Friday, 1 February 2013

Catholic News in Tamil - 01/02/13

1. திருத்தந்தை : பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம்

2. துறவிகள் தினம், திருத்தந்தை திருப்பலி

3. "கிளைவிட்டுவரும் இளையோர்க் கலாச்சாரங்கள்" : திருப்பீடக் கலாச்சார அவையின் ஆண்டுக் கூட்டம்

4. சிரியாவில் மெசபத்தோமிய நகரத்தில் ஓர் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது, பேராயர் ரோஹம்

5. மாலி நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது தேசிய அளவிலான ஒப்புரவு, ஆயர்கள்

6. வத்திக்கான் நூலகத்திலுள்ள பழங்கால ஆவணங்கள் இணையதளத்தில்..

7. நேபாள மறைசாட்சிகள் பட்டியலில் முதல் அருள்பணியாளர்

8. இலங்கை தொடர்ந்து தனது குடிமக்களைத் தாக்கி வருகிறது, மனித உரிமைகள் வாட்ச் குழு 

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : பிறரன்புப் பணிகள் இல்லாத விசுவாசம் கனிகளற்ற மரத்திற்குச் சமம்

பிப்.01,2013. பிறரன்பின் மிகச் சிறந்த பணி நற்செய்தி அறிவிப்புப்பணி, ஏனெனில், ஒவ்வொன்றும் அன்பிலிருந்து தொடங்கி அன்பை நோக்கியே செல்கின்றது, கடவுளின் கைம்மாறு கருதாத அன்பு, நம் அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்பு வழியாக தெரிவிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
இம்மாதம் 13ம் தேதியன்று தொடங்கும் தவக்காலத்திற்கென இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, விசுவாசத்துக்கும் பிறரன்புக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத நெருங்கிய உறவு குறித்து விளக்குகிறது.
விசுவாசம், ஒரு கொடையாகவும், கடவுளின் அன்புக்குப் பதில்சொல்வதாகவும் இருக்கின்றது, தந்தையின் விருப்பத்துக்கு முழுவதும் பணிந்து நடந்த மனுஉரு எடுத்த மற்றும் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவைப் பற்றிய உண்மையை அறிந்துகொளளவும் விசுவாசம் உதவுகின்றது எனவும் திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.
கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பில் நாம் நுழைவதற்கும், தமது விண்ணகத் தந்தைக்கும், தமது சகோதர சகோதரிகளுக்கும் வழங்கும் வரையற்ற, தன்னையே வழங்கும் இயேசுவில் இணைவதற்கும் பிறரன்பு உதவுகின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகின்றது.
பிறரன்பில் நம்பிக்கை வைப்பது பிறரன்புக்கு நம்மை அழைக்கின்றது என்ற தலைப்பில், விசுவாசம், கடவுளின் அன்புக்கான பதில், பிறரன்பு விசுவாசத்தில் வாழ்வு, பிறரன்புக்கும், விசுவாசத்துக்கும் இடையே இருக்கும் பிரிக்க முடியாத உறவு, பிறரன்பு, விசுவாசம் ஆகியவற்றுக்கான முன்னுரிமை ஆகிய நான்கு பகுதிகளில் திருத்தந்தையின் இச்செய்தி விவரிக்கப்பட்டுள்ளது.

2. துறவிகள் தினம், திருத்தந்தை திருப்பலி

பிப்.01,2013. அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினமான இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இருபால் துறவியருடன் சேர்ந்து வத்திக்கான் பசிலிக்காவில் வழக்கமாக மாலை திருப்புகழ்மாலை செபிக்கும் திருத்தந்தை, இந்த நம்பிக்கை ஆண்டில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார்.
துறவற வாழ்வின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் உலகளாவிய தன்மையைக் குறிக்கும் விதமாக, இத்திருப்பலிக்கு முன்னர், பல துறவு சபைகளைச் சேர்ந்த 50 இருபால் துறவியர் எரியும் மெழுகுதிரிகளுடன் பவனியாகச் செல்வார்கள். 
குழந்தை இயேசு எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவான பிப்ரவரி 2ம் தேதியன்று அனைத்துலக துறவிகள் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இத்தினம் 1997ம் ஆண்டில் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்டது.

3. "கிளைவிட்டுவரும் இளையோர்க் கலாச்சாரங்கள்" : திருப்பீடக் கலாச்சார அவையின் ஆண்டுக் கூட்டம்

பிப்.01,2013. "வளர்ந்துவரும் இளையோர்க் கலாச்சாரங்கள்" என்ற தலைப்பில் திருப்பீடக் கலாச்சார அவையின் ஆண்டுக் கூட்டம் இம்மாதம் 6 முதல் 9 வரை வத்திக்கானில் நடைபெறும் என, அவ்வவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi தெரிவித்தார்.
இக்கூட்டம் குறித்து அசிசியில் நிருபர் கூட்டத்தில் விளக்கிய கர்தினால் Ravasi, காதுகளில் ஒலிவாங்கிகளை வைத்துக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக்கொண்டு சாலைகளில் நடந்து செல்லும் இளையோர்களைப் பார்க்கும்போது, அது, வயது வந்தோரால் உருவாக்கப்பட்ட தாங்கமுடியாத சமூக, அரசியல் மற்றும் சமயக் குழப்பங்களிலிருந்து அவர்கள் தங்களைத் துண்டித்துக்கொண்டுவிட்டதன் அடையாளமாக இருக்கின்றது என்று கூறினார்.
ஊழல், கொள்கை மாறாட்டம், நிலையற்றதன்மை, வேலைவாய்ப்பின்மை, ஓரங்கட்டுதல் போன்ற தங்களது செயல்களால் வயது வந்தோர், இளையோரை ஒதுக்கிவைப்பதால், அவர்களும் ஒதுங்கிக் கொள்கின்றனர் என்றும் கர்தினால் Ravasi கூறினார்.
வளரும் நாடுகளில் வாழும் 500 கோடி மக்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள், அதாவது உலகிலுள்ள அனைத்து இளையோரிலும் வளரும் நாடுகளின் இளையோர் 85 விழுக்காட்டினர் எனவும் பேசிய கர்தினால் Ravasi, திருப்பீடக் கலாச்சார அவை இளையோர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார்.

4. சிரியாவில் மெசபத்தோமிய நகரத்தில் ஓர் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது, பேராயர் ரோஹம்

பிப்.01,2013. சிரியாவில் சண்டை நடைபெற்றுவரும் முக்கிய நகரமான Deir Ezzorல் சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபையின் புனித மரியா ஆலயமும் Al-Wahda கிறிஸ்தவப் பள்ளியும் அழிக்கப்பட்டுள்ளன என்று சிரியன் ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கூறினார்.
சிரியாவில் இராணுவத்துக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் கிறிஸ்தவ ஆலயமும், பள்ளியும் அழிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்று Fides செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர் Roham.
பல ஆண்டுகளாக கடினமாக உழைத்துக் கட்டிய இந்த இடங்களை மீண்டும் யார் கட்டுவார்கள் என்ற கேள்வியை எழுப்பிய பேராயர் Roham, சிரியாவில் இடம்பெற்றுவரும் சண்டையில் பாகுபாடின்றி ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை இழக்கின்றனர் என்றுரைத்தார்.
சிரியாவில் இராணுவத்துக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

5. மாலி நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது தேசிய அளவிலான ஒப்புரவு, ஆயர்கள்

பிப்.01,2013. தற்போது மாலி நாட்டுக்கு உடனடியாகத் தேவைப்படுவது தேசிய அளவிலான ஒப்புரவே என்று அந்நாட்டு ஆயர்கள் கருதுவதாக, அந்நாட்டு ஆயர் பேரவையின் பொதுச்செயலர் அருள்பணி Edmond Dembele கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இடைக்கால அரசுத்தலைவரைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள் அந்நாட்டின் தேசிய ஒப்புரவு குறித்த விவகாரங்களில் உடனடியாக ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர் என்று அருள்பணி Edmond மேலும் கூறினார்.
மாலி நாட்டின் வடக்கில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒப்புரவையும், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளுதலையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் ஆயர்கள், இடைக்கால அரசுத்தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஷாரியா இசுலாமியச் சட்டத்தை நாடெங்கும் கொண்டுவரும் நோக்கத்தில் ஆயுத மோதல்களில் ஈடுபட்டுவரும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டுவரும் மாலி இராணுவத்துக்குப் பிரான்ஸ் தனது படைகளை அனுப்பி உதவி வருகிறது.

6. வத்திக்கான் நூலகத்திலுள்ள பழங்கால ஆவணங்கள் இணையதளத்தில்....

பிப்.01,2013. திருத்தந்தை 5ம் நிக்கோலாசால் 600க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில், முதன்முதலில் சேகரிக்கப்பட்ட பழங்கால எழுத்துப் பிரதிகள் இணையதளத்தில் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் உதவும் நோக்கத்தில், டிஜிட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ள பழங்கால 256 ஆவணங்கள், இணையதளத்தில் கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் நூலகத் தலைவர் பேரருட்திரு Cesare Pasini றிவித்தார்.
1451ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வத்திக்கான் நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் வசதிகள், Polonsky நிறுவனம், ஜெர்மனியின் Heidelberg பல்கலைக்கழகம் மற்றும் பிற உதவியாளர்கள் வழங்கிய 20 இலட்சம் பவுண்டு செலவில் செய்யப்பட்டுள்ளன.
வத்திக்கான் நூலகத்திலுள்ள பெருமளவிலான ஆவணங்கள் டிஜிட்டலில் வடிவமைக்கப்படுவதற்கு Heidelberg பல்கலைக்கழகம் முக்கிய காரணம் என்றும் பேரருட்திரு Pasini கூறினார்.

7. நேபாள மறைசாட்சிகள் பட்டியலில் முதல் அருள்பணியாளர்

பிப்.01,2013. நேபாளத்தில் 2008ம் ஆண்டில் இந்துத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்திய அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் தேசிய மறைசாட்சியாளர் என்று அங்கீகரிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் திருமறைக்காகக் கொல்லப்பட்ட மறைசாட்சிகள் மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் Gita Rasailee  இவ்வாறு அறிவித்தார்.
நேபாளத்தின் சிறுபான்மை கத்தோலிக்கச் சமுதாயத்தில் முதன்முதலாகக் கொல்லப்பட்டவர் அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் என்றும், அந்நாட்டில் இந்நாள்வரை மறைசாட்சி என்ற சொல், உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் Gita Rasailee  தெரிவித்தார்.
பெரும்பான்மையான இந்துக்களைக் கொண்டிருக்கும் நேபாளத்தில் சமய சகிப்பற்றதன்மைக்கு முதலில் பலியானவர் கத்தோலிக்க அருள்பணியாளர் ஜான் பிரகாஷ் என்றும் Gita Rasailee கூறினார்.
நேபாள மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் தங்கள் குழுக்களில் கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சியர் என அறிவிக்கப்பட வேண்டுமெனச் சொல்லி, பட்டியலைச் சேகரித்து வருவதையொட்டி எல்லா தரப்பினரும் தங்கள் தங்கள் மறைசாட்சியர் பட்டியலைத் தயாரித்து வருகின்றனர். 

8. இலங்கை தொடர்ந்து தனது குடிமக்களைத் தாக்கி வருகிறது, மனித உரிமைகள் வாட்ச் குழு 

பிப்.01,2013. இலங்கை தொடர்ந்து தனது குடிமக்களைத் தாக்கி வருகிறது எனவும், 2009ம் ஆண்டில் முடிவடைந்த ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து பொறுப்பேற்பதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறியுள்ளது எனவும் Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு குறை கூறியது. 
"உலக அறிக்கை 2013" என்ற தலைப்பில் 665 பக்க அறிக்கை வெளியிட்டுள்ள இந்த மனித உரிமைகள் அமைப்பு, கடந்த ஆண்டில் இலங்கையில், முக்கியமான மனித உரிமைகள் குறித்த விவகாரங்களில் எந்த அடிப்படையான முன்னேற்றமும் காணப்படவில்லை என்று கூறியது.
பல்வேறு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்பேரில் அதிகாரம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் எவ்விதக் குற்றச்சாட்டுமின்றி கைது செய்யப்பட்டனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் உட்பட, திட்டமிட்ட கைதுகளும் சித்ரவதைகளும் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டன என்றும் Human Rights Watch அமைப்பு குறை கூறியது.
இதற்கிடையே, வருகிற மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா,வின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த அறிக்கையின் பிரதி ஒன்று அந்நாட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெனிவாவிலிருந்து வெளியான செய்திகள் கூறுகின்றன.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...