Wednesday, 24 September 2014

ஐந்துகாய வரம்பெற்ற முதல் அருள்பணியாளர் (St.Padre Pio)

ஐந்துகாய வரம்பெற்ற முதல் அருள்பணியாளர் 
(St.Padre Pio)

முதல் உலகப் போர் நடந்த சமயம் அது. 1918ம் ஆண்டு ஜூலையில் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் இந்த உலகப் போர் முடிவடைவதற்கு அனைவரும் செபிக்குமாறு வேண்டுகோள்விடுத்தார். அச்சமயம், கப்புச்சின் சபையைச் சார்ந்த அருள்பணியாளர் பியோ அவர்கள், இந்த உலகப் போர் முடிவதற்குத் தன்னை ஒரு பலியாக இறைவனுக்கு அர்ப்பணித்தார். இதற்கு சில நாள்கள் சென்று, ஆகஸ்ட் 5க்கும் 7க்கும் இடைப்பட்ட நாள்களில், கிறிஸ்துவைக் காட்சியில் கண்டு தனது விலாவைக் குத்துவதுபோன்ற காட்சி கண்டார் அவர். இந்த அனுபவத்துக்குப் பின்னர் அவரது விலாவில் ஒரு காயம் இருந்தது. இதற்கு சில வாரங்கள் சென்று செப்டம்பர் 20ம்தேதியன்று அருள்பணி பியோ, அருளின் அன்னைமரி ஆலயத்தில் பெரிய திருச்சிலுவையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு காயமடைந்த கிறிஸ்து தோன்றினார். இந்தக் காட்சி முடிந்தபோது, கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்கள் போன்று, வெளியில் காணக்கூடிய விதத்தில் இரண்டு கைகள், இரண்டு கால்கள், வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் பெற்றார். இந்தக் காயங்களை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அவர் இறக்கும்வரை பெற்றிருந்தார். அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது. திருஅவை வரலாற்றில் ஐந்து காயங்கள் வரம்பெற்ற முதல் அருள்பணியாளர் என்ற பெயரையும் இவர் பெற்றார். 1919ம் ஆண்டில் இவரது காயங்கள் பற்றி பலரும் அறியவந்தனர். மருத்துவர்கள் உட்பட எண்ணற்ற மக்கள் இதனைப் பரிசோதனை செய்தனர். ஆயினும் அருள்பணி பியோ அவர்கள், தான் இறக்கும் நாள் வரை கிறிஸ்துவின் பாடுகளின் வேதனைகளை அனுபவித்தார். அருள்பணி பியோ, தான் பெற்ற  காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனத்தளவிலும் பல இன்னல்களை சந்தித்தார். இவரது ஐந்து காயங்களைக் குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்புச் செய்திகளாய் இத்தாலிய நாளிதழ்களில் வெளியாகி அருள்பணி பியோவின் ஆன்மீகப் பணிவாழ்வுக்குத் தடையாய் நின்றன. இவரது காயங்களில் எப்போதும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருந்தது, மருத்துவ துறையால் விளக்கப்பட முடியாத அற்புதமாக இருந்தது. 1968ம் ஆண்டு செப்டம்பர் 23ம்தேதி புனித பியோ தனது 81வது வயதில் இறந்தார். அவர் ஏற்கனவே கூறியபடி இவரது காயங்கள் அனைத்தும் அப்போது சுவடின்றி மறைந்திருந்தன. இத்தாலியின் பியட்ரல்சினாவில் 1887ம் ஆண்டு மே 25ம் தேதி பிறந்த புனித அருள்பணி பியோ, பாத்ரே பியோ, அதாவது தந்தை பியோ என செல்லமாக அழைக்கப்படுகிறார். இப்புனிதரின் விழா செப்டம்பர் 23.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment