Wednesday, 16 March 2022

கண்காணிப்பாளர் என்பது, கடமையுணர்வை வெளிப்படுத்துவதாகும்

 

கண்காணிப்பாளர் என்பது, கடமையுணர்வை வெளிப்படுத்துவதாகும்


இயற்கையைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் இருக்கின்ற பொறுப்புணர்வைப் புறக்கணிப்பது, இயற்கை கூறும் செய்தியைப் புறக்கணிப்பதாகும் - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 49வது அமர்வில், உணவு பெறுவதற்கு உரிமை உள்ளது என்பது குறித்து, மார்ச் 14 இத்திங்களன்று சிறப்பு அறிக்கை சமர்ப்பித்த வல்லுநர் ஒருவர் வலியுறுத்திய கருத்துக்களை திருப்பீடம் வரவேற்றுள்ளது.

விவசாயிகள் மற்றும், பழங்குடிகள், “விதை அமைப்புகளின் கண்காணிப்பாளர்களாக” ஆற்றவேண்டியதை, ஐ.நா. சிறப்புத் தூதர் வலியுறுத்தியிருப்பதை, அந்த அமர்வில் கலந்துகொண்ட திருப்பீட பிரதிநிதிகள் குழு வரவேற்றுள்ளது.

கண்காணிப்பாளர் என்பது, ஆதிக்கம் செலுத்துவது அல்ல, மாறாக, பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாகும் என்றும், இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றும், இதனைப் புறக்கணிப்பது, இயற்கை அமைப்புகளிலே இருக்கின்ற செய்தியைப் புறக்கணிப்பதாகும் என்றும், அப்பிரதிநிதிகள் கூறினர்.

பல்லுயிரின வகைகளைப் புதுப்பிப்பதைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதன் வழியாக, விவசாயிகள், அந்த பொறுப்புணர்விற்கு சிறப்பான வழியில் பதிலிறுக்கிறார்கள் என்றுரைத்த திருப்பீட பிரதிநிதிகள், தற்போதைய பெருந்தொற்றுச் சூழலில், கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கடும் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டனர் எனவும், விலைவாசி உயர்வு, அப்பாதிப்பை கூடுதலாக்கியது எனவும் எடுத்துரைத்தனர்.

பொருளாதார ஆதாயங்கள்கொண்ட தன்னலப்போக்கு, பொது நலன், ஒருமைப்பாடு மற்றும், சந்திப்புக் கலாச்சாரம் ஆகியவற்றின் விழுமியங்களுக்குப் பதிலுறுக்கத் தடையாக உள்ளதை திருப்பீடம் அறிந்தே உள்ளது என்பதையும் அவர்கள் எடுத்தியம்பினர்.

உணவை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கவும், மனிதரின் மாண்பை மையத்தில் வைக்கவுமான உணவு அமைப்புமுறைகள் திட்டமிடப்படவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளதையும், திருப்பீட பிரதிநிதிகள் ஐ.நா. கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.   


No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...