செய்திகள் - 18.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : ஆயர்கள், தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயல்படுபவர்கள்
2. நாட்டைக் கட்டியெழுப்ப சாட்சிய வாழ்வும் அர்ப்பணமும் அவசியம்
3. மனம் திறந்து பாவங்களை ஏற்கும்போது, அதன்வழி இயேசு நுழைவார்
4. அன்னை மரியின் அருள்தரும் சுதந்திரமும் மகிழ்வும்
5. மத்தியக்கிழக்கு நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கு ஜோர்டன் மன்னர் ஆதரவு
6. வத்திக்கானும் இரஷ்யாவும் இணைந்து விவிலியக் கலைக்கண்காட்சி
7. இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களால் 2013-ல் 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : ஆயர்கள், தந்தையாகவும் மேய்ப்பராகவும் செயல்படுபவர்கள்
செப்.18,2014. தம்மிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள மக்கள் எவ்வளவு பெரிய பாவிகளாக இருந்தாலும் அவர்களை
மன்னித்து அவர்களுக்கு புதியதொரு தொடக்கத்தை வழங்கும்வண்ணம் அவர்களை
அன்புகூர வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்ட புதிய ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வோர் ஆயரும் ஒரு நல்ல தந்தையாகவும், ஒரு நல்ல மேய்ப்பராகவும் செயல்பட்டு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை வரவேற்பவர்களாகவும், அவர்களுக்குச் செவிமடுத்து அவர்களை வழிநடத்துபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மக்களை வழிநடத்தும் பயணத்தில் மோசேக்கு இருந்த பொறுமையுடன் செயல்படுமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, ஆயர்கள் தங்கள் சக்தி அனைத்தையும் தங்களுக்காக அல்லாமல், கடவுளின் வழிநடத்தலுக்காகப் பயன்படுத்துமாறும் அழைப்புவிடுத்தார்.
இன்றைய உலகின் இறகுகளாக இருக்கும் இளையோரிலும், வேர்களாக
இருக்கும் முதியோரிலும் சிறப்புக்கவனம் செலுத்தப்பட வேண்டியதன்
அவசியத்தையும் புதிய ஆயர்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. நாட்டைக் கட்டியெழுப்ப சாட்சிய வாழ்வும் அர்ப்பணமும் அவசியம்
செப்.18,2014.
தீவிரப்பிரிவினைகளால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ள ஒரு நாட்டை
சகோதரத்துவத்தில் மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் தலத்திருஅவைத்
தலைவர்களின் சாட்சிய வாழ்வும், உறுதியான அர்ப்பணமும் தேவைப்படுகின்றன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி
உரோம் நகர் வந்திருந்த ஐவரி கோஸ்ட் ஆயர்களை இவ்வியாழன் காலை
திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகோதரத்துவ அன்பைத் திருடாமல், ஒருவர் ஒருவரை மதித்து, ஒருவர் ஒருவருக்கு செவிசாய்த்து, ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதன் மூலமே எதையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.
அரசியல் பிரிவினைகளில் ஈடுபடாமலும், பொதுநலனை விட்டுக்கொடுக்காமலும் தேசிய ஒப்புரவுக்காக செயலாற்றவேண்டிய ஆயர்களின் கடமையை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கினார்.
குருத்துவப் பயிற்சிகளின் முக்கியத்துவம் குடும்பங்களுக்கான ஆதரவு, ஏழைகளுடன் ஒருமைப்பாடு போன்றவைகளையும் ஐவரி கோஸ்ட் ஆயர்களுக்கான தன் உரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மனம் திறந்து பாவங்களை ஏற்கும்போது, அதன்வழி இயேசு நுழைவார்
செப்.18,2014. நம் பாவங்களை நாம் ஏற்றுக்கொள்வதே, இயேசுவின் கனிவான வருடலுக்கான கதவுகளைத் திறக்கின்றது என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான்
தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலத்தில் இவ்வியாழனன்று காலை
நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், பெரும்பாவியாகிய
பெண் ஒருவர் இயேசுவின் பாதத்தை நறுமண தைலத்தால் கழுவிய நிகழ்வை
எடுத்துரைத்த அந்நாளின் வாசகம் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார்.
தான் பாவி என்பதை உணர்ந்து தன் பாவங்களுக்காக கண்ணீர் சிந்திய அந்தப் பெண்ணைப் பார்த்து இயேசு, 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ அமைதியாகச் செல். உன் விசுவாசம் உன்னை காப்பாற்றியுள்ளது' என்று கூறியதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பாவி என்பதை ஏற்றுக்கொள்ளும்போதே மீட்பு நம்மை வந்தடைகிறது என்றார்.
நாம் நம் பாவங்களை உணர்ந்து அதனை அறிக்கையிட நம் இதயத்தைத் திறக்கும்போதுதான் இயேசுவை அங்கு சந்திக்க முடியும், மற்றும் அந்தத் திறந்த கதவு வழியாக அவர் நுழையவும் முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அன்னை மரியின் அருள்தரும் சுதந்திரமும் மகிழ்வும்
செப்.18,2014. ‘கடவுளின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் நடைபோடும்போது, மகிழ்வுடன் இருப்பதற்கான அருளை அன்னைமரியே எமக்கு வழங்கியருளும்’என இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் குறுஞ்செய்திகளை டுவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுவருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. மத்தியக்கிழக்கு நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கு ஜோர்டன் மன்னர் ஆதரவு
செப்.18,2014. மத்தியக்கிழக்குப் பகுதியில் ISIL தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் வேளையில், கிறிஸ்தவர்களின் முழுபாதுகாப்புக்கு உறுதிவழங்குவதாக அறிவித்துள்ளார் ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா.
மன்னர் அப்துல்லாவின் இந்த அறிவிப்பு குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட யெருசலேமின் இலத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal, ஜோர்டான் நாடு எப்போதும் எல்லோருக்கும் தஞ்சம் வழங்கும் ஒரு நாடாகவே இருந்து வந்துள்ளது என்றார்.
அரபு கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும், மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் இருப்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளார் மன்னர் இரண்டாம் அப்துல்லா.
ஆதாரம் : CWN
6. வத்திக்கானும் இரஷ்யாவும் இணைந்து விவிலியக் கலைக்கண்காட்சி
செப்.18,2014.
2016ம் ஆண்டில் வத்திக்கானுடன் இணைந்து இரஷ்யா விவிலியக்
கலைப்படைப்புக்களுடன் கண்காட்சி ஒன்றை நடத்தவுள்ளதாக இரஷ்ய அரசுத் தலைவரின்
சிறப்புப் பிரதிநிதி அறிவித்தார்.
விவிலியம் தொடர்புடைய கலைப்படைப்புகளின் கண்காட்சியை இவ்விரு நாடுகளும் 2016ல் இணைந்து நடத்தும் என்றார் இரஷ்ய அதிகாரி Mikhail Shvydkoy.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரஷ்ய அதிபர் Vladimir Putin திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இத்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : CWN
7. இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களால் 2013-ல் 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு
செப்.18,2014. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து, தங்கள் நாட்டிலேயே பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த
ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் சுமார் 20 இலட்சம்
மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின்
ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலக
அளவில் இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளால் மக்கள் இடம்பெயர்ந்த நிலை குறித்து
ஐ.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது குறித்துத்
தெரிவித்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை அடுத்து, இந்தியாவில்தான் அதிக அளவிலான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் நோக்கும்போது, கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, நிலநடுக்கம்
உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் 2 கோடியே 20 லட்சம் பேர்
இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment