செய்திகள் - 01.09.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : நற்செய்தியை வாசிப்பதன்வழி இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் பெறுகிறோம்
2. திருத்தந்தை: உலகப்போக்குகளில் மூழ்கி சாரமற்ற உப்பாகிவிடாதீர்கள்
3. திருத்தந்தை : படைப்பை மதிப்பதன் மூலம் மக்களின் வாழ்வைப் பாதுகாக்கமுடியும்
4. பிலிப்பீன்ஸில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுடன் திருத்தந்தை உணவருந்துவார்
5. மியான்மாரில் இசைவழி நற்செய்தி அறிவிப்புத் திட்டம்
6. காசா பகுதியின் மோதல்களால் விவசாயம் மற்றும் மீன்வளத்துறைகளில் 10 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பு
7. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : நற்செய்தியை வாசிப்பதன்வழி இயேசுவையும் அவர் வார்த்தைகளையும் பெறுகிறோம்
செப்.01,2014. ஞானத்தின் வார்த்தைகள் கொண்டு மற்றவர்களை நம்பவைக்க நாம் நற்செய்தியை அறிவிக்கவில்லை, மாறாக தாழ்ச்சி உணர்வுடன் இயேசுவின் வல்லமையை நம்பி அதனைச் செய்கிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோடைவிடுமுறைக்காலம்
முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முதல் தேதி தான் தங்கியிருக்கும்
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை
வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
நற்செய்தியை அறிவிக்க தர்க்க வாதங்களையோ வார்த்தை ஜாலங்களையோ நம்பவில்லை, மாறாக
தூய ஆவியையும் அவர் வல்லமையையும் நம்புவதாக புனித பவுல்
கொரிந்தியருக்கு எழுதியத் திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளதைச்
சுட்டிக்காட்டினார்.
இறைவார்த்தை என்பது மனித வார்த்தைகளிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் இறைவார்த்தை என்பது கிறிஸ்துவே, அந்த
கிறிஸ்துவை நாம் பெறுவதோ அவரின் வார்த்தையாம் நற்செய்தியை வாசிப்பதன்
வழியாகவே என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் காரணமாக நாம் ஒவ்வொரு நாளும் நற்செய்தி வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நற்செய்தியை வாசிக்கும் நாம், கிறிஸ்துவைப்போல் எளிய உள்ளம் கொண்டவர்களாக அதனை வாசித்து, அவரையும் அவர் வார்த்தைகளையும்ப்பெறவேண்டும், அதேவேளை நம் இதய அர்ச்சிப்பிற்காக தூய ஆவியை நோக்கிச் செபிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவைப்
பெறவும் அவர் வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ளவும் விவிலியமே உதவியாக உள்ளது
என்பதை மீண்டும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கையடக்க விவிலியப் பிரதி ஒன்றை அனைவரும் கொண்டிருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை: உலகப்போக்குகளில் மூழ்கி சாரமற்ற உப்பாகிவிடாதீர்கள்
செப்.01,2014.
உலகாயுதப்போக்குகளில் தங்களை இழந்து சாரமற்ற உப்பாக
மாறிவிடாமல் கிறிஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவைகளை
மாற்றியமைக்கும் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என அழைப்பு
விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் இவ்வுலகப் பாதையில்
தங்களை இழந்துவிடாமல் கிறிஸ்துவின் பாதையில் அவரைப்
பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும் என தன் ஞாயிறு மூவேளை செப
உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக போக்குகளில் தங்களை இழந்து, சாரமற்ற உப்பாகும் கிறிஸ்தவர்களால் எவ்விதப் பயனும் இல்லை என்றார்.
இயேசுவின் சிந்தனைக்கும் சீடர்களின் சிந்தனையோட்டத்திற்கும் இடையே விளங்கிய வேறுபாட்டை, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் எடுத்துரைப்பது குறித்து, மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப்
போக்குகளை விட்டுவிட்டு இறைவிருப்பத்தை அறிந்துகொள்வதில் நாம் கவனம்
செலுத்தவேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.
இறை வழியில் நாம் நடைபோட வேண்டுமெனில், நற்செய்தியின் வாழ்வாதாரத்தினால் நாம் தொடர்ந்து புதுப்பிக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கான வழியாக, நற்செய்தியை தினமும் வாசிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்..
ஒவ்வொரு
கிறிஸ்தவரும் ஒரு கையடக்க விவிலியப் பிரதியை தங்களுடன்
எப்போதும் வத்திருக்க வேண்டும் என்ற அழைப்பை மீண்டுமொருமுறை இஞ்ஞாயிறு
மூவேளை செப உரையின்போது விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : படைப்பை மதிப்பதன் மூலம் மக்களின் வாழ்வைப் பாதுகாக்கமுடியும்
செப்.01,2014. இத்தாலிய ஆயர் பேரவை சிறப்பித்த 'படைப்பைப் பாதுகாக்கும் நாள்' குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டு, இந்நாளுக்கென இத்தாலிய ஆயர்கள் எடுத்துள்ள தலைப்பு மிக முக்கியமான ஒன்று என தெரிவித்த திருத்தந்தை, 'படைப்பைப் பராமரிக்க கற்றுக்கொடுத்தல் என்பது, நம் நாடு மற்றும் நகர்களின் நலனுக்காகவே' என்ற தலைப்பு குறித்து தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.
சுற்றுச்சூழலையும் படைப்பையும் மதிப்பதன் மூலம் மக்களின் நலன் மற்றும் வாழ்வைப் பாதுகாக்க முடியும் என்ற குடிமக்களின், அமைப்புகளின், நிறுவனங்களின் அர்ப்பணத்தை மேலும் பலப்படுத்த, இத்தினமும்
அதன் இவ்வாண்டு தலைப்பும் உதவும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தன்
மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பிலிப்பீன்ஸில் நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுடன் திருத்தந்தை உணவருந்துவார்
செப்.01,2014. கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற நில நடுக்கத்தில்
உயிர்பிழைத்த மக்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தின்போது உணவருந்துவார் என பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
வரும் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இலங்கைத் திருப்பயணத்தைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸில் திருப்பயணம் மேற்கொள்ளும்போது இம்மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவார் என்றார் Tagbilaran மறைமாவட்ட ஆயர் Leonardo Medroso .
வெள்ளப்பெருக்கு மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 30 பேருடன், ஜனவரி மாதம் 17ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணவருந்துவார் என ஏற்கனவே Palu பேராயர் John Du அறிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி 15 முதல் 19 வரை பிலிப்பீன்ஸில் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : UCAN
5. மியான்மாரில் இசைவழி நற்செய்தி அறிவிப்புத் திட்டம்
செப்.01,2014. மியான்மாரில் கிறிஸ்தவம் அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நாட்டுக் கவிஞர்கள் ஒன்றுகூடி இசைவழி நற்செய்தி அறிவிப்புத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
பல்வேறுக் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக 'நாசரேத்தின் இயேசு' என்ற இசை நிகழ்ச்சியை அண்மையில் நடத்திய மியான்மார் இசைக்கலைஞர்கள், 'திருவெளிப்பாடு' என்ற இசை ஆல்பத்தையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
நற்செய்தி அறிவிப்பின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வுகள், அந்நாட்டின் ஏழு முக்கிய இனங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இசைத்திறமையை
நற்செய்தி அறிவித்தல் பணிக்கெனப் பயன்படுத்துவதை இறைத்தூண்டுதலாகவே
உணர்வதாக அறிவித்தார் மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின்
சமூகத்தொடர்புத் துறைத்தலைவர் அருள்பணி லியோ மாங்க்.
மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு, 2010ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கவேண்டும் , எனினும், அப்போதைய அரசியல் சூழல்கள் அனுமதிக்காத நிலையில், அதனை தற்போது சிறப்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 1510ம் ஆண்டில் மியான்மாரில் முதன் முதலில் கிறிஸ்தவம் நுழைந்ததைக் கொண்டாடும் 500ம் ஆண்டு கொண்டாட்டங்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி துவக்கப்பட்டு, இவ்வாண்டு நவம்பர் 23ம் தேதி கிறிஸ்து அரசர் திருவிழாவுடன் நிறைவுக்கு வருகிறது.
ஆதாரம் : EWTN
6. காசா பகுதியின் மோதல்களால் விவசாயம் மற்றும் மீன்வளத்துறைகளில் 10 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பு
செப்.01,2014. மத்தியக்கிழக்கின்
காசா பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் அப்பகுதியின் விவசாயம்
மற்றும் மீன்வளத்துறைகளில் 10 கோடி டாலர்களுக்கு மேல் இழப்பும், 8,700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளதாக Christian Aid அமைப்பின் விவசாய மேம்பாட்டுக்கழகம் அறிவித்தது.
அண்மையில் இவ்வமைப்பு நடத்திய ஆய்வில், 3,670 ஏக்கர் பயிர் நிலங்கள் இப்போரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பயிர் நிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள், 1161 தேன்கூடுகள் போன்றவையும் அழிவுக்குள்ளாகியுள்ளன.
விவசாயத்துறையும் மீன்வளத்துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், காசா பகுதியில் பொருட்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் Christian Aid அமைப்பின் விவசாய மேம்பாட்டுக் கழகம் அறிவிக்கிறது.
ஆதாரம் : ICN
7. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்
செப்.01,2014. இந்திய அளவில், உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளதாக, மருத்துவத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த 2008 முதல் 2014 ஜூன் வரை, 485 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன எனவும், இதில், 79 இதயம், 39 நுரையீரல், 443 கல்லீரல், 867 சிறுநீரகம், ஒரு கணையம், 500 இதய வால்வு, 732 கருவிழி, 5 தோல் என, 2,666 உறுப்புகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 -- 14ல் மட்டும் இதுவரை, 141 பேரிடம் பெற்ற, 21 இதயம், 21 நுரையீரல், 130 கல்லீரல், 243 சிறுநீரகம், 1 கணையம், 134 இதய வால்வு, 200 கருவிழி, ஒரு தோல் என, 751 உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்தே, உடல் உறுப்புகள் அதிகமாக தானமாக பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிலையில், கடந்த 2013 மார்ச் வரை, மூளைச்சாவு அடைந்த, 324 பேரின், 1,820 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 2008ல், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததைத் தொடர்ந்து, உறுப்புகளை தானம் பெற, 72 மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment