Tuesday 15 March 2022

மனம் பதறுகின்றது, போரை நிறுத்துங்கள்

 

மனம் பதறுகின்றது, போரை நிறுத்துங்கள்



அண்மைக் காலமாக அரசியல்வாதிகள் நம்மை மெது மெதுவாகச் சுரண்டத் தொடங்கியுள்ளனர். நாமும் நம்மையே திருடப்பட மகிழ்ச்சியோடு கையளித்து வருகிறோம். இதில் சிக்கிக்கொண்டுள்ள நாம், நம் பிள்ளைகளின் வருங்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

இதை எழுதியவர் யாராய் இருந்தாலும், அவர் அதை மிகவும் அழகாகப் பதிவுசெய்திருக்கிறார் (Whoever Wrote, It Is Wonderfully Written) என்று தலைப்பிடப்பட்ட ஒரு செய்தி, அண்மையில் வாட்சப் ஊடகத்தில், நண்பர் வட்டங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. அச்செய்தி இணையதளத்திலும் பதிவாகியிருந்தது. அதை எழுதியவர் இவ்வாறு தொடங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டில், சிறந்த அறிவியலாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்றோர், ஓராண்டில் பெறமுடியாத ஊதியத்தை, திரைப்பட கதாநாயகர் ஒருவர் பெறுகின்றார். அந்நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்கு என்ன? நவீனகால இளைய தலைமுறைக்கு, திரைப்படம், கிரிக்கெட், அரசியல் ஆகிய மூன்று துறைகளும் கவர்ச்சியாக உள்ளன. இந்த மூன்று துறைகளிலும் உள்ளவர்கள் ஈட்டும் பணமும், செல்வாக்கும் கட்டுக்கடங்காமல் உள்ளன. அவர்களின் நம்பகத்தன்மையும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. இக்கால அரசியலில் பெரும்பாலும் ஊழலும், ரவுடித்தனமும் நிலவுகிறது. இதற்குப் பின்புலத்தில் வேலைசெய்வது பணம். இந்தப் பணத்தை அவர்களுக்கு அளிப்பவர்கள் குடிமக்களாகிய நாம். எனவே நம் சொந்தப் பணத்தை வழங்கி, நமக்கே நாமே கேடு வருவித்துக்கொள்கிறோம். 70, 80 ஆண்டுகளுக்கு முன்னர், புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றவரைப் போலவே ஊதியம் பெற்றனர். 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர்களின் வருமானமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகமில்லை. 30,40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலிலும் அவ்வளவு கொள்ளை கிடையாது. ஆனால் அண்மைக் காலமாக மெது மெதுவாக அவர்கள் நம்மைச் சுரண்டத் தொடங்கியுள்ளனர். நாமும், நம்மையே திருடப்பட மகிழ்ச்சியோடு கையளித்து வருகிறோம். இதில் சிக்கிக்கொண்டுள்ள நாம், நம் பிள்ளைகள் மற்றும், நமது நாட்டின் வருங்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

வியட்நாம் அரசுத்தலைவர் ஹோ கி

ஒருமுறை வியட்நாம் அரசுத்தலைவர் ஹோ கி மின்க் (Ho Chi Minh) அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அமைச்சர் ஒருவரைச் சந்தித்தார். அப்போது அவர் அவரிடம், நீங்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர், நாங்கள் அரசியலில் இருக்கிறோம் என்று சொன்னார். அவர் கூறிய பதில் வியட்நாம் அரசுத்தல்வைருக்குப் புரியவில்லை. எனவே அவர் மீண்டும் அமைச்சரிடம், உங்களது தொழில் என்ன என்று கேட்டார். அரசியல்தான் என்று அமைச்சர் கூறியதும் சற்று எரிச்சலைடந்த ஹோ கி அவர்கள், நான் கேட்ட கேள்வியை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கின்றேன், நானும் அரசியலில்தான் இருக்கின்றேன், ஆனால் நான் ஒரு விவசாயி, நான் வாழ்வதற்காக விவசாயம் செய்கிறேன். காலையிலும் மாலையிலும் நான் எனது நிலத்திற்குச் செல்வேன். மற்ற பகல் நேரத்தில், அரசுத்தலைவராக எனது கடமையைச் செய்கிறேன் என்று கூறினார். அதே வியட்நாம் அரசுத்தலைவர், இந்திய பிரதிநிதிகள் குழுவில் இருந்த வேறொருவரிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அவரும், எனது தொழில் அரசியல் என்றே சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு, அரசியல் தொழில் உதவிவருகிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஐரோப்பா கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மருத்துவர்கள் விடுமுறையே இல்லாமல் பல மாதங்களாக பணியாற்றினர். அக்காலக்கட்டத்தில் போர்த்துக்கீசிய மருத்துவர் ஒருவர் கோபத்தோடு கூறினாராம் – விளையாட்டைப் பார்ப்பதற்காக இலட்சக்கணக்கான டாலர்களை நீங்கள் வழங்கும் ரொனால்டோவிடம் செல்லுங்கள், நான் மிகக் குறைவாகவே டாலர்களைப் பெறுகிறேன் என்று.

இன்றைய இளையோர் பலருக்கு, அறிவியலாளர்களோ, ஆய்வாளர்களோ கல்வியாளர்களோ முன்மாதிரிகையாகவும் கவர்ச்சிகரமாகவும் தெரிவதில்லை. மாறாக, திரைப்பட கதாநாயகர்களும், அரசியல்வாதிகளும் விளையாட்டு வீரர்களுமே கவர்ச்சியாகத் தெரிகின்றனர். இளையோர் பலருக்கு கவர்ச்சியாக உள்ளவர்கள் தங்களின் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள், ஆனால் நாடு ஒருபோதும் முன்னேறாது. இந்நிலையில் ஒரு நாட்டின் ஒற்றுமையும், ஒருங்கமைவும் எப்போதும் ஆபத்திலே இருக்கும். இவ்வாறு, பெயர் அறிவிக்கப்படாத அந்த மனிதர், இந்தியா பற்றிய தன் ஆதங்கத்தை பதிவுசெய்திருக்கிறார்.

இக்காலத்திற்கு நாடுகளை ஆள்கின்ற நல்ல தலைவர்கள் தேவைப்படுகின்றனர். வருங்காலத் தலைமுறைகளுக்கு நல்வழி காட்டும் தலைவர்களும், கதாநாயகர்களும், விளையாட்டு வீரர்களும் தேவைப்படுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியிலிருந்து உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் கடுமையான போர் இந்த நம் தேவைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது.

உக்ரைன் போர்

உக்ரைன் நாட்டு மக்களுக்கு, வான் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் ஒலியில்தான் ஒவ்வொரு நாளும் விடிகிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களின் வான்பரப்புகள், ஏவுகணை தாக்குதல்களின் புகைமண்டலத்தால் நிறைந்திருக்கின்றன. இரஷ்யப் படையினர் உக்ரைனின் இராணுவம் தொடர்பான இடங்களில் தாக்குதல்களை நடத்திவருகின்றனர். பொதுமக்கள் வாழ்கின்ற பகுதிகளையும் இரஷ்யப் படையினர் தாக்கி வருவதாக உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் மையப் பகுதிக்குள் நுழைந்தால் வேறு ஓர் உலகத்திற்குள் செல்வது போலக் காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பலர் தங்களின் கை கால்களை இழந்துள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். இஞ்ஞாயிறு இரவில் இரஷ்யா, உக்ரைனின் இராணுவத் தளம் உள்ளிட்ட பல பகுதிகளையும் குறிவைத்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 35 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 134 பேர் படுகாயமடைந்தனர் என்று பிபிசி ஊடகச்செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட உக்ரைன் மக்கள் அருகிலுள்ள நாடுகளுக்குச் சென்றுள்ளனர். இரஷ்யாவிலிருந்தும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் வெளியேறியுள்ளனராம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஐ.நா. அதிகாரிகளும் போர் முடிவுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். மார்ச் 13, இஞ்ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற 9ம் ஆண்டு நினைவாகும். 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி, கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தார். இவர் இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர் உக்ரைன் நாட்டில் இடம்பெறும் படுகொலைகள் நிறுத்தப்படுமாறு கடவுள் பெயரால் கேட்டுக்கொள்கிறேன் என்று, மிகுந்த வேதனையோடு தெரிவித்தார். 

திருத்தந்தை - போரை நிறுத்துங்கள்

போரினால் அழிக்கப்பட்டுவரும் உக்ரைன் நாட்டில், அப்போரால் பலியாகுவோர் மற்றும் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை, உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான போரால் Mariupol நகர், மறைசாட்சிகளின் நகரமாக மாறி வருகிறது. சிறார், மாசற்றவர்கள், ஆயுதம் ஏந்தாத அப்பாவி குடிமக்கள் ஆகியோர் மீது காட்டுமிராண்டித்தனமாக கொடூரங்கள் நடத்தப்படுகின்றன, நகரங்களை கல்லறைகளாக மாற்றுவதற்குமுன்னர், ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கடும் ஆயுதத் தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், போர் நிறுத்தப்படுமாறு விண்ணப்பிக்கும் பொது மக்களின் குரல்களோடு, வேதனை நிறைந்த மனதோடு என்னையும் இணைக்கின்றேன். துன்புறுவோரின் அழுகுரல்கள் கேட்கப்படட்டும், குண்டுவீச்சுக்களும் தாக்குதல்களும் நிறுத்தப்படட்டும், உண்மையான, மற்றும், உறுதியான பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படட்டும். பாதுகாப்பான மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்படட்டும் என்று கடவுளின் பெயரால் கேட்கிறேன். இந்தப் படுகொலைகளை நிறுத்துங்கள் என்று கடவுளின் பெயரால் கேட்கிறேன். அனைத்து மறைமாவட்டங்களும், துறவறக் குழுமங்களும் அமைதிக்காக அதிகமாகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடவுள் அமைதியின் கடவுள் மட்டுமே. அவர் போரின் கடவுள் அல்ல. வன்முறையை ஆதரிப்பவர்கள், அவரது பெயரை அவமதிக்கின்றனர். இவ்வாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு உதவும் மக்களுக்கும் நன்றி  கூறினார்.

“போர் என்பது, இளையோர் ஒருவரையொருவர் அறியாதிருக்கும் இடம், ஒருவரையொருவர் வெறுக்காதிருக்கும் இடம். ஆனால் ஒருவரையொருவர் அறிந்த மற்றும், ஒருவரையொருவர் வெறுக்கின்ற, அதேநேரம் ஒருவரையொருவர் கொலைசெய்யாத தலைவர்கள் எடுத்த தீர்மானத்தால், இளையோர் ஒருவரையெருவர் கொலை செய்கின்ற இடம்”. இவ்வாறு போர் என்பதற்கு ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அமைதிக்கு, நல்லிணக்கத்திற்கு, ஒற்றுமைக்கு, நாட்டு மக்களின் உண்மையான நலனுக்கு  சமாதானத்திற்கு நல்வழிகாட்டும் தலைவர்களும், வயதுவந்தவர்களுமே, துப்பாக்கிகளை ஏந்தும் இளையோர் படைவீரர்களுக்கு, தேவைப்படுகின்றனர். நாடுகளின் தலைவர்கள் தங்களின் நாற்காலி வெறியை அகற்றி உலகினர் அமைதியில் வாழ உதவுமாறு இறைவனை மன்றாடுவோம். உக்ரைன் நாட்டின் நிலைமையை புகைப்படங்களில் பார்க்கும்போது மனிதமனம் பதறுகின்றது.  போரை நிறுத்துங்கள் என்று தலைவர்களைக் கெஞ்ச வைக்கின்றது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...