Thursday, 10 March 2022

மகளிர் மறைவல்லுநர்கள் நம் உலகிற்கு ஒளி, நம்பிக்கை

 

மகளிர் மறைவல்லுநர்கள் நம் உலகிற்கு ஒளி, நம்பிக்கை



“திருஅவையின் மகளிர் மறைவல்லுநர்கள் மற்றும், ஐரோப்பாவின் துணை பாதுகாவலர்கள்” என்ற தலைப்பில், அனைத்துலக மகளிர் நாளான மார்ச் 08, இச்செவ்வாயன்று உலகளாவிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவையின் மகளிர் மறைவல்லுநர்கள், போரினால் துன்புறும் இன்றைய நம் உலகிற்கு ஒளியையும், நம்பிக்கையையும் வழங்குகின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலக மகளிர் நாளான மார்ச் 08, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

“திருஅவையின் மகளிர் மறைவல்லுநர்கள் மற்றும், ஐரோப்பாவின் துணை பாதுகாவலர்கள்” என்ற தலைப்பில், இச்செவ்வாயன்று நடைபெற்ற உலகளாவிய கருத்தரங்கத்திற்கு அனுப்பிய செய்தியில், இந்தப் புனிதர்களின் கருத்தாழம் கொண்ட உறுதியான போதனைகள், காலத்திற்கேற்றவையாக, குறிப்பாக இக்காலத்திற்கேற்றவையாக உள்ளன என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

அவிலா தெரேசா, சியன்னா காத்ரீன், லிசியத் தெரஸ், பிங்கென் ஹில்டர்கார்டு, சுவீடன் நாட்டு பிரிஜிட், திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா ஆகிய புனிதர்களின் வாழ்வுமுறையின் சில அம்சங்கள், திருஅவை மற்றும், உலகிற்குத் தேவையான பெண்மைப் பண்பை எடுத்துரைக்கின்றன என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

துன்பங்களை எதிர்கொள்வதற்குத் துணிவு, எதார்த்தத்தை ஏற்பதற்குரிய திறன், கடவுளின் திட்டத்திற்கேற்ப மிகவும் அழகானது மற்றும், மனிதமிக்கது ஆகியவற்றை ஊக்குவிக்கும் இயல்பான ஆவல், உலகம் மற்றும், வரலாறு குறித்த தொலைநோக்கு கண்ணோட்டம் ஆகிய இன்றைய உலகிற்குத் தேவையான பெண்மைப் பண்புகளை, இப்புனிதர்களின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்கிறோம் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

திருமுழுக்கு அருளடையாளத்தில் பெற்ற திருவருள், மற்றும், நம் இதயங்களை நிரப்பும் கடவுளின் அன்பிலிருந்து கிடைக்கும் வலிமை ஆகியவை வழியாக, தூய ஆவியாருக்குக் கீழ்ப்படிவதைக் கற்றுக்கொண்டு, புனித வாழ்வுக்குச் சான்றுபகரும் வழிகளை, இப்புனிதர்கள் எடுத்துரைக்கின்றனர் எனவும், திருத்தந்தை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகையும், திருஅவையையும் பயனுள்ளதாக்குகின்ற பெண்மைப் புனிதத்துவத்தை ஊக்குவிக்க, இந்த உலகளாவிய கருத்தரங்கம் உந்துசக்தியாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்து, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...