சென்னையின் மேயராக முதல் தலித் கிறித்தவப் பெண்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் மேயராகப் பொறுப்பேற்றுள்ள பிரியா இராஜன் அவர்களுக்கு தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதேவேளை, பெண் விடுதலையின் தற்போதைய சூழலில், சென்னை மேயராக பிரியா அவர்களின் எழுச்சி, பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்று இயேசு சபை அருள்பணியாளரும், தலித் உரிமை ஆர்வலருமான போஸ்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
“நமது ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் தங்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கு நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர் என்றும் கூறியுள்ள அருள்பணி போஸ்கோ அவர்கள், அனைத்துப் பெண்களும், குறிப்பாக, தலித் கிறிஸ்தவப் பெண்கள், துணிச்சலில் வளர, பிரியா அவர்கள் தொடர்ந்து உள்தூண்டுதலாய் இருப்பார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் நல்லிணக்கத்தைக் கொண்டுவருகிறார்கள், இளகிய மனதுடன் அன்பு செய்யக் கற்றுக்கொடுக்கிறார்கள், மற்றும் உலகத்தை அழகாக மாற்றுகிறார்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை நினைவுகூர்ந்த அருள்பணி போஸ்கோ அவர்கள், பிரியா இராஜன் அவர்கள், பெண், தலித், கிறிஸ்தவர் என்ற மூன்றுவிதப் பாகுபாடுகள் மீது வெற்றிகண்டுள்ளார் என்று, அவரைப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகவும், பத்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழ் நாட்டின் தலைநகரமாகவும் விளங்கும் சென்னையின் முதல் தலித் மேயராக பிரியா இராஜன் அவர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றார்.
28 வயது நிரம்பிய பிரியா இராஜன், மார்ச் 4, கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை மாநகராட்சியின் மேயராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்றும், 334 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் மூலம் இந்த பதவியை வகிக்கும் மூன்றாவது பெண்மணி என்றும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் பட்டதாரியான இவர், இந்திய இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும், மாநிலத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் (Dmk) உறுப்பினராகவும் உள்ளார் என்று ஆசியச் செய்தி தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இதே பொறுப்பை வகித்துள்ளனர் எனவும், இந்த ஆண்டு உள்ளூர் நிர்வாக அமைப்பு விதிகளின்படி தலித் பெண்ணுக்கு இப்பதவி பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், பிரியா இராஜனுடன், மாநிலம் முழுவதும் 10 பெண்கள் பல நகரங்களில் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆசியச் செய்தி தெரிவிக்கிறது.
இலண்டனுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி உலகின் இரண்டாவது பழமையான நகர சபையாக கருதப்படுகிறது. (Asia news)
No comments:
Post a Comment