Sunday 21 September 2014

செய்திகள் - 20.09.14

செய்திகள் - 20.09.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, லாட்வியா அரசுத்தலைவர் சந்திப்பு

2. பிறரின் பாதங்களைக் கழுவத் தெரிந்த ஆயர்கள் திருஅவைக்குத் தேவை

3.  மியான்மாரின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கர்தினால் கிரேசியஸ்

4. செபம் இல்லாத நற்செய்தி அறிவிப்பு மனிதரின் இதயத்தைத் தொடாது, திருத்தந்தை

5. திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணம்

6. திருமண நடைமுறைகளை ஆய்வுசெய்வதற்கென புதிய வத்திக்கான் குழு

7. அமைதியான உலகத்தைக் கற்பனை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது

8. மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, லாட்வியா அரசுத்தலைவர் சந்திப்பு

செப்.20,2014. லாட்வியா குடியரசு, மரியின் பூமி என அறிவிக்கப்பட்டதன் 800ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்புவிடுத்தார் லாட்விய அரசுத்தலைவர் Andris Bērziņš.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்துப் பேசிய லாட்விய அரசுத்தலைவர் Andris Bērziņš அவர்கள், 2015ம் ஆண்டில் இடம்பெறும்  இக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்குத் திருத்தந்தைக்கு அழைப்புவிடுத்தார்.
திருத்தந்தை 3ம் இன்னோசென்ட் அவர்கள், 1215ம் ஆண்டில் லாட்வியாவை அன்னைமரிக்கு அர்ப்பணித்து அந்நாட்டை மரியின் பூமி என அறிவித்தார். இந்நிகழ்வின் 800ம் ஆண்டு 2015ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் லாட்வியா அரசுத்தலைவர் Bērziņš.
2015ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று ஐரோப்பிய சமுதாய அவையின் தலைமைப் பொறுப்பை லாட்வியா ஏற்கவுள்ளது உட்பட சில பன்னாட்டு விவகாரங்கள், லாட்வியாவுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், லாட்வியா நாட்டுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் நற்பணிகள் போன்றவை இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
உக்ரேய்னில் இடம்பெறும் பிரச்சனைக்கு, சட்டத்தின் அடிப்படையில் உரையாடல் மூலம் அரசியல் தீர்வு காணப்படும்படியாக இச்சந்திப்புக்களில் வலியுறுத்தப்பட்டது என்று அப்பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையுடன் சேர்ந்து மதிய உணவருந்தினார் அர்ஜென்டீனா அரசுத்தலைவர் Cristina Fernandez de Kirchner. இவர் திருத்தந்தையை சந்திப்பது இது நான்காவது தடவையாகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பிறரின் பாதங்களைக் கழுவத் தெரிந்த ஆயர்கள் திருஅவைக்குத் தேவை

செப்.20,2014. அண்மைக் காலங்களில் ஆயர்களாக நியமனம் செய்யப்பட்ட 120 ஆயர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறர்முன் முழந்தாளிட்டு அவர்களின் காலடிகளை எவ்வாறு கழுவுவது என்பதைத் தெரிந்துவைத்துள்ள ஊழியர்-ஆயர்கள் இன்றையத் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயம் நடத்திய இருவாரப் பயிற்சியில் இந்த ஆயர்கள் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, பல்வேறு காரணங்களால் இப்பயிற்சியில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்ற புதிய ஆயர்களுக்குத் தனது சகோதரத்துவ வாழ்த்தையும் ஆசீரையும் தெரிவிப்பதாகக் கூறினார்.
சீனாவில் அண்மை ஆண்டுகளில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்கள் இன்று உங்களோடு இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன், ஆனால் அந்த நாள் வெகுதொலைவில் இருக்காது என எனது இதயத்தின் ஆழத்தில் ஆவல்கொள்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.
சீன ஆயர்களுடன் தனது ஒருமைப்பாட்டை மட்டுமல்லாமல், உலகளாவிய ஆயர்கள் பேரவைகளின் ஒருமைப்பாட்டையும் தெரிவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, சிலவேளைகளில் அவர்கள் தனிமையை உணரலாம், ஆனால் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் அவர்களைச் சார்ந்த விசுவாசிகளுக்கும், குடிமக்களுக்கும், அகிலத் திருஅவைக்கும் நற்கனியைக் கொடுக்கும் என்ற உறுதியையும் வழங்கினார்.
குடும்பம் குறித்த உலக ஆயர் பேரவை தொடங்கவிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்காகச் செபிக்குமாறும், நற்செய்திப்பணியின் அடித்தளமாக இருக்கும் குடும்பங்களுக்கு ஆயர்கள் தங்களின் மேய்ப்புப்பணிகளில் முக்கியத்துவம் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
உலகுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு ஆயர்கள் ஆற்றும் பணிக்கு இயேசுவின் திருவார்த்தையை அடித்தளமாக அமைக்குமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்திய ஆயர்கள் 15 பேர் உட்பட பல வளரும் நாடுகளின் 120 ஆயர்களுக்குத் திருத்தந்தை கூறவிரும்பிய கருத்துக்கள் அடங்கிய உரை ஒவ்வோர் ஆயரிடம் கொடுக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3.  மியான்மாரின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கர்தினால் கிரேசியஸ்

செப்.20,2014. மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கென, தனது பிரதிநிதியாக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற நவம்பர் 21முதல் 23ம் தேதிவரை யாங்கூனில் நடைபெறும் நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் கர்தினால் கிரேசியஸ்.
மேலும், அன்பு இளையோரே, உங்கள் இதயம் பேசுவதற்குச் செவிசாயுங்கள், ஏனெனில் உங்கள் இதயக் கதவை கிறிஸ்து தட்டிக்கொண்டிருக்கிறார் என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. செபம் இல்லாத நற்செய்தி அறிவிப்பு மனிதரின் இதயத்தைத் தொடாது, திருத்தந்தை

செப்.20,2014. எந்தவித வழிகாட்டுதலோ, பாதுகாப்போ இன்றி உலகை வலம்வரும் வறியோர், களைத்திருப்போர் மற்றும் நம்பிக்கையிழந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தல் அதிகம் தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
காயமடைந்தவர்கள் மற்றும் புண்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ள மருத்துவமனையில் வேலைசெய்வது போன்றது திருஅவையின் பணி என்றுரைத்த திருத்தந்தை, புண்பட்ட பலருக்கு நெருக்கமாக நாம் இருக்க வேண்டுமென்று விரும்பப்படுகிறோம் என்று கூறினார்.
நற்செய்தியை மகிழ்ச்சியோடு அறிவிப்பது குறித்த மேய்ப்புப்பணி திட்டங்கள் என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை இவ்வெள்ளி மாலை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
திருஅவையின் முக்கிய பணி நற்செய்தியை அறிவிப்பதாகும், குறிப்பாக, கிறிஸ்துவும் அவரது நற்செய்தியும் அதிகமாகத் தேவைப்படும் மக்களுக்கு அறிவிப்பதாகும் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்வோம், நற்செய்தியை விதைத்து அதற்குச் சான்றுகளாகவும் வாழ்வோம் எனவும் கூறிய திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதற்கு இறைநம்பிக்கையும், செபமும், தியானமும் தேவை என்றும் கூறினார்.
இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்த இக்கருத்தரங்கில், ஆயர்கள், துறவிகள், பொதுநிலையினர் என அறுபது நாடுகளின் இரண்டாயிரத்துக்கு அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயணம்

செப்.20,2014. இஞ்ஞாயிறன்று இத்தாலிக்கு வெளியே ஐரோப்பாவுக்கான தனது முதல் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள அல்பேனியாவின் அன்னை தெரேசா பன்னாட்டு விமானநிலையத்தை இஞ்ஞாயிறு காலை 9 மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு அரசுத்தலைவரை முதலில் சந்திப்பார்.
பின்னர், தலைநகர் திரானா அன்னை தெரேசா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார், மாலையில் அந்நாட்டின் பல்சமய மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவார். அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும் பொதுநிலையினருடன் மாலை திருப்புகழ்மாலை செபிப்பார், பின்னர் பெத்தானியா இல்லத்தில் சிறாரைச் சந்திப்பார்.
அல்பேனியாவுக்கு மேற்கொள்ளும் ஒருநாள் திருப்பயணத்தில் இந்நிகழ்வுகளை நிறைவுசெய்து இரவு 9.30 மணிக்கு உரோம் வந்துசேர்வார் திருத்தந்தை.
உரோமுக்கு 610 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அல்பேனியாவுக்கு, 1993ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் திருப்பயணம் மேற்கொண்டார். அதன்பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று அந்நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார்.  
அருளாளர் அன்னை தெரேசா பிறந்த அல்பேனியா, 1967ல் தன்னை நாத்திக நாடாக அறிவித்தது. உலகில் முதல் நாத்திக நாடாக அறிவிக்கப்பட்ட அல்பேனியாவில் 1944ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கம்யூனிச ஆட்சி நடந்தது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டில் சமய சுதந்திரம் இருந்து வருகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருமண நடைமுறைகளை ஆய்வுசெய்வதற்கென புதிய வத்திக்கான் குழு

செப்.20,2014. திருமண அருளடையாளம் சார்ந்த கத்தோலிக்கத் திருஅவையின் நடைமுறைகள் மற்றும் சட்டச் சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்வதற்கென புதிய வத்திக்கான் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமணத்தின் முறிவுபடாதன்மை, தம்பதியருக்குத் திருமண விலக்கு அளிக்கும் நடைமுறைகள் ஆகியவை குறித்த கத்தோலிக்கத் திருஅவையின் போதனைகள் உட்பட திருமணம் சார்ந்த பல விவகாரங்களை இப்புதிய குழு ஆய்வு செய்யும் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி இச்சனிக்கிழமையன்று கூறினார். 
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியன்று உருவாக்கியுள்ள இக்குழுவில், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் இறையியலாளர்கள் உள்ளனர்.
ரோத்தா ரொமனா என்ற திருஅவையின் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சார்ந்த பேரருள்திரு லியோ சேவியர் ஆரோக்யராஜ் அவர்களும் இக்குழுவில் ஒருவராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. அமைதியான உலகத்தைக் கற்பனை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது

செப்.20,2014. பயங்கரவாதத்தின் நெருப்பை அணைத்து மோதல்களின் ஆணிவேர்களைப் பிடுங்கி எறிவதற்காக நாம் உழைக்க வேண்டுமென ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்  அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 21, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக அமைதி நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், போரிடும் அனைவரும் ஆயுதங்களைக் களைவதன்மூலம் அனைவரும் அமைதியின் காற்றைச் சுவாசிக்க முடியும் என்று சொல்லி ஆயுதக் களைவுக்கு அழைப்புவிடுத்துள்ளார் பான் கி மூன்.
உலகினர் அனைவரும் இஞ்ஞாயிறு நண்பகலில் ஒரு நிமிடம் மௌனம் காத்து, மனிதக் குடும்பத்துக்கு அமைதி எவ்வளவு முக்கியம் என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறும் கேட்டுள்ளார் பான் கி மூன்.
அமைதியில் வாழ்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமை என்ற தலைப்பில் 2014ம் ஆண்டின் அனைத்துலக அமைதி நாள் சிறப்பிக்கப்படுகிறது. அமைதியில் வாழ்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமை குறித்து ஐ.நா.பொது அவை அறிக்கை வெளியிட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவு இந்த 2014ம் ஆண்டில் இடம்பெறுவதையொட்டி இத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. தலைமையகத் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அமைதி மணி, இவ்வுலக நாளன்று ஆண்டுதோறும் அடிக்கப்படுகிறது. இம்மணியை ஜப்பான் நாடு ஐ.நா.வுக்குப் பரிசாக வழங்கியது.
அனைத்துலக அமைதி நாள் 1981ம் ஆண்டில் ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : UN

8. மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப் பாதுகாப்பு அவசியம், ஐ.நா.
செப்.20,2014. அவதூறு, பாகுபாடு, புறக்கணிப்பு, பலிகடாவாக ஆக்கப்படுதல் போன்றவற்றால் மனத்தளர்ச்சியடைந்து மூளைப் பாதிக்கப்பட்டுள்ள முதியோருக்கு பாதுகாப்புகள் அதிகம் தேவை என்று ஐ.நா. வல்லுனர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 21, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு கூறிய ஐ.நா. வல்லுனர் Rosa Kornfeld-Matte அவர்கள், மனத்தளர்ச்சியால் மூளை பாதிக்கப்பட்ட வயதானவர்கள் மற்றும் அவர்களுக்குப் பணிசெய்வோர் எழுப்பும் குரல்கள் உலகில் கேட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அல்சைமர் மற்றும் இந்நோய் தொடர்புடைய பிரச்சனைகளால் துன்புறும் முதியோர், அனைத்துச் சூழல்களிலும் தங்களின் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உரிமை கொண்டுள்ளனர் என்றும் Kornfeld-Matte கூறியுள்ளார்.
தற்போது உலகில் 3 கோடியே 56 இலட்சம் பேர் மனத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை 2030ம் ஆண்டில் இரு மடங்காகவும், 2050ம் ஆண்டில் மூன்று மடங்காகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளது.
அனைத்துலக அல்சைமர் தினம், 1994ம் ஆண்டில், 84 அல்சைமர் நோய்ப் பராமரிப்புக் கழகங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பினால்  தொடங்கப்பட்டது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...