உக்ரைன் நிலைமை குறித்து திருப்பீடம் ஐ.நா.வில் கவலை
மேரி தெரேசா: வத்திக்கான்
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது திருப்பீடத்திற்கு மிகுந்த கவலை தருகின்றது என்றும், இப்போர், குறைந்தது 75 இலட்சம் சிறாரின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என்றும், திருப்பீடம் ஐ.நா. வின் கூட்டங்களில் எடுத்துரைத்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் (UNHCR) 49வது அமர்வில் இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. போருக்கு அஞ்சி, சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் குடும்பங்கள், மற்றும், சிறாருக்கு அத்தியாவசிய உதவிகள் உடனடியாக வழங்கப்படுவதோடு, வருங்காலத்தில் அவர்கள் தாயகம் திரும்புவதற்கும், சமுதாயத்தோடு ஒருங்கிணைக்கப்படுவதற்கும் உதவிகளை ஆற்றுவதற்கு, உலகளாவிய சமுதாயத்திற்கு அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்பதையும் திருப்பீடம் நினைவுபடுத்தியுள்ளது.
பெற்றோரின்றி தனியாகப் புலம்பெயரும் சிறார், மனித வர்த்தகர்கள் மற்றும், ஏனைய குற்றக்கும்பல்களால் பாதிக்கப்படாமல் இருப்பதில், உலகளாவிய சமுதாயம் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருப்பீடம், உக்ரைனில் துன்புறும் மக்கள் மற்றும், போருக்கு அஞ்சி புலம்பெயரும் மக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பதற்கு ஆவலாக உள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயரும் உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமானக் கதவுகள் திறந்துவிடப்படவேண்டும், மற்றும், அவர்கள் பாதுகாப்பாக புலம்பெயர ஆவனசெய்யப்படவேண்டும் என்று கூறியுள்ள திருப்பீடம், இவ்வேளையில், உலக அளவில் நிலவும் மனிதாபிமானப் நெருக்கடிகளையும் மறந்துவிடக் கூடாது என்றும், திருப்பீடம், ஐ.நா.வைக் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment