செய்திகள் - 05.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மறையுரை : திருஅவை சில மாற்றங்களை நம் அனைவரிடமும் கேட்கிறது
2. திருத்தந்தை, பானமா அரசுத்தலைவர் சந்திப்பு
3. திருத்தந்தை, Andorra பிரதமர் சந்திப்பு
4. திருத்தந்தை : ஒதுக்கப்படும் ஒரு கலாச்சாரத்துக்குள் சிறார் பாதிக்கப்டுவதை நாம் அனுமதிக்கக் கூடாது
5. ஈராக்கிலும் உலகிலும் அமைதியின் நம்பிக்கையாக விளங்குகிறார் அன்னை தெரேசா, கர்தினால் கிரேசியஸ்
6. ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்
7. சிறார்க்கெதிரான வன்முறை ஒழிக்கப்பட உலகம் துரிதமாய்ச் செயல்பட வேண்டும், யூனிசெப்
8. உலகில் இடம்பெறும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகச் செயல்பட வேண்டும், உலக நலவாழ்வு நிறுவனம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் மறையுரை : திருஅவை சில மாற்றங்களை நம் அனைவரிடமும் கேட்கிறது
செப்.05,2014. திருஅவை சில மாற்றங்களை நம் அனைவரிடமும் கேட்கிறது, அழியக்கூடிய அமைப்புமுறைகளைப் பின்னுக்குத் தள்ளிவைக்கவும் நம்மிடம் கேட்கிறது, அத்தகைய அமைப்புமுறைகள் நமக்குத் தேவையில்லை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், நற்செய்தி கூறும் சட்டம் புதுமையைக் கொணரவல்லது என்பதை வலியுறுத்தும் புதிய திராட்சை மது, புதிய மது தோற்பை பற்றி இயேசு பேசும், இந்நாளைய நற்செய்தியை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.
நற்செய்தி புதுமையைக் கொணர்வது, நற்செய்தி ஒரு கொண்டாட்டம், மகிழ்வான இதயத்திலும், புதுப்பிக்கப்பட்ட இதயத்திலும் மட்டுமே நற்செய்தியை முழுமையாக வாழ முடியும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, பரிசேய இறையியலாளர்களாகிய சட்ட வல்லுனர்களின் மனநிலையை நற்செய்தியின் உணர்வில் நாம் புரிந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நற்செய்தி இவர்களிலிருந்து மாறுபட்ட போக்கைக் கொண்டுள்ளது என்றும், நற்செய்தி சட்டத்தின் நிறைவுக்கு இட்டுச் செல்கின்றது, ஆனால் அது புதிய வழியில், புதிய திராட்சை மது தோற்பையில் அழைத்துச் செல்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
பரிசேயர்கள் இயேசுவிடம், அவரின் சீடர்கள் நோன்பிருப்பதில்லை என்ற கேள்வியைக் கேட்டு இயேசுவை திணறடிக்க விரும்பினர், ஆனால் இயேசு அவர்கள் வலையில் சிக்காது, கொண்டாட்டம் மற்றும் புதியவை பற்றி அவர்களிடம் கூறினார் எனவும் திருத்தந்தை மறையுரையில் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை, பானமா அரசுத்தலைவர் சந்திப்பு
செப்.05,2014. பானமா நாட்டு அரசுத்தலைவர் Juan Carlos Varela Rodríguez அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட
நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தோமினிக்
மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் பானமா அரசுத்தலைவர் Varela Rodríguez.
பானமா நாட்டுக்கும் திருஅவைக்கும் இடையேயுள்ள ஒத்துழைப்பு, அந்நாடு சந்திக்கும் சில சமூகப் பிரச்சனைகள், குறிப்பாக, இளையோர், ஏழைகள், நலிந்தோர் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், பானமா நாடு அமைதியைக் கட்டியெழுப்புவது குறித்தும், நடக்கவிருக்கும் 7வது அமெரிக்க மாநாடு குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
மத்திய அமெரிக்க நாடான பானமா, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் 2வது இடத்தில் உள்ளது. 2013ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மனித முன்னேற்ற குறியீட்டில் இலத்தீன் அமெரிக்காவில் 5வது இடத்தையும், உலகில்
59வது இடத்தையும் கொண்டுள்ளது. பானமா நாட்டுக் காடுகளில் வெப்பமண்டலத்
தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் பெருமளவில் உள்ளன. இங்குள்ள சில
உயிரினங்கள் உலகில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாதவையாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை, Andorra பிரதமர் சந்திப்பு
செப்.05,2014. ஐரோப்பியக் குடியரசுகளில் ஒன்றான Andorra பிரதமர் Antoni Martí அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் Andorra பிரதமர் Martí.
Andorra வுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்லுறவு, இவ்விரு நாடுகளுக்கும் இடையே 2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அந்நாட்டின் வளர்ச்சியில் நாட்டுக்கும் தலத்திருஅவைக்கும் இடையேயுள்ள தொடர்பு, இன்னும் சில சமூக விவகாரங்கள் போன்றவை இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
Principality of Andorra என அதிகாரப்பூர்வப் பெயரைக் கொண்டுள்ள Andorra குடியரசு, தென்மேற்கு ஐரோப்பாவில் Pyrenee மலைப்பகுதியின் கிழக்கே இஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய குடியரசாகும்.
மேலும், "ஈராக்கில் துன்புறும் அனைவருக்காவும் நான் தினமும் செபிக்கின்றேன், தயவுகூர்ந்து நீங்களும் என்னோடு சேர்ந்து செபியுங்கள்" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை : ஒதுக்கப்படும் ஒரு கலாச்சாரத்துக்குள் சிறார் பாதிக்கப்டுவதை நாம் அனுமதிக்கக் கூடாது
செப்.05,2014. இவ்வியாழன் மாலையில் "Scholas Occurentes" நிறுவன இயக்குனர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே புரிந்துகொள்ளுதலையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்ப்பதற்கு இந்நிறுவனத்தினர் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்.
வன்முறையும்
பணமும் மேலோங்கி நிற்கும் தூக்கியெறியும் ஒரு கலாச்சார அமைப்புக்குள்
சிறாரும் முதியோரும் பலிகடா ஆவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றும்
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆரம்பப்
பள்ளிப் பருவத்தில் வகுப்பில் தான் செய்த தவறுக்கு ஆசிரியரிடம்
மன்னிப்புக் கேட்குமாறு தனது தாய் கூறியதை இச்சந்திப்பில் நினைவுகூர்ந்த
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று பல பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியரைக் கண்டிப்பதையும் காண முடிகின்றது என்றும் குறிப்பிட்டார்.
அர்ஜென்டீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் "Scholas Occurentes" பன்னாட்டு நிறுவனம், உலகின் கல்வி நிறுவனங்களில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட உறப்பினர்களை ஒன்றிணைத்து புரிந்துகொள்ளுதலையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சித்து வருகிறது.
இவ்வாரத்தில் உரோம் நகரின் ஒலிம்பிக் அரங்கத்தில் நடந்த அமைதிக்கான விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த நிறுவனங்களில், Scholas நிறுவனம் முக்கிய அங்கம் வகித்தது. இந்த "Scholas Occurentes" நிறுவனம் உருவானதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ஈராக்கிலும் உலகிலும் அமைதியின் நம்பிக்கையாக விளங்குகிறார் அன்னை தெரேசா, கர்தினால் கிரேசியஸ்
செப்.05,2014. ஏழைகளிலும் ஏழைகளில் கிறிஸ்துவைச் சந்தித்த அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், இன்றைய நமது உலகின் அமைதிக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறார் என்று கூறினார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
செப்டம்பர் 05, இவ்வெள்ளியன்று அருளாளர் அன்னை தெரேசாவின் நினைவு நாள் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஈராக்கில் கிறிஸ்தவர்களும், இன்னும் உக்ரேய்ன் நாட்டிலும், உலகின்
பிற பகுதிகளிலும் மக்கள் மிகுந்த வேதனைகளைச் சந்தித்துவரும் இந்நாள்களில்
அன்னை தெரேசா நம்பிக்கையை வழங்குகிறார் என்று கூறினார்.
பிறரன்பு மறைபோதகச் சபையைத் தொடங்கிய அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், ஏழைகளிலும் ஏழைகள் மீது தான் கொண்டிருந்த கருணை மற்றும் அன்பை இயேசு வழியாக வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் கர்தினால் கிரேசியஸ்.
நான் பிறப்பால் அல்பேனியர், குடியுரிமையால் நான் ஓர் இந்தியர், விசுவாசத்தால் நான் ஒரு கத்தோலிக்க அருள்சகோதரி, எனது அழைப்பால் இவ்வுலகுக்கு உரியவர், எனது
இதயத்தால் நான் இயேசுவின் இதயத்துக்கு முழுவதும் உரியவர் என்று அன்னை
தெரேசா கூறியதையும் நினைவுபடுத்தினார் கர்தினால் கிரேசியஸ்.
அருளாளர் அன்னை தெரேசா சபையினர் 132 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
ஆதாரம் : AsiaNews
6. ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பான் கி மூன் வலியுறுத்தல்
செப்.05,2014.
உலகினர் ஒவ்வொருவரும் பிறருக்குக் கொடுத்து வாழ்வதைத் தொடர்ந்து
கடைப்பிடிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் இவ்வெள்ளியன்று
அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட 2வது அனைத்துலக பிறரன்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், எவ்வித இக்கட்டான நேரங்களிலும் பிறரன்புக்கு இணையாக வேறு எதையும் வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
ஐ.நா. நிறுவனங்களின் பணிகளில் பிறரன்பு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், கடுமையான நிதிப் பற்றாக்குறைச் சூழல்களிலும், எவ்வித
நிதி ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் தாராளத்துடனும் கனிவுடனும் பணி
செய்வதற்குப் பிறரன்பு நம்மைத் தூண்டுகின்றது என்றும் கூறியுள்ளார்.
ஏழைகளிலும் ஏழைகளுக்குப் பணி செய்த அருளாளர் அன்னை தெரேசாவின் வாழ்வு மற்றும் நற்பணிகளால் தூண்டப்பட்டு, அவரின் நினைவு நாளில் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
அருளாளர்
அன்னை தெரேசாவின் நினைவு நாளான செப்டம்பர் 5ம் தேதியை அனைத்துலக பிறரன்பு
தினமாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது ஐ.நா. நிறுவனம். ஹங்கேரி நாட்டின்
முயற்சியால் இத்தினம் ஐ.நா. பொது அவையால் அங்கீகரிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
7. சிறார்க்கெதிரான வன்முறை ஒழிக்கப்பட உலகம் துரிதமாய்ச் செயல்பட வேண்டும், யூனிசெப்
செப்.05,2014. சிறார்க்கெதிரான வன்முறை உலகம் தழுவிய ஒன்றாகவும், சமுதாயங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது என்று,ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
சிறார்க்கெதிரான வன்முறை குறித்து 190 நாடுகளில் ஆய்வு செய்து இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், உலகில் 2 வயதுக்கும் 14 வயதுக்கும் உட்பட்ட சிறாரில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பாகத்தினர், அதாவது ஏறக்குறைய நூறு கோடிச் சிறார் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
உண்மையில், உலகில் இடம்பெறும் கொலைகளில் ஐந்தில் ஒரு பகுதியினர் இருபது வயதுக்குட்பட்ட சிறார் எனவும், 2012ம் ஆண்டில் ஏறக்குறைய 95 ஆயிரம் சிறார் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் யூனிசெப் நிறுவனத்தின் சிரார் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் Susan Bissell கூறினார்.
உலகில் சிறார்க்கெதிரான வன்முறை ஒவ்வொரு நாளும் நடக்கின்றது என்றும், இருபது வயதை அடையும் முன்னரே, பத்து சிறுமிகளுக்கு ஒருவர் வீதம், அதாவது ஏறக்குறைய 12 கோடிச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
ஆதாரம் : UN
8. உலகில் இடம்பெறும் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாகச் செயல்பட வேண்டும், உலக நலவாழ்வு நிறுவனம்
செப்.05,2014. உலகில், ஒவ்வொரு நாற்பது நொடிகளுக்கு ஒருவர் வீதம், அதாவது ஒவ்வோர் ஆண்டும் எட்டு இலட்சத்துக்கு மேலான மக்கள் தற்கொலை செய்துகொள்வதால் இதனை தடுத்து நிறுத்துவதற்கு நாடுகள் உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று, உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
உலக நலவாழ்வு நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட இவ்வறிக்கை குறித்துப் பேசிய அந்நிறுவனப் பொது இயக்குனர் Margaret Chan அவர்கள், தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு, தற்சமயம் 28 நாடுகளில் மட்டுமே தேசிய தற்கொலைத் தடுப்பு யுக்திகள் கையாளப்படுகின்றன என்றும் கூறினார்.
இன்று உலகில் நடக்கும் தற்கொலைகளில் 75 விழுக்காடு வருவாய் குறைவாயுள்ள நாடுகளில் இடம்பெறுவதாகவும், வடகொரியா, இந்தியா, இந்தோனேஷியா நேபாளம் ஆகிய நாடுகளில் தற்கொலைகள் அதிகம் எனவும் இவ்வறிக்கை கூறுகின்றது.
அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள் என விகிதாச்சார முறைப்படிப் பார்க்கும்போது, இலங்கை நான்காவது இடத்திலும், இந்தியா 11வது இடத்திலும் உள்ளன.
பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிடுவது, தூக்குமாட்டிக்கொள்வது, துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது, நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை உயரத்தில் இருந்து குதித்துவிடுவது போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படும் தற்கொலை வழிமுறைகளாக உள்ளன.
No comments:
Post a Comment