உலகிற்கு இப்போது தேவை அமைதி - ஐ.நா.
உக்ரைன் நாட்டில் இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையால் உலக அளவில் பசிப்பிரச்சனை அதிகரித்துள்ளது – ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
இரஷ்ய இராணுவம், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக கட்டுப்பாடின்றி நடத்திவரும் கடும் தாக்குதல்களால் அந்நாடு உலகினரின் கண்களுக்குமுன்பாக துண்டு துண்டாகத் தெரிகின்றது என்றும், இப்போது உலகிற்கு அமைதி தேவை என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இரஷ்யாவின் இந்நடவடிக்கையால் நலிவடைந்து வரும் உலகளாவியப் பொருளாதாரம், பசிப் பிரச்சனையை, குறிப்பாக, வறியோரை அது மிகவும் பாதித்துள்ளது என்று, மார்ச் 14, இத்திங்களன்று ஐ.நா. அதிகாரிகளிடம் கூறிய கூட்டேரஸ் அவர்கள், உக்ரைனில் ஒவ்வொரு மணி நேரமும், மரணம் மற்றும் அழிவால் கடக்கின்றது என்று உரைத்தார்.
போரில் வெற்றியாளர்கள் என்று எவருமே இல்லை, மாறாக அது தோல்வியாளர்களையே உருவாக்கும் என்றும், இரஷ்யாவின் ஆக்ரமிப்பால், உக்ரைனில் குறைந்தது 24 மருத்துவ மையங்கள் உட்பட, சாலைகள், விமானத்தளங்கள், பள்ளிகள் போன்ற அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன என்றும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி உள்ளனர் என்றும் கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.
சிறாரைப் பயன்படுத்துவோர் மற்றும், மனித வர்த்தகர்களுக்கு, போர் ஒரு கொடுந்துன்பம் அல்ல, மாறாக, பெண்கள் மற்றும் சிறாரைக் குறிவைப்பதற்கு அது ஒரு வாய்ப்பு என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், பெண்களையும் சிறாரையும் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவேன் என்று உறுதியளித்தார்.
சூரியகாந்தி எண்ணெய் விநியோகம்
உலகில் விநியோகிக்கப்படும் சூரியகாந்தி எண்ணெய்யில் பாதிக்குமேலும், கோதுமை விநியோகத்தில் ஏறத்தாழ முப்பது விழுக்காட்டையும் இரஷ்யாவும் உக்ரைனும் வழங்குகின்றன என்றுரைத்த கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தில் கோதுமை விநியோகத்தில் பாதிக்குமேல் உக்ரைன் வழங்குகின்றது என்று கூறினார்.
45 ஆப்ரிக்க மற்றும், வளர்ச்சி குன்றிய நாடுகள், தங்களுக்குத் தேவைப்படும் கோதுமையில் குறைந்தது மூன்றில் ஒரு பகுதியை இரஷ்யா மற்றும், உக்ரைனிலிருந்து பெறுகின்றன என்பதையும் கூட்டேரஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார். (UN)
No comments:
Post a Comment