1. வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50ம் ஆண்டு நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி
2. ஒவ்வொரு துறவிக்கும் திருத்தந்தையின் சிறப்புச் செய்தி
3. மெக்சிகோவில் எண்ணெய் நிறுவன வெடி விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தையின் செய்தி
4. கல்தேயரீதியின் புதிய முதுபெரும் தலைவர் பேராயர் லூயிஸ் சாக்கோ
5. பெங்களூரு கருத்தரங்கில் கர்தினால் Grocholewski
6. திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் : பிறரன்பை இன்னும் ஆழமாக வாழ அழைப்பு
7. உலகில் புற்றுநோய் எந்த இடத்திலும் மரணதண்டனையாக அமைந்துவிடக் கூடாது, WHO வலியுறுத்தல்
8. உலகின் பொதுவான இலக்குகளை அடைவதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. வேளாங்கண்ணி திருத்தலத்தின் 50ம் ஆண்டு நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி
பிப்.02,2013.
தமிழகத்தின் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலம் பசிலிக்காவாக
உயர்த்தப்பட்டதன் 50ம் ஆண்டு மற்றும் இந்திய இலத்தீன்ரீதி ஆயர் பேரவை
உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்குத் தனது
பிரதிநிதியாக, கர்தினால் Fernando Filoni அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இம்மாதம் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள விழா நிகழ்வுகளில், திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni, திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான், வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தை, 1962ம் ஆண்டில் மைனர் பசிலிக்கா என்ற நிலைக்கு உயர்த்தினார்.
மேலும், இம்மாதம் 11ம் தேதி ஜெர்மனியின் Altöttingல் சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தின நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீட நலவாழ்வுத் துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கலந்து கொள்ளவுள்ளார்.
2. ஒவ்வொரு துறவிக்கும் திருத்தந்தையின் சிறப்புச் செய்தி
பிப்.02,2013. ஏழ்மை, கன்னிமை, பணிவு ஆகியவற்றில் ஒவ்வொரு துறவியும் கிறிஸ்துவை எப்பொழுதும் பிரமாணிக்கமாகப் பின்செல்வாராக என, தனது டிவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அனைத்துல அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமான பிப்ரவரி 2, இச்சனிக்கிழமையன்று இவ்வாறு தனது டிவிட்டரில் எழுதியுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு துறவிக்கும் இன்று தான் ஒரு சிறப்புச் செய்தி வைத்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.
இன்று உலகில் 9,45,000க்கு மேற்பட்ட இருபால் துறவியிர் பல்வேறு மறைப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அனைத்துலக துறவு சபை அதிபர்கள் நிறுவனம், வருகிற மே மாதத்தில்,
உரோமையில் நடத்தவுள்ள மாநாட்டில் ஏறக்குறைய 800 பெண் துறவு சபைகளின்
அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், தலைமைத்துவம், கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
3. மெக்சிகோவில் எண்ணெய் நிறுவன வெடி விபத்தில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தையின் செய்தி
பிப்.02,2013. மெக்சிகோ நாட்டின் எண்ணெய்
நிறுவனத் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும்
இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே.
மெக்சிகோ நாட்டின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Jose Francisco Robles Ortega, அப்பேரவையின் பொதுச் செயலர் ஆயர் Eugenio Lira Rugarcia ஆகியோருக்குத் திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பியுள்ளார் கர்தினால் பெர்த்தோனே.
இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா நிறைசாந்தி அடைய, திருத்தந்தை செபிப்பதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கும் நாட்டினருக்கும் திருத்தந்தை, தனது செபம் நிறைந்த ஆறுதலைத் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்விபத்து குறித்து மெக்சிகோ நாட்டு ஆயர்களும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
54 அடுக்குகள் கொண்ட, மெக்சிகோவின் Pemex எண்ணெய் நிறுவனத் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாயினர். இந்த Pemex நிறுவனம், உலக அளவில் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு, 25 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மின்சார உபகரண அறையில், வாயு உற்பத்தியாகி, இவ்வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
4. கல்தேயரீதியின் புதிய முதுபெரும் தலைவர் பேராயர் லூயிஸ் சாக்கோ
பிப்.02,2013. உண்மை, ஒற்றுமை, புதுப்பித்தல் ஆகிய மூன்று வார்த்தைகளின் அடிப்படையில் தனது பணியைத் தொடரவிருப்பதாக, கல்தேயரீதியின் பாபிலோனின் புதிய முதுபெரும் தலைவர் பேராயர் லூயிஸ் சாக்கோ நிருபர்களிடம் கூறினார்.
கல்தேயரீதியின் முதுபெரும் தலைவராகப் பணியாற்றிய Emmanuel Delly III வயது காரணமாக, பணி ஓய்வு பெற்றதையடுத்து இத்திங்களன்று உரோமையில் தொடங்கிய கல்தேயரீதி ஆயர்கள் பேரவையில் ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ, புதிய முதுபெரும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈராக் நாட்டுக்கும், ஈராக்
திருஅவைக்கும் தங்களால் இயன்றதனைத்தையும் செய்யவிருப்பதாகவும்
ஊடகங்களுக்கு அளித்து பேட்டியில் தெரிவித்தார் முதுபெரும் தலைவர் லூயிஸ்
சாக்கோ.
உறுதியான நேர்மையும் திறந்த மனமுமே ஒன்றிணைந்த நல்லிணக்க வாழ்வுக்கு மிகவும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
5. பெங்களூரு கருத்தரங்கில் கர்தினால் Grocholewski
பிப்.02,2013. காலங்களின் அடையாளங்களைக் கண்டுகொள்வதற்குத் தூய ஆவியின் பள்ளியில் பயிலுமாறு, பெங்களூரு
தர்மாரம் பாப்பிறைக் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் கலந்து
கொள்வோரைக் கேட்டுக் கொண்டார் திருப்பீட கல்வி பேராயத்தின் தலைவர்
கர்தினால் Zenon Grocholewski.
“இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50 ஆண்டுகள்” என்ற தலைப்பில் பெங்களூருவில் நடைபெற்றுவரும் 4 நாள் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Grocholewski,
காலங்களின் அடையாளங்களைக் கண்டுணர்ந்து அவற்றின்படி செயல்பட்டால்மட்டும்
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் போதனைகளைப் புரிந்து கொள்ள முடியாது
என்று கூறினார்.
கிறிஸ்துவின் சீடர்கள், இவ்வுலகின் அடையாளங்களில் கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அடையாளங்களைக் காண வேண்டுமெனவும் கூறினார் கர்தினால் Grocholewski.
இவ்வியாழனன்று தொடங்கிய இம்மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.
6. திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் : பிறரன்பை இன்னும் ஆழமாக வாழ அழைப்பு
பிப்.02,2013. விசுவாசமின்றி பிறரன்பு இல்லை, பிறரன்பு இன்றி விசுவாசம் இல்லை என்பதால், இந்த நம்பிக்கை ஆண்டில், இவையிரண்டுக்கும் இடையே உள்ள உறவை நாம் இன்னும் மிக ஆழமாக வாழ வேண்டுமென இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கேட்டுள்ளார்.
சனவரி 27ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகத் தொழுநோயாளர் தினம், இம்மாதம் 11ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக நோயாளர் தினம், இம்மாதம்
13ம் தேதியன்று தொடங்கும் தவக்காலம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள
திருப்பீட பத்திரிகை அலுவலக இயக்குனர் அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு
கேட்டுள்ளார்.
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா, புனித தமியான், புனித
வின்சென்ட் தெ பவுல் உட்பட பல புனிதர்கள் இறையன்பில் நம்பிக்கை வைத்து
பிறரன்பை வாழ்ந்த விதம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை ஆண்டு வருகிற நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.
7. உலகில் புற்றுநோய் எந்த இடத்திலும் மரணதண்டனையாக அமைந்துவிடக் கூடாது, WHO வலியுறுத்தல்
ப்.02,2013. புற்றுநோய்களில் பலவகைகளைக் குணப்படுத்தவும், அவற்றைத் தடுத்து நிறுத்தவும் வழிகள் இருக்கும்வேளை, புற்றுநோய், உலகில் எந்த இடத்திலும் மரணதண்டனையாக அமைந்துவிடக்கூடாது என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 4ம் தேதியன்று அனைத்துலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ள, WHO நிறுவனத்தின் தொற்றாத நோய்கள் மற்றும் மனநலப் பிரிவின் உதவி இயக்குனர் Oleg Chestnov, புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான நீண்டகாலச் சிகிச்சை வழங்கவும், உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் திணறுகின்றன என்று கூறினார்.
தொற்றாத நோய்கள் குறித்த நாடுகளின் தேசியத் திட்டங்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுவத்துவதற்கான நாடுகளின் திறமைகள் குறித்து WHO நிறுவனம் 185 நாடுகளில் நடத்திய ஆய்வில், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுக்குச் சிகிச்சை வழங்குவதற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது தெரிய வந்துள்ளதாக Chestnov கூறினார்.
உலகில் இடம்பெறும் இறப்புக்களுக்கு முக்கிய காரணம் புற்றுநோய் எனவும், 2008ம் ஆண்டில் இந்நோயால் 76 இலட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
8. உலகின் பொதுவான இலக்குகளை அடைவதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்குமாறு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு
பிப்.02,2013. அமைதி, வளமை, உடல்-உள்ள
நலவாழ்வு ஆகிய பொதுவான இலக்குகளை உலகினர் அடைவதற்கு அனைத்து மதத்தினரும்
ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக பல்சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்டார் பான் கி மூன்.
குழப்பங்கள் நிறைந்த இன்றைய உலகில், அமைதி, வளமை, உடல்-உள்ள நலவாழ்வு ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான ஐ.நா.வின் முயற்சிக்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உதவினால், இம்முயற்சி இலகுவாகும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து மதத்தினர் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், அனைத்துலக பல்சமய நல்லிணக்க வாரத்தை 2010ம் ஆண்டில் ஏற்படுத்தியது ஐ.நா.பொது அவை.
உலகின் அனைத்து ஆலயங்கள், மசூதிகள், தொழுகைக்கூடங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களில் பல்சமய நல்லிணக்கம் மற்றும் நன்மனச் செய்திகள், பிப்ரவ்ரி முதல் வாரத்தில் பரப்பப்பட வேண்டுமென ஐ.நா.பொது அவை அனைத்து மதத்தினரையும் ஊக்கப்படுத்துகிறது.
No comments:
Post a Comment