Thursday, 10 March 2022

நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்

 

நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்



இலங்கையில் 2019ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உதவ வேண்டும் – கர்தினால் இரஞ்சித்

மேரி தெரேசா: வத்திக்கான்

இலங்கையில் 2019ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு உதவுமாறு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பிற்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், அந்நாட்டுக் கர்தினால் மால்கம் இரஞ்சித்.

ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைகள் அவை (UNHRC) நடத்திவரும் 49வது கூட்டத்தில், மார்ச் 07, இத்திங்களன்று உரையாற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற தாக்குதல்களை நடத்தியவர்கள், சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற எண்ணமே முதலில் இருந்தது, ஆனால், அத்தாக்குதல்கள் ஒரு பெரிய அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதி என்று, அவை குறித்து நடைபெற்ற தொடர் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

அத்தாக்குதல்கள் குறித்த உண்மை கண்டறியப்படவேண்டும் என்று இலங்கைத் திருஅவையும், அரசு-சாரா அமைப்புகளும் தொடர்ந்து அரசை விண்ணப்பித்துவரும்வேளை, இலங்கையின் ஆளும் அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஐ.நா.கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை விடுத்து, அதற்காக குரல் எழுப்புகின்றவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்றுரைத்த கர்தினால் இரஞ்சித் அவர்கள், இப்பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் குறித்த உண்மையை அரசு மூடிமறைத்துள்ளது, மற்றும், அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர் என்று கூறினார்.

அப்பயங்கரமான குற்றங்கள் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியும், நாங்கள் இன்னும் இருளிலே இருக்கிறோம் என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஐ.நா.வில் எடுத்தியம்பினார்.

பயங்கரவாதத் தாக்குதல்கள்

இலங்கையில், 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில், 82 சிறார், 47 வெளிநாட்டவர் உட்பட 269 பேர் உயிரிழந்தனர் மற்றும், 500க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகப் போராடிய  மனித உரிமை ஆர்வலர் Shehan Malaka Gamage அவர்கள், குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...