Monday, 15 September 2014

செய்திகள் - 13.09.14

செய்திகள் - 13.09.14
------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை பிரான்சிஸ் : போர், அழிவைக் கொணரும் ஓர் அறிவற்ற செயல்

2. Fogliano ஆஸ்ட்ரிய-ஹங்கேரி இராணுவக் கல்லறையில் திருத்தந்தை செபம்

3. இருபது தம்பதியருக்கு திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்

4. திருத்தந்தை துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது, துருக்கி ஆயர் பேரவைத் தலைவர்

5. திருத்தந்தையின் திருப்பயணத்தில் அரசியல் கூடாது : கொழும்பு பேராயர்

6. புனிதபூமிக்குத் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், எருசலேம் ஆயர்கள்

7. அரபு உலகைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம், முதுபெரும் தந்தை லகாம்

8. தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு ஆதரவு தேவை, ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை பிரான்சிஸ் : போர், அழிவைக் கொணரும் ஓர் அறிவற்ற செயல்

செப்.13,2014. போர், பைத்தியக்காரத்தனமான மற்றும் ஓர் அறிவற்ற செயல், அழிவைக் கொண்டுவருவது மட்டுமே இதன் ஒரே திட்டம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
முதல் உலகப்போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான படைவீரர்களின் இத்தாலிய நினைவிடமான 'Redipuglia'வுக்கு இச்சனிக்கிழமை காலை சென்று திருப்பலி நிகழ்த்தி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி Redipuglia இராணுவக் கல்லறை வளாகத்தில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராசை, சகிப்பற்றதன்மை, அதிகார மோகம் ஆகியவையே போரை நடத்துவதற்குக் காரணங்கள் என்றும், இவை பல சமயங்களில் கருத்துருவாக்கத்தால் நியாயப்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.
உலகில் இரண்டாவது முறையாகவும் ஒரு போர் நடந்து தோல்வியடைந்துள்ள நிலையில், இன்று உலகில் துண்டு துண்டாக நடக்கும் போர்கள், குற்றங்கள், படுகொலைகள், அழிவுகள் போன்றவற்றை நோக்கும்பொழுது, ஒருவேளை ஒருவர் தற்போது மூன்றாவது போர் பற்றியும் பேசலாம் என்றும் கூறினார் திருத்தந்தை.
போர் பற்றி எனக்கென்ன கவலை, நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா? என்று மனித சமுதாயம் சொல்லலாம், ஆனால் இது இயேசு நற்செய்தியில் நம்மிடம் கேட்பதற்கு முற்றிலும் முரணானது என்றும் கூறிய திருத்தந்தை, இவ்விடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் பல கனவுகளோடும் பல திட்டங்களோடும் இருந்தவர்கள், ஆனால் அவர்களின் வாழ்வு விரைவில் முடிக்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு போரிலும் இறந்தவர்களை இவ்விடத்தில் நாம் நினைவுகூருகிறோம்,  இக்கால உலகிலும் பலர் போர்களில் பலியாகிறார்கள், இதற்குப் பின்னணியில் புவியியல்-அரசியல் யுக்திகளும், பணம் மற்றும் அதிகாரத்தின்மீதிருக்கும் மோகமும் காரணங்களாக உள்ளன, ஆயுதங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்வது மிக முக்கியமாகத் தென்படுகின்றன என்ற கவலையையும் தெரிவித்தார் திருத்தந்தை          பிரான்சிஸ்.
எனக்கென்ன கவலை என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டுமென, ஒரு மகனின், ஒரு சகோதரரின், ஒரு தந்தையின் இதயத்துடன் உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன், மனித சமுதாயம் கண்ணீர் சிந்தவேண்டிய நேரம் இதுவே என்று, Redipugliaவில் தனது மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Fogliano ஆஸ்ட்ரிய-ஹங்கேரி இராணுவக் கல்லறையில் திருத்தந்தை செபம்

செப்.13,2014. வடகிழக்கு இத்தாலியின் Redipuglia இராணுவக் கல்லறைக்கு அருகிலுள்ள ஆஸ்ட்ரிய-ஹங்கேரி Fogliano இராணுவக் கல்லறையிலும் செபம் செய்து மலர்வளையம் ஒன்றையும் வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்விடத்தில் ஏறக்குறைய 14 ஆயிரம் ஆஸ்ட்ரிய-ஹங்கேரியப் படைவீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இலட்சத்தின் நினைவுச்சின்னம்எனவும் அழைக்கப்படும் 'Redipuglia' இத்தாலிய இராணுவக் கல்லறையில், 39,857 இத்தாலியப் படைவீரர்கள் மற்றும் 69,330 அடையாளம் தெரியாத படைவீரர்களும் புதைக்கப்பட்டுள்ளனர். 
சுலோவேனியா நாட்டு எல்லையில், இத்தாலியின் Gorizia மாவட்டத்திலுள்ள 'Redipuglia', முதல் உலகப் போரின்போது முக்கிய போர்க்களமாக அமைந்திருந்தது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தந்தைவழி தாத்தா Giovanni Carlo Bergoglio அவர்கள், முதல் உலகப் போரின்போது 'Redipuglia' போர்க்களத்தில் போரிட்டதன் நினைவாக, சான்றிதழ் ஒன்றும் இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையிடம் வழங்கப்பட்டது. Giovanni Carlo Bergoglio அவர்கள், அர்ஜென்டீனா நாட்டுக்குக் குடிபெயருவதற்கு முன்னர் இப்போர்க்களத்தில் போரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்ட்ரிய-ஹங்கேரிப் பேரரசின் வாரிசு இளவரசர் Franz Ferdinand அவர்கள், 1914ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி Sarajevoவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து பெரிய போர் எனப்படும் முதல் உலகப்போர் ஆரம்பமானது.
இச்சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு Redipuglia சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பயணத்தை முடித்து பகல் 12.50க்கு உரோம் திரும்பினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இருபது தம்பதியருக்கு திருமணம் எனும் அருளடையாளத்தை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்.13,2014. உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இருபது தம்பதியருக்கு, திருமணம் எனும் அருளடையாளத்தை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். 
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருவிழாவாகிய இஞ்ஞாயிறு காலையில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில், உரோம் மறைமாவட்ட கர்தினால், இத்தம்பதியரின் பங்குத் தந்தையர்கள், உறவினர்கள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திருமணம் செய்து வைக்கப்படுவது குறித்துப் பேசிய இத்தம்பதியர், திருத்தந்தையின் கரங்களால் தாங்கள் இந்த அருளடையாளத்தைப் பெற வேண்டுமென்ற கனவு நனவாகப் போகிறது என்று தெரிவித்தனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கடந்த பிப்ரவரி 14ம் தேதி வலென்டைன் நாளையொட்டி சந்தித்ததிலிருந்து திருத்தந்தை தங்கள் வாழ்வை அதிகம் பாதித்துள்ளார் எனவும் இவர்கள் கூறினர்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் பாவங்கள் இருக்கின்றபோதிலும், ஆண்டவரே, நான் உம்மை அன்புகூருகிறேன் என்பது உமக்குத் தெரியுமே என்று புனித பேதுருவுடன் சேர்ந்து நம்மால் சொல்ல முடியும் என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது, துருக்கி ஆயர் பேரவைத் தலைவர்

செப்.13,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ  அவர்களைச் சந்திக்கவிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார் துருக்கி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ruggero Franceschini.
புனித அந்திரேயாவின் விழாவான நவம்பர் 30ம் தேதியன்று திருத்தந்தையின் இத்திருப்பயணம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய Smirne பேராயர் Franceschini அவர்கள், திருத்தந்தையின் இத்திருப்பயணம் துருக்கி தலத்திருஅவையின் வாழ்வுக்கு மாபெரும் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
துருக்கி நாட்டில் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்ந்தாலும் பலர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என்றும், SIR செய்தி நிறுவனத்திடம் கூறினார் பேராயர் Franceschini.
துருக்கி நாட்டு அரசுத்தலைவர் Recep Tayyp Erdogan அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற நவம்பரில் துருக்கி செல்கிறார் என, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வெள்ளியன்று அறிவித்தார்.
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான புனித அந்திரேயா, ஆர்த்தடாக்ஸ் உலகின் பாதுகாவலரும், கீழை வழிபாட்டுமுறையை உருவாக்கியவருமாவார். இப்புனிதரின் விழா நவம்பர் 30. இந்த விழாநாளில் திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிரதிநிதி குழு ஆண்டுதோறும் இஸ்தான்புல் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
2006ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் துருக்கிக்குத்  திருப்பயணம் மேற்கொண்டார்.

ஆதாரம் : SIR                             

5. திருத்தந்தையின் திருப்பயணத்தில் அரசியல் கூடாது : கொழும்பு பேராயர்

செப்.13,2014. வருகிற சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தில் அரசியல் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்து இவ்வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்தினால் ரஞ்சித் அவர்கள், இத்திருப்பயணத்தின்போது தேர்தல் பிரச்சாரம் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு அரசைக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.
இத்திருப்பயணத்தின்போது திருத்தந்தை அவர்கள், இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்திப்பார் என்றும், திருத்தந்தை மன்னார் மாவட்டத்துக்குச் செல்வார் என்றும் கர்தினால் ரஞ்சித் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், இத்திருப்பயணத்தின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குண்டு துளைக்காத காரில் செல்ல விரும்பவில்லை எனவும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தையின் இலங்கை திருப்பயணத்துக்கான இலட்சனை ஒன்றும் திருஅவையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசுத்தலைவர் ராஜபக்ஷ, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தலை நடத்துவதற்குத் தயாரித்து வருகிறார் என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AFP

6. புனிதபூமிக்குத் திருப்பயணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், எருசலேம் ஆயர்கள்

செப்.13,2014. புனிதபூமிக்குச் செல்லும் திருப்பயணிகள், பாலஸ்தீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதியின் தூதுவர்களாக இருப்பதால், அப்பகுதிக்கு விசுவாசிகள் திருப்பயணங்களை மேற்கொள்வதற்கு தல ஆயர் பேரவைகள் ஊக்கப்படுத்துமாறு, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் திருப்பயண ஆணைக்குழு கேட்டுள்ளது.
காசா முனைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதல்களால் இடம்பெறும் மரணங்கள் மற்றும் அழிவுகளைப் பார்த்துத் தயங்காமலும், மாற்றுச் சிந்தனைக்கு இடம் கொடுக்காமலும் புனித பூமிக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.
எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் அலுவலகம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, புனிதபூமிக்கு மேற்கொள்ளப்படும் திருப்பயணங்கள் அப்பகுதி கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அப்பகுதியில் எப்போதும் நடந்துவரும் பாலஸ்தீன-இஸ்ரேல் சண்டை முடிவுக்குவர உதவுவதாய் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
புனிதபூமிக்குச் செல்லும் திருப்பயணிகளை, அப்பகுதியின் கிறிஸ்தவர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் ஆகிய அனைவருமே நன்றாக வரவேற்பதாகவும், இத்திருப்பயணிகள்,  புனிதபூமிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உதவுகின்றார்கள் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : Fides                          

7. அரபு உலகைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒற்றுமை அவசியம், முதுபெரும் தந்தை லகாம்

செப்.13,2014. மத்திய கிழக்கில் வாழும் அரபுக் கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரை அன்புகூருவதற்கும், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்வதற்கும் அழைப்புப் பெற்றுள்ளனர், இதன்மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாப்பார்கள் என்று மெல்கிதே வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கிரகரி லகாம் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் இப்படி நடப்பதன் மூலமே மத்திய கிழக்குப் பகுதியில் காணப்படும் வேறுபாடுகள் மேற்கொள்ளப்படும் மற்றும் அரபு மக்களிடையே ஒற்றுமை நிலவும் என்று முதுபெரும் தந்தை 3ம் லகாம் அவர்கள் வாஷிங்டனில் இவ்வாரத்தில் நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்புக் கருத்தரங்கில் கூறினார்.
அரபு சமுதாயம் நல்லதோர் உலகை அமைப்பதற்கு நம் அனைவரின் ஒற்றுமையும், நாமும் தேவைப்படுகின்றோம் என்றும் முதுபெரும் தந்தை லகாம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

8. தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு ஆதரவு தேவை, ஐ.நா.

செப்.13,2014. வளரும் நாடுகளுக்கிடையேயும், அந்நாடுகளிலும் நிலவும் ஒத்துழைப்பு, சீரான வளர்ச்சியும் சமத்துவமும் ஏற்பட பாதை அமைக்கும் என, ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
அனைத்துலக தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பு நாள், செப்டம்பர் 12 இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்வாறு கூறினார் பான் கி மூன்.
மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்கில் அண்மைக் காலத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், உலகின் தெற்குப் பகுதியில் இந்த முன்னேற்றம் சமமாக இல்லை எனவும், இந்நாளுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
கடும் வறுமை, மட்டுமீறிய சமத்துவமின்மை, ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சனைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இன்னும் காணப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர்.
வளரும் நாடுகளுக்கு மத்தியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் திட்டம் 1978ல் Buenos Airesல் கொண்டுவரப்பட்டதை நினைவுகூரும் விதமாக அனைத்துலக தெற்குக்கும் தெற்குக்கும் இடையே ஒத்துழைப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment