திருத்தந்தை: உக்ரைனில் இரத்த ஆறுகள் ஓடுகின்றன
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனில் இரத்த ஆறுகள் ஓடுகின்றன என்றும், அந்நாட்டில் இடம்பெறுவது வெறும் இராணுவத் தாக்குதல் அல்ல, மாறாக அது ஒரு போர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியிருப்பது குறித்து, தன் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார், திருப்பீட சமூகத் தொடர்பு அவையின், செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் முடிவுக்கு வரவும், அந்நாட்டில் அமைதி ஏற்படவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் வேண்டுகோள்கள் குறித்து வத்திக்கான் செய்தித் துறையிடம் பேசியுள்ள தொர்னியெல்லி அவர்கள், உக்ரைனிலிருந்து புலம்பெயரும் மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இரஷ்யாவின் ஆயுதப் படைகள் குறித்து தவறான தகவலைப் பரப்பும் இரஷ்யர்கள் மற்றும் வெளிநாட்டவர்க்கு, பதினைந்து ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு, இரஷ்யாவில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்ட மூன்று நாள்களுக்குப்பின், திருத்தந்தை இவ்வாறு வெளிப்படையாக நன்றி தெரிவித்துள்ளார் என்று, தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
உக்ரைன் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
உக்ரைனில், இரஷ்யாவின் ஏறத்தாழ இரண்டு இலட்சம் படைவீரர்கள் கடும் தாக்குதல்களை நடத்திவரும்வேளை, உக்ரைனிலிருந்து 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைக்கும், இரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போருக்கு எதிராக, உலக அளவில் இடம்பெறும் கடும் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், இரஷ்யா, தன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன. உக்ரைனின் அணுமின் நிலையங்களை இரஷ்யா சுற்றிவளைத்திருப்பது, மிகுந்த கவலையளிக்கின்றது என்று ஐ.நா., மார்ச் 07, இத்திங்களன்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment