ஐஃபெல் கோபுரம்
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐஃபெல் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம்
தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரஞ்சு புரட்சி
நூற்றாண்டு நிறைவு ஆகியவைகளை நினைவுகூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887ல் இக்கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் துவக்கப்பட்டபோது, 20 ஆண்டுகளுக்குப்பின் இக்கோபுரம் இடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டாலும், பின்னர், அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்காலிகத்தில் இருந்து நிதந்தர சின்னமாகிவிட்டது உலகப் புகழ்பெற்ற ஐஃபெல் கோபுரம். இதனை 121 வேலையாட்கள் 2ஆண்டு 2மாத காலத்தில் கட்டி முடித்தார்கள். கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்).
முழு கோபுரமும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துண்டங்கள் அனைத்தும் 25 இலட்சம் தறை ஆணிகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளன. இக்கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன், இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன் ஆகும்.
ஏழு ஆண்டிற்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் இக்கோபுரத்திற்கு வண்ணம் தீட்டப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் வண்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வண்ணக்கலவை பயன்படுத்தப்படுகின்றது.
இக்கோபுரத்தின் உச்சிப் பகுதி 1909ம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன், கோபுரத்தின்கீழ், பூமிக்கடியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.
ஐஃபெல் கோபுரமானது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930ம்
ஆண்டு வரை(40 ஆண்டுகள்) உலகின் மிகவும் உயரமான கோபுரம் எனும் புகழ்
பெற்றிருந்தது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் 80 இலட்சம் சுற்றுலாப் பயணிகளைக்
கவரும் ஐஃபெல் கோபுரம், இதுவரை 24 கோடியே 30 இலட்சத்திற்கும் மேலான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment