துன்பத்தில் துணைநிற்கும் இறை ஊழியர் ஜான் பீட்டர்
மேரி தெரேசா: வத்திக்கான்
கப்புச்சின் துறவு சபையின் இறை ஊழியர் அருள்பணி ஜான் பீட்டர் சவரிநாயகம் அவர்களின் புனிதர்பட்ட திருப்பணிகள்பற்றிய சில தகவல்களை, அப்பணிகளை தலைமையேற்று நடத்திவரும், வேண்டுகையாளரான, அத்துறவு சபையின் அருள்பணி ஆ.தைனிஸ் அவர்கள், வத்திக்கான் வானொலி தமிழ்ப் பிரிவிடம் வழங்கியுள்ளார்.
அருள்பணி ஜான் பீட்டர் அவர்கள், 2019ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியன்று, இறை ஊழியர் என்று அறிவிக்கப்பட்டார். கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு எஃப். அந்தோனிசாமி அவர்கள், திருச்சி அமல ஆசிரமத்தில், அருள்பணி ஜான் பீட்டர் அவர்களின் கல்லறை அமைந்துள்ள இடத்தில், இப்புனிதர்பட்ட திருப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்கள், 1941ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள மிக்கேல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவர், 1979ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி, தனது 38வது வயதில், புற்றுநோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். ஆண்டவர் அழைப்பை ஏற்று கப்புச்சின் துறவு சபையில் தன்னை இணைத்துக்கொண்டு, இறைதிருவுளத்தை நிறைவேற்றுவேன் என்ற விருதுவாக்கோடு, ஆண்டவரே என் வாழ்வு என்ற உறுதியில் வாழ்ந்து வந்தவர், இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்கள்.
ஆற்றல்மிகு ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்துவந்த இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்கள், புற்றுநோய் முற்றிய நிலையிலும், வாழ்வதும் இறப்பதும் கிறிஸ்துவுக்கே என்ற இலக்கோடு, வேதனைகளைத் தாங்கிக்கொண்டார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர்கள், நாங்கள் இறைவனுக்குச் சிகிச்சையளித்தோம் என்று சொல்லி, அதற்குரிய தொகையை வாங்க மறுத்துவிட்டனர் என்று, அருள்பணி ஆ.தைனிஸ் அவர்கள் கூறியிருக்கிறார்.
மார்ச் 02, இப்புதனன்று, இறை ஊழியர் ஜான் பீட்டர் அவர்களின் நினைவு நாள் சிறப்பிக்கப்படுகின்றது. அவரின் பரிந்துரையால் பல புதுமைகள் நடைபெற்று வருகின்றன. அவர் விரைவில் புனிதர்நிலைக்கு உயர்த்தப்படவேண்டும் என்று, இந்த நினைவு நாளில் நாம் அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு, அருள்பணி ஆ.தைனிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (Ind.Sec./Tamil)
No comments:
Post a Comment