Friday, 1 February 2013

இப்படியும் ஒரு முதலமைச்சர் - திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்

இப்படியும் ஒரு முதலமைச்சர் - திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார்  
 
கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00
வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00
மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,000. 00

இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), அவர்களுடைய சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வந்த சொத்து!

'ம்க்கும்... மத்ததெல்லாம் பொண்டாட்டி பேர்ல, பினாமி பேர்ல இருக்கும்' என்று அவசரப்பட்டுவிடாதீர்கள்...

மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் இவருடைய மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா... ஓய்வூதிய பலன்களாக பெற்ற வகையில் நிலையான வைப்புத் தொகையாக 23 லட்சத்தி 58 ஆயிரத்து 380 ரூபாய் வைத்திருக்கிறார். கையிருப்பு தங்கம் 20 கிராம். இதன் மதிப்பு, ரூபாய் 72, 000. கையிருப்பு ரொக்கம் 22 ஆயிரத்து 15 ரூபாய். ஆக மொத்த மதிப்பு 24 லட்சத்தி 52 ஆயிரத்தி 395 ரூபாய்.

இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. எல்லாருக்குமே ஐந்து இலக்கங்களை தாண்டிய சம்பளம்தான். நாட்டிலேயே மிகமிக குறைவாக சம்பளம் வழங்கப்படுவது திரிபுராவில்தான். மாதச் சம்பளம் 9,200 ரூபாய். இதை அப்படியே கட்சியிடம் கொடுத்து விடுவார் மாணிக் சர்க்கார். கட்சிக்கு தன் உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு, கட்சியிலிருந்து வழங்கப்படும் உபகாரச் சம்பளம் மட்டுமே இவருக்கு உண்டு. அந்த வகையில் மாணிக் சர்க்காருக்கு மாதம் 5,000 ரூபாய் தரப்படுகிறது.

என்னதான் முட்டி மோதிக் கணக்குப் போட்டாலும்... முதல்வர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 27 லட்ச ரூபாயைத் தாண்டவில்லை.

அடச்சே... நம்ம ஊரில், சும்மா நான்கு தெருவுகளை உள்ளடக்கிய கவுன்சிலர் பதவியில் உட்கார்ந்திருப்பவர்களில் பலருக்கும் பல கோடிகளில் சொத்துக்கள் இருக்கின்றன. மாத வருமானமே பல லட்சங்களில். ஓயாமல் பறப்பது டாடா சுமோ, இன்னோவா, சைலோ... போன்ற சொகுசு கார்களில்தான். இந்த மனுஷன் என்னடாவென்றால், சொந்தமாக ஒரு கார் கூட இல்லாமல், முதல்வர் பதவியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து முதல்வராக அமர்ந்திருக்கும் இவர், நான்காவது முறையாகவும் போட்டியிடுகிறார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...