Saturday, 5 March 2022

பாகுபாடற்ற உலக நாள் மார்ச் 1

 

பாகுபாடற்ற உலக நாள் மார்ச் 1



வயது, பாலினம், நாடு, இனம், நிறம், உயரம், எடை, தொழில், கல்வி, மதநம்பிக்கைகள் என எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவரும் மாண்போடு, முழுமையான ஒரு வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

இந்நாள்களில் எந்தவோர் ஊடகத்தையும், எந்த நேரத்தில் திறந்தாலும், உக்ரைன் மற்றும், இரஷ்யாவிற்கு இடையே இடம்பெற்றுவரும் போர் குறித்த செய்திகளே, தடித்த எழுத்துகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரஷ்யாவின் அணு ஆயுதப் படை பிரிவுத் தயார் நிலையில் இருக்குமாறு, இரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என, பிப்ரவரி 27, இஞ்ஞாயிறு செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே, உக்ரைன், இரஷ்யா ஆகிய இரு நாடுகளும், பெலாருஸ் நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளன, பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்குமுன், இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது என்று, பிப்ரவரி 28, இத்திங்கள் காலையில் பிபிசி ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ், உலகளாவியத் திருஅவை அதிகாரிகள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்ட நன்மனம்கொண்ட பலர், உக்ரைன் மீது நடத்தப்படும் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று, தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகின்றனர். பிப்ரவரி 27, இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செபவுரையாற்றியபின்னர், உக்ரைன் மற்றும், உலகெங்கும் இடம்பெற்றுவரும் போர்கள் குறித்த மிகுந்த மனவேதனையை வெளியிட்டு, வன்முறையைப் பயன்படுத்துவோருடன் அல்ல, மாறாக, அமைதியை ஏற்படுத்துவோருடன் கடவுள் இருக்கிறார் என்று திருத்தந்தை கூறினார். உக்ரைன் மற்றும், உலகின் அமைதிக்காகவும், ஏமன், சிரியா, எத்தியோப்பியா போன்று, உலகின் பல்வேறு பகுதிகளில் போரினால் துன்புறும் மக்களுக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் குறித்து திருத்தந்தை  

இந்த வளாகத்தில் பல உக்ரைன் நாட்டுக் கொடிகளைப் பார்க்கின்றேன். போரை நடத்துபவர்கள் மனித சமுதாயத்தை மறக்கின்றனர். அண்மை நாள்களில், போர் என்ற கடுந்துயரால் நாம் கலக்கமடைந்துள்ளோம். போரின் பாதை மேற்கொள்ளப்படக் கூடாது என்று, மீண்டும் மீண்டும் இறைவனை நாம் மன்றாடி வருகின்றோம். போர் வேண்டாம் என்று குரல்கொடுப்பதை நிறுத்திவிடாமல் இருப்போம். போர் நிறுத்தப்படுமாறு கடவுளிடம் மிக உருக்கமாக மன்றாடுவோம். போரைத் தொடங்கி நடத்துபவர்கள், மக்களின் உண்மையான வாழ்வு மீது அக்கறை காட்டுவதில்லை, மாறாக, அவர்கள், அனைத்திற்கும் மேலாக, கட்சிநலன்கள் மற்றும், அதிகாரத்தை முன்னிலைப்படுத்துபவர்கள். உண்மையாகவே, எல்லாப் போர்களிலும் அப்பாவி மக்களே பாதிக்கப்படுகிறார்கள். இந்நாள்களில் புகலிடம் தேடுகின்ற வயதுமுதிர்ந்தோர், தங்கள் பிள்ளைகளுடன் நாட்டைவிட்டு வெளியேறும் அன்னையர் போன்றோரை குறிப்பாக நினைக்கின்றேன். அவர்கள் நம் சகோதரர், சகோதரிகள். அவர்களுக்கு மனிதாபிமானக் கதவுகள் திறந்துவிடப்படவேண்டும், மற்றும், அவர்கள் வரவேற்கப்படவேண்டியவர்கள். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் கூறியுள்ளார்.

உக்ரைன்-இரஷ்யா போருக்குக் காரணம்

இரஷ்யா, தன் அருகாமையிலுள்ள உக்ரைன் நாட்டை, இவ்வளவு கொடூரமாகத் தாக்கி வருவதற்கு, முக்கியமாக இரு காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. உக்ரைன் நாடு, நேட்டோ அமைப்போடு சேரத் திட்டமிடுவது முதல் காரணம். இரண்டாவது காரணம், உக்ரைன் நாட்டில் குவிந்துகிடக்கும் கனிமவளம். நேட்டோ என்பது, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பாகும் NATO The North Atlantic Treaty Organization).  நேட்டோ என்பது, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்த்துக்கல் ஆகிய 12 நாடுகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, 1949ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய இராணுவ கூட்டமைப்பாகும். இந்த பன்னிரண்டு நாடுகளைத் தவிர, அல்பேனியா, பெலாருஸ், ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து உள்ளிட்ட முப்பது நாடுகள், இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளன. நேட்டோவின் ஒப்பந்தத்தின்படி, அந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கப்படும்வேளையில், மற்ற நாடுகள் அதற்கு உதவிக்குச் செல்லவேண்டும். எனவே, இந்த அமைப்பில், உக்ரைன் சேரக்கூடாது என்பதற்காகத்தான், தற்போது இரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

உக்ரைன் நாடு, தன் அண்டை நாடான இரஷ்யா, எப்பொழுது வேண்டுமானாலும், தன்னைத் தாக்கலாம் என்ற அச்சத்தால், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த, நேட்டோ அமைப்பில் அது சேர விரும்புகிறது. அதேநேரம், உக்ரைனில் மற்ற நாடுகள் இருந்துகொண்டு, தனக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் இரஷ்யாவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு கடந்த 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக இரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த அமைப்பிலிருந்த நாடுகளில் பலவும், நேட்டோவில் இணைந்திருப்பதும் இரஷ்யாவுக்கு கோபத்தை எழுப்பியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. 1950-களில் இருந்தே நேட்டோவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையே பிரச்சனைதான். எனவே, நேட்டோ அமைப்பை, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நோக்கும் இரஷ்யா, ஐரோப்பியக் கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை சிறிதும் விரும்பவில்லை. எனவே, உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் எப்பொழுதுமே சேரக்கூடாது என்ற உறுதிப்பாட்டை தனக்கு வழங்கவேண்டும் என, மேற்குலக நாடுகளை இரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. எனவேதான் இரஷ்யா தற்பொழுது உக்ரைன் மீது தாக்குதலை நடத்திவருகிறது எனவும் சொல்லப்படுகிறது..

கனிம வளங்கள் நிறைந்த உக்ரைன்

அடுத்து, உக்ரைன் நாட்டில் மிகுந்த இயற்கை கனிம வளமும், அந்நாட்டின் மீது இரஷ்யா போர் தொடுக்க காரணம் என்று இணையத்தளங்கள் செய்திகளைப் பதிவுசெய்துள்ளன. ஐரோப்பியக் கண்டத்தில் யுரேனியம் அதிகமாக கிடைக்கும் நாடுகளில் முதலிடத்தையும், அக்கண்டத்தில் டைட்டானியம் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும், உலகளவில் மாங்கனீசியம் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் பத்தாவது இடத்தையும், இரும்புத்தாதும், மெர்குறியும் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும், ஐரோப்பாவில் எரிவாயுவும், நிலக்கரியும் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும், உலகளவில் 13வது இடத்தையும், ஐரோப்பாவில், விவசாயம் சார்ந்த இயற்கை வளங்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளில் ஏழாவது இடத்தையும், உலகளவில், விவசாயத்தில் நான்காவது இடத்தையும், கொண்டிருக்கும் நாடு உக்ரைன். மேலும், உக்ரைன் நாட்டின் மொத்த விளை நிலத்தில் கருப்பு மண்ணே அதிகம். அந்நாட்டிலிருந்து ஏராளமான மலர்கள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உக்ரைன் நாடு, ஏறக்குறைய அறுபது கோடி மக்களின் அன்றாட உணவுத் தேவைகளை நிறைவேற்ற முடியும். அணுமின் நிலையங்களைக் கொண்டிருக்கும் நாடுகளில், ஐரோப்பாவில் மூன்றாவது இடத்திலும் உலகளாவில் எட்டாவது இடத்திலும் இந்நாடு உள்ளது. மேலும் இந்நாடு, பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளது. இந்தியா, உக்ரைன் நாட்டில் இருந்து சமையல் எண்ணெய், பார்லி, கோதுமை என, பல பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து, மருந்து பொருட்கள் உக்ரைன் நாட்டிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் கீவ் தலைநகருக்கு அருகிலுள்ள எண்ணெய்க் கிடங்கிற்குத் தீ வைக்கப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.

பாகுபாடற்ற உலக நாள், மார்ச் 01

மார்ச் 01, இச்செவ்வாயன்று பாகுபாடற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. வயது, பாலினம், நாடு, இனம், நிறம், உயரம், எடை, தொழில், கல்வி, மதநம்பிக்கைகள் என எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவரும் மாண்போடு, முழுமையான ஒரு வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்துவதற்காக, இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா. எய்ட்ஸ் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பினால் 2013ம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டு, 2014ம் ஆண்டில் இந்நாள் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. வண்ணத்துப்பூச்சி இந்த உலக நாளுக்கு அடையாளமாக இருக்கின்றது. இப்பூச்சிபோல் அனைவரும் சுதந்திரமாக சமுதாயத்தில் நடமாடவேண்டும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்ற தலைப்பில், இவ்வாண்டு இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. மக்களாகிய நாம் அனைவரும் எல்லாவற்றிலும் சமமாக நடத்தப்பட உரிமையைக் கொண்டிருக்கும்போது, அரசுகளும், மற்ற மனிதர்களும் நம்மை பாகுபாட்டுடன் நடத்துவதற்கு ஏன் அனுமதியளிக்கின்றோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு, அனைவரும் சமஉரிமையோடு நடத்தப்பட நாம் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று பாகுபாடற்ற உலக நாள் அழைப்புவிடுக்கிறது.

எல்லா மனிதரும், இறைச்சாயலைக் கொண்டிருப்பவர்கள், அனைவரும் எவ்விதப் பாகுபாடும் இன்றி மதிக்கப்படவேண்டியவர்கள் என்ற உணர்வில் வாழ்வோம். உக்ரைனிலிருந்து ஏறத்தாழ நான்கு இலட்சத்து 22 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்றும், நாட்டுக்குள்ளேயே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், இந்த நிலைமை ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கிறது என்றும், ஐ.நாவின் புலம்பெயர்ந்தோர் ஆணையம் தெரிவித்துள்ளது. போரினால் துன்புறும் மக்களை, மனிதர்களாகப் பார்த்து அவர்கள் பாதுகாக்கப்படுமாறு கடவுளை மன்றாடுவோம். அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமைத் தலைவரும், அரசியல்வாதியுமான ஜான் லெவிஸ் அவர்கள் கூறியிருக்கிறார் - ஏதாவது ஒன்றை, சரியற்றதாக, நியாயமற்றதாக, உண்மையற்றதாக நாம் பார்க்கும்போது, அதற்கு எதிராகப் பேசவேண்டும், அந்நிலையை அகற்ற ஏதாவது நாம் ஆற்றவேண்டும் என்று.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...