Tuesday 15 March 2022

இந்தியாவின் 2வது பெரிய தீபகற்ப ஆறு

 

இந்தியாவின் 2வது பெரிய தீபகற்ப ஆறு



2015ம் ஆண்டில், கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆற்றுடன் இணைக்கப்பட்டது. கிருஷ்ணா-கோதாவரி டெல்டா பகுதி "இந்தியாவின் நெற்களஞ்சியம்" என்ற பெயரைப் பெற்றுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

கிருஷ்ணா ஆறு, இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகவும், இரண்டாவது பெரிய தீபகற்ப ஆறாகவும் உள்ளது. 1,300 கி.மீ. நீளம் கொண்ட கிருஷ்ணா ஆறு, மேற்கு தொடர்ச்சி மலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் மஹாபலீஸ்வர் என்ற இடத்தில் 1,300 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாய்கிறது. இது, மகாராஷ்டிரா, கர்நாடகம், மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக, ஏறத்தாழ 1,400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஹேமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கர்நாடக மாநிலத்தின் Sangli, ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா ஆகியவை கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இரு பெரிய நகரங்களாகும். துங்கபத்திரா, பீமா, மாலபிரபா, கடபிரபா, யெர்லா, முஷி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும். கிருஷ்ணா ஆற்றின் டெல்டா பகுதி, இந்தியாவில் விவசாயம் அதிகமாக இடம்பெறும் பகுதிகளில் ஒன்றாகும். இந்த ஆற்றின் வடிகால் 2,58,948 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் ஏறத்தாழ எட்டு விழுக்காடாகும். இந்த ஆற்றின் ஏறத்தாழ 2,03,000 சதுர கிலோ மீட்டர் டெல்டா பகுதி, விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இது, இந்தியாவில் சாகுபடி செய்யக்கூடிய மொத்த பகுதியில் 10.4 விழுக்காடாகும். அதேநேரம், இந்த ஆறு, உலகில் சூழவியல் பாதிப்புக்களை அதிகமாக உருவாக்கும் ஆறுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஏனென்றால் கிருஷ்ணா ஆறு, பருவமழைக் காலத்தில், குறிப்பாக, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை,  பெரிய அளவில் மண் அரிப்பை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இந்த ஆற்றின் ஆழம், 23 மீட்டராகவும் இருக்கும். கிருஷ்ணா ஆற்றில், பவானி சாகர், ஸ்ரீசைலம், பிரகாசம் பாராஜ், அமர், நாகர்ஜூன், நாராயண்பூர், அலமட்டி உட்பட நிறைய நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் தண்ணீர்ப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2015ம் ஆண்டில், கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆற்றுடன் இணைக்கப்பட்டது. கிருஷ்ணா-கோதாவரி டெல்டா பகுதி "இந்தியாவின் நெற்களஞ்சியம்" என்ற பெயரைப் பெற்றுள்ளது. கிருஷ்ணா ஆற்றின் முகத்துவாரத்தில் எஞ்சியுள்ள சதுப்புநிலக் காடுகளைப் பராமரிப்பதற்காக, வனவியல் சரணாலயமும் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர் கிருஷ்ணா ஆறுபோன்று அமைதியாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்வதற்கு மராத்திய மொழியில், santh vaahate krishnamaai" என்ற பழமொழி உள்ளது. கிருஷ்ணாவின் முக்கிய துணை ஆறு துங்கபத்தரா. துங்கா, பத்ரா ஆகிய இரு ஆறுகளும் இணைவதால், இது இப்பெயரைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 531 கிலோ மீட்டர் நீளம் கொண்ட துங்கபத்ராவின் வடிகால் பகுதி 71,417 சதுர கிலோ மீட்டர் ஆகும்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...