உலகின் 5வது நீளமான நதி - Yenisey
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகின் மிக நீளமான நதி, ஆப்ரிக்கக் கண்டத்தின் பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கின்ற நைல் நதியா அல்லது, தென் அமெரிக்காவில் எட்டு நாடுகளின் வழியாகப் பாய்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்ற அமேசான் நதியா என்ற கேள்வி, பல புவியியல் நிபுணர்களிடையே நிலவி வருகிறது. ஏனென்றால் ஒரு நதியின் நீளத்தை தீர்மானிப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு அந்நதி எங்கு உற்பத்தியாகிறது, மற்றும் எங்கு முடிவடைகிறது என்பது தெளிவாகத் தெரிந்தால்மட்டுமே அது சாத்தியமாகும். எனவே, இப்பூமிக்கோளத்தில் உள்ள பல நதிகளின் நீளம், தோராயமானது மற்றும் பெரும்பாலும் மாறுபடுகின்றது. இவ்வாறு அளவிடப்பட்டுள்ள நதிகளில், உலகின் ஐந்தாவது நீளமான நதி, ஏனிசேய் (Yenisey') என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நதி, 5,539 கிலோ மீட்டர் நீளம்கொண்டது. இது ஆர்டிக் பெருங்கடலில் கலக்கும் மிக நீளமான நதியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஏனிசேய் நதி, சைபீரியாவின் மூன்று பெரிய நதிகளில் ஒன்றாகும். இவைகள் யாவும் ஆர்க்டிக் பெருங்கடல் வடிகால் பகுதிகளில் வந்து சேர்கின்றன. ஏனிசேய் நதி, மங்கோலியா நாட்டில் உற்பத்தியாகி, வடக்கு நோக்கி பாய்ந்து ஏனிசை வளைகுடாப் பகுதியில் உள்ள காராக் கடலில் கலக்கிறது. இந்த நதி தொகுப்பு, மத்திய சைபீரியாவின் மிகப்பெரிய வடிகாலை உருவாக்குகிறது. இந்த நதியின் அதிகப்படியான ஆழம் 824 மீட்டர்கள். இதன் சராசரி ஆழம் 14 மீட்டர்கள்.
No comments:
Post a Comment