Tuesday 29 March 2022

'Praedicate Evangelium' திருத்தூது கொள்கை விளக்கம்

 'Praedicate Evangelium' திருத்தூது கொள்கை விளக்கம்



“Praedicate Evangelium” புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் தலைப்பே, திருத்தந்தையின் மேய்ப்புப்பணியில் அவருக்கு உதவுகின்ற எல்லா அலுவலகங்களும் நற்செய்தியை அறிவிக்கவேண்டியதன் முக்கிய கடமையை எடுத்துரைக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருப்பீட தலைமையகம் பற்றிய “Praedicate Evangelium” புதிய திருத்தூது கொள்கை விளக்கம், வத்திக்கான் வல்லுனர்களால் மார்ச் 21, இத்திங்களன்று திருப்பீட செய்தியாளர்கள் கூட்டத்திலும், இணையதளம் வழியாகவும் வெளியிடப்பட்டது.

புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ, C-9 கர்தினால்கள் அவையின் செயலர் ஆயர் மாற்கோ மெல்லினோ, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் திருஅவைச் சட்டத்துறையின் முன்னாள் பேராசிரியர் இயேசு சபையின் அருள்பணி ஜான்பிராங்கோ கிர்லான்டா ஆகியோர் இணைந்த குழு செய்தியாளர் கூட்டத்தில், இக்கொள்கை விளக்கம் பற்றி விவரித்தது. 

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, C-9 கர்தினால்கள் ஆலோசனை அவையின் செயலரான ஆயர் மாற்கோ மெல்லினோ அவர்கள், 'Praedicate Evangelium' என்பதன் அர்த்தத்தை விளக்கினார்.

மறைப்பணி அம்சம்

மறைப்பணி அம்சத்தைக் கோடிட்டுக்காட்டுகின்ற, “நற்செய்தியை அறிவியுங்கள்” என்று பொருள்படும் “Praedicate Evangelium” புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் தலைப்பே, திருத்தந்தையின் மேய்ப்புப்பணியில் அவருக்கு உதவுகின்ற எல்லா அலுவலகங்களும் நற்செய்தியை அறிவிக்கவேண்டியதன் முக்கிய கடமையை எடுத்துரைக்கின்றது என்று ஆயர் மெல்லினோ அவர்கள் கூறினார்.

திருப்பீடத் தலைமையகத்தின் இயல்பே, உலகளாவியத் திருஅவைக்குப் பணியாற்றுவதாகும், மற்றும், திருத்தந்தை உலகெங்கும் ஆற்றுகின்ற அவரது மேய்ப்புப்பணிக்கு, அவரது வழிகாட்டுதலில் உதவுவதாகும் என்றும் விளக்கிய ஆயர் மெல்லினோ அவர்கள், ஒருங்கிணைந்த பயணம் என்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைப்புக்கும், இந்த புதிய கொள்கை விளக்கம் ஒத்துச்செல்கிறது என்று கூறினார்.

தலத்திருஅவைகள் கூறுவதற்குச் செவிசாய்ப்பதற்கும், அத்திருஅவைகளோடு உரையாடலை மேற்கொள்வதற்கும், திருப்பீடத் தலைமையகம் முக்கிய கருவியாக மாறிவருகிறது என்று, 'Praedicate Evangelium' புதிய கொள்கை விளக்கத்தின் மறைப்பணி அம்சத்தை எடுத்துரைத்தார், ஆயர் மெல்லினோ.

திருப்பீடத் தலைமையகத்தில் சீர்திருத்தங்கள்

மேலும், இந்தப் புதிய கொள்கை விளக்கம் தயாரிக்கப்பட்டமுறை குறித்து விளக்கிய, புனிதர்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள், இது, 2013ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்விலிருந்து, பல ஆண்டுகளாக இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பயனாகும் என்று கூறினார்.

அண்மை ஆண்டுகளில் திருப்பீடத் தலைமையகத்தில் ஏற்கனவே பல சீர்திருத்தங்கள் நடைபெற்றுள்ளன எனவும், இப்புதிய கொள்கை விளக்கத்தின் வழியாக, திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தங்கள் முழுமைபெறும் எனவும் கர்தினால் செமராரோ அவர்கள் எடுத்துரைத்தார்.

திருப்பீடத் தலைமையகத்தில் புதிய வழிமுறைகள்

இன்னும் இச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் திருஅவைச் சட்டத்துறையின் முன்னாள் பேராசிரியர் இயேசு சபையின் அருள்பணி ஜான்பிராங்கோ கிர்லான்டா அவர்கள், திருப்பீடத் தலைமையகத்தில் புதிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருப்பீடத் தலைமையகத்தில் பொதுநிலையினருக்கு முக்கியத்துவம் கொடுத்தல், நிர்வாகத்தில் பொதுநிலையினர் முக்கிய பொறுப்பு வகித்தல் ஆகியவைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன, அதேநேரம், பொதுநிலையினர் பதவிவகிக்கும் இடங்களில் அருள்பணித்துவத்திற்குத் திருநிலைப்படுத்தப்பட்டவர்களின் இருப்பும் அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று, அருள்பணி கிர்லான்டா அவர்கள் கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1988ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி வெளியிட்ட Pastor Bonus  என்ற திருத்தூது கொள்கை விளக்கத்திற்குப் பதிலாக, இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம் அமைந்துள்ளது. மேலும், இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம், 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி, தூய ஆவியார் பெருவிழாவன்று நடைமுறைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...