Saturday, 5 March 2022

சீனாவின் மஞ்சள் நதி

 

சீனாவின் மஞ்சள் நதி



சீனக் கலாச்சாரத்தின் தொட்டில், அல்லது அன்னை நதி என்றழைக்கப்படும் மஞ்சள் நதி சீனாவின் வரம், மற்றும் சாபம் என முரண்பாட்டு நிலைகளில் காணப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகின் மிகப்பெரிய கலாச்சாரங்கள், நதிக்கரைகளில் பிறந்துள்ளன. எடுத்துக்காட்டாக, எகிப்து, நைல், மிசிசிப்பி, சிந்து ஆகியவற்றில் வளர்ந்துள்ளதைக் காணலாம். யாங்சே, மஞ்சள் நதி அல்லது ஹுவாங் ஹே ஆகிய இரண்டு பெரிய நதிகளை, சீனா கொண்டிருக்கிறது. மஞ்சள் நதி, தான் வரும் வழியில் உள்ள பாறைகளின் மீதும், மண் மீதும் ஓடிவரும்போது நுண்ணிய மஞ்சள் நிறமான வளமான மண்ணையும் அரித்துக்கொண்டு வருகிறது. இத்துகள்களினால், இந்நதியின் நீரும், கரைகளும் மஞ்சளாகக் காட்சி தருவதால், இதற்கு மஞ்சள் நதி என்ற பெயர் நிலைத்துவிட்டது. இதன் முக்கிய உப நதி "வி அல்லது வி ஹோ' என்றழைக்கப்படுகிறது. இவ்விரு நதிகளிடையே சியான் நகரம் உள்ளது. இந்த மஞ்சள் நதி "சீனக் கலாச்சாரத்தின் தொட்டில்" அல்லது "அன்னை நதி" என்று அழைக்கப்படுகிறது. இந்நதிப் பகுதி செழிப்பானதாக இருந்ததால் சீனக் கலாச்சாரம், முதலில் இங்குதான் தோன்றியது. சீனாவின் இரண்டாவது நீளமானதும், உலகின் ஆறாவது நீளமானதுமான இந்த நதி, மேற்கு சீனாவின் சிங்ஹாய் மாநிலத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி ஒன்பது மாநிலங்கள் வழியாக 5,464 கிலோ மீட்டர் தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. இந்நதிப் பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளைவிட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. சீனக் கலாச்சாரம், மஞ்சள் நதிப் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது.

1999ம் ஆண்டு கணக்கின்படி இதன் நீரை ஆதாரமாகக் கொண்டு 14 கோடி மக்களும் 74,000 சதுர கிலோ மீட்டர் நிலமும் பயன்பெறுகின்றன. மஞ்சள் நதி, ஓர் ஆண்டுக்கு, 16 இலட்சம் டன் வண்டலை, மேட்டுநிலத்திலிருந்து கொணர்கிறது. உலகின் மோசமான வெள்ளப்பெருக்குகளை ஏற்படுத்தியது மஞ்சள் நதியாகும். 1887, மற்றும் 1931ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அறுபது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். ஒரு பக்கம் வளத்தை வழங்கி வந்தாலும், அவ்வப்போது, வெள்ளப்பெருக்கை உருவாக்கி மரணத்தையும் வாரி வழங்கி வருவதால், நீண்ட சீன வரலாற்றில் மஞ்சள் நதி சீனாவின் வரம், மற்றும் சாபம் என முரண்பாட்டு நிலைகளில் காணப்படுகிறது. எனவே, இதற்கு சீனாவின் பெருமை மற்றும் சீனாவின் துயரம் என முரண்பாடான புனைப்பெயர்கள் உண்டு.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...