தண்ணீர், உலகிலேயே சிறப்புமிக்க ஓர் அழகுபொருள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் அழகு பொருள் எது என்று கேட்டால் அது தண்ணீர் மட்டும்தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, தோலிற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக, தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள செல்கள் அனைத்தும் நன்கு ஆரோக்கியமாகச் செயல்படும். தண்ணீரைத் தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், தோலினை பொலிவாக வைத்துக்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்பட்சத்தில், கண்கள் எப்போதும் பொலிவிழந்து காணப்படும். எனவே, தண்ணீரைத் தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். முதுமை வயதிலும் கூட கண்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். மேலும், தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களைக் கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். முகத்தைத் தண்ணீரால் கழுவினால், தோலிலுள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, தோலினை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
தண்ணீர் தெரபி எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும். ஏனெனில், வெதுவெதுப்பான தண்ணீர் தோலிலுள்ள துளைகளைத் திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த தோலின் துளைகளை மூடவும் உதவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் தோலின் துளைகளில் தங்குவதைத் தவிர்த்து, தோலை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம். மேலும், தண்ணீரைத் தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராகப் பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இவ்விதமான காரியங்களை நாம் தொடர்ந்து செய்து வந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டிய தேவையும் இருக்காது, உடல்வாதைகளால் அவதிப்படவேண்டிய அவசியமும் இருக்காது.
No comments:
Post a Comment