செய்திகள் - 06.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை காமரூன் ஆயர்களிடம் : முஸ்லிம்களுடன் உரையாடலை அதிகப்படுத்துங்கள்
2. திருத்தந்தைக்கு அர்ஜென்டீனா சிறாரிடமிருந்து ஐம்பதாயிரம் கடிதங்கள்
3. செப்.28, 3வது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காகச் செபிக்கும் நாள்
4. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை, அனைத்துலக சமுதாயம் வன்மையாய்க் கண்டிக்க வேண்டும், இலங்கை ஆயர்கள்
5. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பகைமைச் செயல்கள் மதம் மற்றும் இன அழிப்பின் மீதான போர், La Civilta Cattolica
6. எழுத்தறிவு மக்களின் வாழ்வை மாற்றி அவர்களைப் பாதுகாக்கிறது, யுனெஸ்கோ இயக்குனர்
7. ஐ.நா.வின் சுனாமிப் பேரலை பரிசோதனைப் பயிற்சிகள்
8. எபோலா நோயைத் தடுப்பதற்கு அனைத்துலக அளவில் செயல்பட ஐ.நா. அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை காமரூன் ஆயர்களிடம் : முஸ்லிம்களுடன் உரையாடலை அதிகப்படுத்துங்கள்
செப்.06,2014.
ஆப்ரிக்காவில் இடம்பெறும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளை ஊக்கமிழக்கச்
செய்வதற்கு முஸ்லிம்களுடன் வாழ்வின் உரையாடலை நடத்துமாறு காமரூன் ஆயர்களை
ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அட்
லிமினா சந்திப்பின் இறுதியில் காமரூன் நாட்டின் 31 ஆயர்களை
இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்த
திருத்தந்தை, அந்நாட்டின் சில மறைமாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகளவில் இருப்பதைக் குறிப்பிட்டு, அமைதியான நல்லிணக்க வாழ்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையில், அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்.
ஆப்ரிக்காவின்
சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் பலியாகி வரும் வன்முறைகள்
நிறுத்தப்படுவதற்கு ஆயர்கள் உழைக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் நற்செய்திக்குச் சான்றாக வாழ்வதற்கு ஆயர்கள் உதவுமாறும் கூறினார்.
உலகாயுதப்போக்கும்,
எதுவும் நிலையற்றது என்ற கோட்பாடும் ஆப்ரிக்காவில் இக்காலத்தில் வேரூன்றி
வரும்வேளை பொதுநிலையினரை உருவாக்குவதில் ஆயர்கள் கவனம் செலுத்துமாறும்
கூறிய திருத்தந்தை, திருஅவைக்கும் அரசுக்கும் உள்ள உறவு, நலவாழ்வு, கல்வி, ஏழைகள் நலவாழ்வு போன்ற சமூக விவகாரங்கள் குறித்தும் பேசினார்.
பலர்
அடிப்படை வசதியின்றி வாழும் அந்நாட்டில் குருகுலத்தார் திருஅவை
சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஆயர்கள் விழிப்பாய்
இருக்குமாறும், குருக்கள் மத்தியில் ஒற்றுமை இருக்கவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
மேற்கு
ஆப்ரிக்க நாடான காமரூனில் 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். அதாவது
அந்நாட்டின் 24 மறைமாவட்டங்களில் 42 இலட்சத்து 50 ஆயிரம் கத்தோலிக்கர்
உள்ளனர். இந்நாடு, மேற்கே நைஜீரியாவையும், கிழக்கே சாட் மற்றும் மத்திய ஆப்ரிக்கக் குடியரசையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இப்பகுதி Boko Haram முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தைக்கு அர்ஜென்டீனா சிறாரிடமிருந்து ஐம்பதாயிரம் கடிதங்கள்
செப்.06,2014. "இயேசு நல்ல ஆயர். நாம் பாவிகளாக இருந்தாலும் அவர் நம்மைத் தேடுகிறார் மற்றும் நமக்கு அருகில் இருக்கிறார், உண்மையில் நாம் பாவிகள்" என்ற சொற்களை, தன் Twitter செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அர்ஜென்டீனா நாட்டுச் சிறாரிடமிருந்து ஐம்பதாயிரம் கடிதங்களை இம்மாதத்தில் பெறவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“தாங்கள் வளர்ந்து பெரியவர்களான பின்னர் எப்படி இருக்க விரும்புகிறோம்” என்பதை விளக்கும் அர்ஜென்டீனா நாட்டுச் சிறாரின் ஐம்பதாயிரம் கடிதங்களை இம்மாதம் 18ம் தேதி பெறவுள்ளார் திருத்தந்தை.
அர்ஜென்டீனாவின்
கோர்தோபா மாநிலத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 25ம் தேதியன்று மிதி வண்டியில்
பயணத்தைத் தொடங்கியுள்ள எட்டுப்பேர் இம்மாதம் 18ம் தேதி உரோம் வந்தடைந்து
இக்கடிதங்களைத் திருத்தந்தையிடம் கொடுப்பார்கள். இந்த எட்டுப்பேரும்
தாங்கள் கடந்துவந்த பயணத்தில் இக்கடிதங்களைச் சிறாரிடமிருந்து பெற்றனர்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. செப்.28, 3வது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காகச் செபிக்கும் நாள்
செப்.06,2014.
வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை வத்திக்கானில் இடம்பெறும்
3வது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காகச் சிறப்பாகச் செபிப்பதற்கென ஒரு செப
நாளை அறிவித்துள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
“குடும்பத்திற்கு நற்செய்தி அறிவிப்பதில் எதிர்நோக்கப்படும் மேய்ப்புப்பணி சவால்கள்” என்பது குறித்து நடக்கவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்காக, இம்மாதம் 28ம் தேதி ஞாயிறன்று சிறப்பாகச் செபிக்குமாறு உலகின் அனைத்துத் தலத்திருஅவைகள், பங்குகள், துறவற நிறுவனங்கள், பக்த சபைகள், பக்த இயக்கங்கள் ஆகிய அனைத்தையும் கேட்டுள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
சிறப்பு ஆயர் மாமன்றம் நடக்கும் நாள்கள் மற்றும் அம்மன்றம் நடப்பதற்கு முந்தைய நாள்களிலும் சிறப்பாகச் செபிக்குமாறு மேலும் கேட்டுள்ளது உலக ஆயர் மாமன்றச் செயலகம்.
ஒவ்வொரு நாளும் உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் இக்கருத்துக்காகச் சிறப்பான செபங்கள் இடம்பெறுகின்றன எனவும் அச்செயலகம் கூறியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை, அனைத்துலக சமுதாயம் வன்மையாய்க் கண்டிக்க வேண்டும், இலங்கை ஆயர்கள்
செப்.06,2014. ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை, அனைத்துலக
சமுதாயம் தன்னால் இயலக்கூடிய வகையில் வன்மையாய்க் கண்டிக்க வேண்டும்
மற்றும் அவர்களின் வன்முறைச் செயல்கள் மானிடத்துக்கு எதிரான குற்றமாகக்
கருதப்பட்டு அவர்கள்மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை
ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும், அம்மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவர்களுக்காகச் செபிப்பதாகவும் கூறியுள்ள ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஐ.நா.பொதுச்செயலரும் இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே பேசியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
ஈராக்கில் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிச் செல்லும் பயணத்தில் பலர் கொலைசெய்யப்படுகின்றனர், சிறார் பசியாலும் தாகத்தாலும் இறக்கின்றனர், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர், இப்படி எல்லா வகையான வன்முறைகளும் நடத்தப்படுகின்றன என, திருத்தந்தை கூறியதையும் இலங்கை ஆயர்கள் தங்களின் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இவையனைத்தும் கடவுளையும், மனித சமுதாயத்தையும் கடுமையாய்ப் புண்படுத்துகின்றது மற்றும் கடவுளின் பெயரால் வெறுப்புணர்வுச் செயல்களும், போரும் இடம்பெறக் கூடாது என்று திருத்தந்தை கூறியதையும் இலங்கை ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புனித பூமியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையில் நடக்கும் மோதல்களில் அப்பாவிகள் கொல்லப்படுவதையும், பாகுபாடற்ற முறையில் குண்டுகள் வீசப்படுவதையும் இலங்கை ஆயர்கள் தங்களின் அறிக்கையில் கண்டித்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பகைமைச் செயல்கள் மதம் மற்றும் இன அழிப்பின் மீதான போர், La Civilta Cattolica
செப்.06,2014.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடாக
அறிவித்துள்ள ஐஎஸ்ஐஎஸ் முஸ்லிம் தீவிரவாதிகளின் பகைமைச் செயல்கள் மதம்
மற்றும் இன அழிப்பின் மீதான போர் என்று குற்றம் சாட்டியுள்ளது La Civilta Cattolica இதழ்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் நடவடிக்கைகள் குறித்து தனது ஆசிரியர் பகுதியில் அலசியுள்ள இயேசு சபையினரின் இந்த La Civilta Cattolica இதழ், இந்த அமைப்பினர் அறிவித்துள்ள இஸ்லாமிய நாட்டுக்கு எதிராக இராணுவப் பதிலடி தேவை எனப் பரிந்துரைத்துள்ளது.
இஸ்லாமிய
மரபின் பயங்கரவாதக் கருத்துருவாக்கத்தை அனைத்து முஸ்லிம்களின்
இதயங்களிலிருந்து அழிப்பதற்கு உலகின் எல்லா இஸ்லாமியத் தலைவர்களுக்கும்
கடமை உள்ளது என்பதையும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள ஈராக்கிய பகுதிகளை மீட்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு அவை, ஐ.நா. படைகளை அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
இரண்டாயிரம்
ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்துவரும் நினிவே பகுதியை மீட்பதற்கு ஈராக்
பாதுகாப்புப் படைகள் மற்றும் குர்திஸ்தான் படைகளோடு ஐ.நா. படைகளும் இணைந்து
செயல்படுமாறு கேட்டுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
ஆதாரம் : CWN
6. எழுத்தறிவு மக்களின் வாழ்வை மாற்றி அவர்களைப் பாதுகாக்கிறது, யுனெஸ்கோ இயக்குனர்
செப்.06,2014.
எழுத்தறிவு மக்களின் வாழ்வை மாற்றுவதோடு அது அவர்களைப் பாதுகாக்கிறது என்ற
ஓர் எளிய உண்மையை நினைப்பதற்கு உலக எழுத்தறிவு தினம் வாய்ப்பாக உள்ளது
என்று, யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 08, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் உலக எழுத்தறிவு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள Bokova அவர்கள், வறுமையைக் குறைத்து வேலைவாய்ப்பைப் பெறவும், அதிகமான ஊதியம் பெறவும், சுயமதிப்பில் வளரவும் மக்கள் ஒவ்வொருவருக்கும் எழுத்தறிவு உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று
உலகில் வயதுவந்தவர்களில் எண்பது கோடிப் பேர் எழுத்தறிவற்றவர்கள்.
இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள். 25 கோடிக்கு மேற்பட்ட
சிறாருக்கு ஒருவரிகூட வாசிக்கத் தெரியாது. இவர்களில் பாதிக்கும்
மேற்பட்டோர் குறைந்தது நான்காண்டுகள் பள்ளிக்குச் சென்றிருந்தாலும்
இந்நிலையைக் காண முடிகின்றது என்றும் யுனெஸ்கோ இயக்குனரின் செய்தி
கூறுகிறது.
இவ்வாண்டு உலக எழுத்தறிவு தினம், “எழுத்தறிவும் உறுதியான வளர்ச்சியும்” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, உலக
எழுத்தறிவு தினத்தை 1965ம் ஆண்டில் அறிவித்தது. அத்தினம் 1966ம் ஆண்டு
செப்டம்பர் 8ம் தேதிதான் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
7. ஐ.நா.வின் சுனாமிப் பேரலை பரிசோதனைப் பயிற்சிகள்
செப்.06,2014. சுனாமி பேரலை ஏற்படும் காலத்தில் நாடுகள் உடனடியாகச் செயல்படுவதற்கு உதவியாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் வருகிற வாரத்தில் இரு பரிசோதனைப் பயிற்சிகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இம்மாதம் 9,10 தேதிகளில் நடத்தவுள்ள முதல் பரிசோதனைப் பயிற்சி, இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் 9.1 ரிக்டர் அளவு நில அதிர்ச்சியைத் தூண்டும், இரண்டாவது பயிற்சி, ஈரான் மற்றும் பாகிஸ்தானுக்குத் தெற்கேயுள்ள Makran பள்ளத்தாக்கில் 9.0 ரிக்டர் அளவு நில அதிர்ச்சியைத் தூண்டும் என ஐ.நா. அறிவித்துள்ளது.
2004ம்
ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரலையால்
பாதிக்கப்பட்ட 24 நாடுகள் இப்பயிற்சியில் பங்கெடுக்கும் எனவும் ஐ.நா.வின்
யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர், மியான்மார், பங்களாதேஷ், மலேசியா, மாலத்தீவுகள், ஓமன், ஏமன் என 24 நாடுகள் இப்பயிற்சியில் பங்கெடுக்கவுள்ளன.
ஆதாரம் : UN
8. எபோலா நோயைத் தடுப்பதற்கு அனைத்துலக அளவில் செயல்பட ஐ.நா. அழைப்பு
செப்.06,2014.
மேற்கு ஆப்ரிக்காவில் பரவியுள்ள எபோலா உயிர்க்கொல்லி நோயைத் தடுப்பதற்கு
எல்லா வழிகளிலும் முயற்சிகள் எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக
ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
எபோலா நோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகள், குறிப்பாக, கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகள் ஐ.நா.வின் உதவியை அதிகமாக நாடுவதாகவும், இந்நாடுகளுக்கு, பெருமளவான மருத்துவர்கள், தாதியர்கள், படுக்கைகள், வாகனங்கள் இன்னும் பிற உதவிகளை அடுத்த சில வாரங்களுக்கு ஐ.நா.நிறுவனம் அனுப்பும் எனவும் தெரிவித்தார் பான் கி மூன்.
இதற்கிடையே, சியெரா லியோனில் இந்நோயை மேலும் பரவாமல் தடுப்பதற்கென, இம்மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாமென அந்நாட்டு அரசு கேட்டுள்ளது.
அண்மை மாதங்களில் எபோலா நோயால் கினி, லைபீரியா, சியெரா லியோன், நைஜீரியா ஆகிய நாடுகளில் ஏறக்குறைய 2,100 பேர் இறந்துள்ளனர்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment