உலகின் ஏழாவது பெரிய நதி, ஓப்
மேரி தெரேசா: வத்திக்கான்
நைல் (6,650 கி.மீட்டர்கள்), அமேசான் (6,575 கி.மீட்டர்கள்), யாங்சே (6,300 கி.மீட்டர்கள்), மிசிசிப்பி (6,275 கி.மீட்டர்கள்), யெனிசே (5539 கி.மீட்டர்கள்), மஞ்சள் (5,464 கி.மீட்டர்கள்), ஓப் (5,410 கி.மீட்டர்கள்), பரனா (4,880 கி.மீட்டர்கள்), காங்கோ (4,700 கி.மீட்டர்கள்), அமுர் (4480 கி.மீட்டர்கள்) ஆகியவை, உலகின் மிக நீளமான பத்து நதிகளாக புவியியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இவற்றில் ஏழாவது மிக நீளமான நதியாகிய ஓப். 5,410 கிலோ மீட்டர் நீளம்கொண்டது. இந்நதி, Altas ஆசிய மலைகளில் உற்பத்தியாகின்றது. அதே மலைகளில் உற்பத்தியாகும் பியா மற்றும், கட்டுன் ஆகிய இரு ஆறுகள், வெவ்வேறு நிறங்களோடு இந்நதியோடு இணைகின்றன. எனவே, கோடை காலத்தில் இந்த நதியின் சில பகுதிகளில் 26 முதல் 28 செல்சியுஸ் டிகிரி வெப்பநிலை உள்ளது. ஓப் நதி, இரஷ்யா, கசகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில், மலைகள், காடுகள், சமவெளிகள், பாலவனங்கள் என பல்வேறு பகுதிகள் வழியாகப் பாய்ந்து, ஆர்டிக் பெருங்கடலில் கலக்கின்றது. இந்த நதி பெருங்கடலில் கலக்கும் இடத்தில், உலகின் மிகப்பெரிய வளைகுடாவான ஓப் வளைகுடாவை உருவாக்குகிறது. ஓப் வளைகுடா, எண்ணூறு கிலோ மீட்டர்கள் நீளத்தையும், எண்பது கிலோ மீட்டர்கள் அகலத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த வளைகுடாவின் பரப்பளவு 1,05,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். உலகின் மற்ற நதிகளைப் போலவே, ஓப் நதியும், இரஷ்யா, கசகஸ்தான், சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில், வேளாண்மை, மின்சக்தி, குடிநீர், மீன்பிடித்தல் ஆகியவற்றிற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சைபீரியாவில் பாய்கின்ற மூன்று பெரிய நதிகளில் ஒன்றாகிய ஓப் நதிப் படுகை, ஏறத்தாழ முப்பது இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த அளவு, பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஓப் நதிக் கரைகளில், இரஷ்யர்கள், கசகஸ்தானியர்கள், சீனர்கள் என ஏறத்தாழ முப்பது இலட்சம் பேர் வாழ்கின்றனர். இம்மக்கள் அனைவரும் தங்களது பாணியில், இந்நதியை, பெரிய நதி என்றே அழைக்கின்றனர். இந்த நதியின் பள்ளத்தாக்குப் பகுதி, ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் அளவைக் கொண்டிருக்கின்றது. இந்த நதியின் அகலம், சில இடங்களில் மிக மிக அதிகமாக இருப்பதால், அதற்குக் கரைகள் கட்டுவது கடினம் என்று சொல்லப்படுகிறது. ஓப் நதி, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உறைந்து இருக்கும். எனவே, இந்நதி ஆண்டில் 190 நாள்கள் மட்டுமே, போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஓப் நதியில் ஏறத்தாழ ஐம்பது வகையான மீன் இனங்கள், வாழ்கின்றன.
No comments:
Post a Comment