செய்திகள் - 16.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்:மக்கள்மீது பரிவுகாட்டாமல், திறமையாக மறையுரைகள் ஆற்றுவதால் எப்பயனும் இல்லை
2. வத்திக்கானில் கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டம்
3. ஈராக்கில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு உலகுக்கு அறநெறிக் கடமை உள்ளது, கர்தினால் Filoni
4. ஐஎஸ் பிரச்சனைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஐ.நா.வால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், முதுபெரும் தந்தை சாக்கோ
5. கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளைக் கண்டித்து பங்களூருவில் பேரணி
6. திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் : “என் அன்பில் நிலைத்திருங்கள்”
7. இலங்கையில் குணப்படுத்தும் வழிபாட்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
8. திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்த தொடர் முயற்சி
9. உலகில் சனநாயகத்தை அமைப்பதில் இளையோரின் பங்கு அவசியம், பான் கி மூன்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ்:மக்கள்மீது பரிவுகாட்டாமல், திறமையாக மறையுரைகள் ஆற்றுவதால் எப்பயனும் இல்லை
செப்.16,2014. மக்களோடு நெருக்கமாக இல்லாமலும், மக்களோடு சேர்ந்து துன்புறாமலும், அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்காமலும் இருந்து திறமையாக மறையுரைகள் ஆற்றுவதால் எப்பயனும் இல்லை, அத்தகைய போதகங்கள் வீணானவை என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது
ஒரே மகனை இழந்த நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு உயிரளித்த நற்செய்தி
வாசகத்தை மையமாக வைத்து இச்செவ்வாய் காலை சாந்தா மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் ஆண்டவர் இயேசு நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு மீண்டும் வாழ்வளித்து புதுமை செய்ததோடு, அப்பெண்மீது பரிவும் காட்டினார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் தம் மக்களைச் சந்தித்தார் என மக்கள் சொல்கின்றனர், ஆனால் கடவுள் தம் மக்களைச் சந்திக்கும்போது அவரது பிரசன்னம் அவ்விடத்தில் இருக்கின்றது, அவர் தம் மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார் என்று விளக்கினார்.
தம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் அவரால் தம் மக்களின் இதயங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், மக்கள்
மத்தியில் கடவுள் தம் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நெருக்கமாகச்
செல்லும்போது அவர் பரிவன்பால் நிறைந்து காணப்படுகிறார் என்றும் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவார்த்தையை மிகத் திறமையாக ஒருவர் போதிக்க முடியும், ஆனால்
இப்போதகர்கள் நம்பிக்கையை விதைக்கத் தவறினால் இந்த மறையுரைகளால் எப்பயனும்
இல்லை என்று இச்செவ்வாய் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. வத்திக்கானில் கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டம்
செப்.16,2014.
அகிலத் திருஅவையின் நிர்வாகம் மற்றும் திருப்பீடத் தலைமையகச்
சீர்திருத்தத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உதவுவதெற்கென
உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டத்தின் இரண்டாம் நாள்
அமர்வு இச்செவ்வாய் காலை திருத்தந்தையின் தலைமையில் தொடங்கியது.
எட்டுப் பேர் கொண்ட இக்கர்தினால்கள் அவையில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை ஒன்பதாவது நபராகத் திருத்தந்தை சேர்த்துள்ளார் என, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது. கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பீடச் செயலராக நியமனம் செய்யப்பட்டதிலிருந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டுவருகிறார்.
இத்திங்களன்று தொடங்கியுள்ள இக்கர்தினால்கள் அவையின் ஆறாவது கூட்டம் இப்புதனன்று நிறைவடையும்.
மேலும், நம் ஆண்டவர் தமது அன்பை நமக்குக் கொடுப்பதற்கு எப்போதும் காத்திருக்கிறார், இது ஒரு பிரமிக்கவைக்கும் காரியம், நம்மை வியப்பில் ஆழ்த்துவதை ஒருபொழுதும் நிறுத்திக்கொள்ளாத காரியம் இது என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஈராக்கில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு உலகுக்கு அறநெறிக் கடமை உள்ளது, கர்தினால் Filoni
செப்.16,2014. ஈராக்கில் ஐஸ்ஐஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் நடத்திவரும் கடும் வன்முறைகள் போன்ற செயல்களுக்கு, கடவுளின்
பெயரை எவரும் பயன்படுத்தமாட்டார்கள் அல்லது இச்செயல்களை கடவுளின் பெயரால்
எவரும் நடத்தமாட்டார்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் பொதுப்படையாக மனிதர்களின் தலைகளை வெட்டும் கொடுஞ்செயல்கள் குறித்து CNN செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள், ஐஸ்ஐஸ் அமைப்பினரின் இச்செயல்கள் உண்மையில் சாத்தானின் செயல்கள் என்று குறை கூறினார்.
போர் வேண்டாம் என, திருத்தந்தை பல தடவைகள் பேசியுள்ளார், நாங்கள் தற்பொழுது போரைப் பற்றிப் பேசவில்லை, ஆனால் அவ்விடத்திலுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்புப் பற்றிப் பேசுகிறோம் எனவும் கூறினார் கர்தினால் Filoni.
பணமும், ஆயுதங்களும், மனிதர்களும், கருத்துக்கோட்பாட்டு மனங்களும் நிறைந்த பயங்கரவாதிகளைக் கொண்ட ஒரு குழு, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வித ஆயுதங்களும் இன்றி இருக்கும் அப்பாவி மக்களைத் தாக்குகின்றது என்றும் கூறினார் கர்தினால் Filoni.
ஈராக்கில் துன்புறும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கு உலகுக்கு அறநெறிக் கடமை உள்ளது என்றும், பன்னாட்டு அளவில் பாதுகாப்பு இருந்தால், மக்கள் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப இயலும் என்றும், ஈராக்கைப் பார்வையிட்டுள்ள கர்தினால் Filoni அவர்கள் தனது பேட்டியில் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஐஎஸ் பிரச்சனைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஐ.நா.வால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், முதுபெரும் தந்தை சாக்கோ
செப்.16,2014.
ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈராக்
அரசின் இராணுவத்திற்கு உதவிசெய்வதற்கு பாரிசில் கொண்டுவரப்பட்டுள்ள
தீர்மானம் நல்ல காரியம் எனினும், எந்தவித
இராணுவத் தாக்குதல்களும் ஐ.நா.வால் ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று ஈராக்
முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கருத்து தெரிவித்தார்.
பாரிசில், ஹாலந்து மற்றும் ஈராக் அரசால் வழிநடத்தப்பட்ட, ஈராக்கில்
அமைதியும் பாதுகாப்பும் என்ற தலைப்பிலான அனைத்துலக கருத்தரங்கின்
இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு 25 நாடுகளின் கூட்டமைப்பு இசைவு
தெரிவித்துள்ளது. இதன்படி ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக குறிப்பிட்ட
நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், குண்டுகள் போடுவது பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது என்றும், வான்தாக்குதல்கள் நடத்துவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார்.
ஈராக்கில் உண்மையான ஒப்புரவு ஏற்படுவதற்கு இன்னும் நாள்கள் எடுக்கும் எனினும், புதிய ஈராக் அரசுக்கு ஆதரவு அளிக்கப்படுமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
மேலும்,
ஐஎஸ் தீவிரவாதிகள் பிணையக் கைதியாக வைத்திருந்த பிரித்தானிய உதவிப்
பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த காணொளியை கடந்த
சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இப்படுகொலைக்கு எதிரான தங்கள் கடுமையான
கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் பிரித்தானிய கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன்
சபைத் தலைவர்கள்.
இது, ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ள மூன்றாவது படுகொலையாகும்.
ஆதாரம் : AsiaNews
5. கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளைக் கண்டித்து பங்களூருவில் பேரணி
செப்.16,2014. ஈராக், சிரியா
மற்றும் ஆப்ரிக்காவில் நசுக்கப்படும் கிறிஸ்தவர்களுடன் தங்களின்
ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் பங்களூருவில் நடந்த பேரணி
ஒன்றில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இஞ்ஞாயிறன்று நடந்த இப்பேரணியில் பேசிய பங்களூரு பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்கள், இனப்படுகொலை, கொடூரமான சித்ரவதைகள், கொலைகள் போன்ற மனித சமுதாயத்துக்கு எதிரான இவ்வன்முறைகளுக்கு முன்பாக மௌனம் காக்கக் கூடாது என்று கூறினார்.
பங்களூருவில் அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் கலந்துகொண்ட இப்பேரணியின் இறுதியில், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று, கர்நாடக ஆளுனரிடம் கண்டன மனு ஒன்றையும் சமர்ப்பித்தது.
ஈராக்,
சிரியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக
இடம்பெறும் கொலைகள் மற்றும் அடக்குமுறைகளைக் கண்டித்து குரல் எழுப்புமாறு, இந்தியாவின் இந்து, முஸ்லிம், சீக், ஜைனம், புத்தம், பார்சி ஆகிய மதத்தினரையும் கேட்டுள்ளது இக்கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு.
இதற்கிடையே, பாக்தாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஆதாரம் : AsiaNews
6. திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணம் : “என் அன்பில் நிலைத்திருங்கள்”
செப்.16,2014. “என் அன்பில் நிலைத்திருங்கள்” என்ற யோவான் நற்செய்தியிலுள்ள திருச்சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைத் திருப்பயணத்தின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என, கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் அறிவித்தார்.
2015ம்
ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும்
இலங்கைத் திருப்பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இத்தலைப்பானது, அனைவருக்கும், குறிப்பாக
ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு திருத்தந்தை வெளிப்படுத்தும்
கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிப்பதாய் உள்ளது எனக் கூறினார் கர்தினால்
இரஞ்சித்.
அமைதி, அன்பு மற்றும் ஒப்புரவுச் செய்தியைப் பரப்புவதற்கு இன்றைய இலங்கைத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும், திருத்தந்தையின் இத்திருப்பயணம், இலங்கைத் திருஅவையின் ஒப்புரவுப் பாதையை ஊக்கப்படுத்தும் சக்தியாக அமையும் என்றும் கூறினார் கர்தினால் இரஞ்சித்.
இலங்கை கத்தோலிக்கத் திருஅவையின் தூணாக நோக்கப்படும் அருளாளர் ஜோப் வாஸ் அவர்கள், இத்திருப்பயணத்தின்போது புனிதராக அறிவிக்கப்படுவார் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் அறிவித்தார்
மேலும், திருத்தந்தையின் இலங்கைத் திருப்பயணத்திற்கென புதிய இணையதளம் ஒன்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திறக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : Fides
7. இலங்கையில் குணப்படுத்தும் வழிபாட்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
செப்.16,2014.
கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள்
தலைமையில் நடந்த குணப்படுத்தும் வழிபாட்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட
மக்கள் கலந்து கொண்டனர்.
இராகமா
இலங்கை அன்னை பசிலிக்காவில் நடந்த வழிபாட்டில் கொழும்பு
உயர்மறைமாவட்டத்தின் இரு துணை ஆயர்களும் நூற்றுக்கணக்கான குருக்களும்
அருள்சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த 67 ஆண்டுகளாக இந்த குணப்படுத்தும் வழிபாடு ஆண்டுதோறும் நடந்துவருகிறது.
உலகப்போரில் இலங்கை காப்பாற்றப்பட்டதற்கு நன்றியாக இலங்கை அன்னை பசிலிக்கா கட்டப்பட்டது.
ஆதாரம் : CNA
8. திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே உறவை உறுதிப்படுத்த தொடர் முயற்சி
செப்.16,2014.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக நிவர்த்தி செய்ய இயலாத நிலையிலிருந்த
திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையேயான உறவைச் சீர்செய்வதற்கென
ஐந்தாவது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் கடந்த வாரத்தில் இடம்பெற்றன.
திருப்பீடத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை திருத்தந்தை ஆர்வமுடன் கவனித்து வருவதாகவும், வியட்நாமின்
முக்கிய இலக்குகளில் அந்நாட்டுக் கத்தோலிக்க சமுதாயம் தொடர்ந்து தனது
பங்கை அளிக்குமாறும் திருத்தந்தை ஊக்கப்படுத்தி வருவதாகவும்
இப்பேச்சுவார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பீட-வியட்நாம் குழு 2009ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இக்குழு, இவ்விரு தரப்புக்கிடையே உறவை வலுப்படுத்தி வளர்ப்பதற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
வியட்நாமில்
கம்யூனிச அதிகாரிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் 1975ல் திருப்பீடத்துக்கும்
வியட்நாமுக்கும் இடையேயான அரசியல் உறவு முறிந்தது.
ஆதாரம் : CNA
9. உலகில் சனநாயகத்தை அமைப்பதில் இளையோரின் பங்கு அவசியம், பான் கி மூன்
செப்.16,2014.
உலகெங்கும் மக்களாட்சி இடம்பெறுவதற்கு இளையோர் முன்னின்று முயற்சிக்குமாறு
ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் உலக சனநாயக தினத்தன்று
வேண்டுகோள் விடுத்தார்.
செப்டம்பர் 15, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சனநாயக தினத்திற்கென பான் கி மூன் அவர்கள் வெளியிட்ட செய்தியில், வரலாற்றிலுள்ள மிகப்பெரிய இளையோர் தலைமுறையின் உறுப்பினர்கள், சனநாயகத்துக்கு முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துநின்று வெல்வதற்கு முயற்சிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இன்றைய உலகம், முன்பிருந்ததைவிட அதிகமான துயரங்களுக்கு உள்ளாகியிருக்கிறது, அதேசமயம் இளையோர் முன்புபோல் இல்லாமல் தற்போது வாய்ப்புக்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இன்று உலகில் ஐந்தில் ஒருவர் 15க்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் என ஐ.நா. கணித்துள்ளது. எனினும், தேர்தல்கள், அரசியல் கட்சிகள், பாரம்பரிய சமூக நிறுவனங்கள் போன்றவற்றில் இளையோரின் பங்கு, குறிப்பாக, வளரும் நாடுகளில் குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment