூடான், 2011ம் ஆண்டில் சூடானிலிருந்து பிரிந்து தனிநாடானது.
ஆதாரம் : CNS
7. உலக சுற்றுலா தினம்(செப்.27), ஐ.நா.செய்தி
செப்.27,2014. சுற்றுலாக்களால் கிடைக்கும் நன்மைகளால், சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்படும் நாடுகளும் பயனடையும் வகையில் உறுதியான கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு, உலக சமுதாயம் தன்னை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
செப்டம்பர் 27, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றுலா தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், சுற்றுலாக்களால் கிடைக்கும் நன்மைகளைக் குறைக்க முயற்சிப்பது, 2015ம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்குப் பாதிப்பாக அமையும் என எச்சரித்துள்ளார்.
மக்கள் பல திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு சுற்றுலாக்கள் உதவுகின்றன, வேளாண்மை, கட்டுமானம், நுண்கலைகள் போன்ற துறைகளில் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களையும், வியாபாரங்களையும் சுற்றுலாக்கள் உருவாக்கிக் கொடுக்கின்றன என்றும் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.
வறுமையைப் போக்கி, பாலின வேறுபாடின்றி அனைவரும் முன்னேற வாய்ப்பளித்து சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கு உதவுவது, உலக மக்கள் மத்தியில் நல்லதொரு மாற்றம் ஏற்படுவதற்கு முக்கியமானதாகும் எனவும் அச்செய்தி கூறுகிறது.
உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காட்டுக்கு, சுற்றுலாக்கள் காரணமாக உள்ளன.
ஆதாரம் : UN
8. அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தம் அமல்படுத்தப்பட ஐ.நா. வலியுறுத்தல்
செப்.27,2014. பான் கி மூன் அவர்கள், செப்டம்பர் 26, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக அணு ஆயுத ஒழிப்பு நாளுக்கென வெளியிட்ட செய்தியில், உலகில் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அணுப் பரிசோதனைகளின் சேதங்களை மாற்றமுடியாத அதேவேளை, அணுப் பரிசோதனைகளும், அணு ஆயுதப் பரவல்களும் முற்றிலும் தடைசெய்யப்பட்ட நல்லதோர் எதிர்காலத்துக்கு அனைத்துலக சமுதாயம் உழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றில், ஐ.நா. உறுப்பு நாடுகள் பசிபிக் பகுதியில் நடத்தியிருக்கும் அணுப் பரிசோதனைகள், அப்பகுதி தீவு நாடுகளின் மக்கள் வாழ்வில் எத்தகைய கதிர்வீச்சுத் தாக்கத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்பதை நேரில் காண முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா. வின் 195 உறுப்பு நாடுகளில், 183 நாடுகள், அணுப் பரிசோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, இதுவரை 163 நாடுகள் அதனை அமல்படுத்தப்படுத்தியுள்ளன, இவ்வொப்பந்தம்
உலக அளவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு மேலும் இரு நாடுகளின் கையொப்பம்
தேவை என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், எகிப்து, வட கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள், இவ்வொப்பந்தத்தை அமல்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : UN
9. வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
செப்.27,2014.
பொருளாதாரம் வளர்ச்சியடைந்த நாடுகளில் புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போரின்
எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இவ்வெண்ணிக்கை மூன்று இலட்சத்து முப்பதாயிரமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2014ம் ஆண்டில் புகலிடம் கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிரியாவிலும் இராக்கிலும் தொடரும் மோதல்களே முக்கிய காரணம் எனவும் UNHCR கூறுகின்றது.
ஜெர்மனியிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலுமே மக்கள் அதிகமாகப் புகலிடம் கேட்பதாகச் சொல்லப்படுகின்றது.
No comments:
Post a Comment