மியான்மார் வான்வழி தாக்குதலில் கத்தோலிக்க ஆலயம் சேதம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மியான்மார் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் கயா மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டுத்தலம் ஒன்று பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
மார்ச் 8, இச்செவ்வாயன்று அதிகாலை 2 மணியளவில் மியான்மார் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் Demoso நகரின் Saun Du La கிராமத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் கூரை மற்றும் ஜன்னல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மியான்மாரின் இராணுவ ஆட்சிக்குழு கயா மாநிலம் போன்ற கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியிலுள்ள வழிப்பாட்டுத்தலங்களையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குவதாகவும், இத்தகைய தாக்குதல்களிலிருந்து வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரும் தலத்திருஅவைத் தலைவர்களின் அழைப்புகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கயா பகுதியில் ஆயுத மோதல்கள் எதுவும் இல்லாத நிலையிலும்கூட, மதத்தை அழிப்பதற்காகவும் கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றழிப்பதற்காகவும் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அருள்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மே 2021ல் இராணுவத்திற்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையிலான மோதல் வெடித்ததிலிருந்து Loikaw மறைமாவட்டத்திலுள்ள எட்டு கத்தோலிக்க வழிபாட்டுத்தலங்கள் மியான்மார் இராணுவத்தின் பீரங்கி ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மே 23, 2021 அன்று லோய்காவுக்கு அருகிலுள்ள கிராமமான Kanyantharyearல் உள்ள திருஇருதய ஆண்டவர் ஆலயம்தான் வான்வழித் தாக்குதலில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நான்கு கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டுப் பேர் பீரங்கி ஷெல் தாக்குதலில் காயமடைந்தனர். (Asia news)
No comments:
Post a Comment