Saturday 2 August 2014

செய்திகள் - 02.08.14

செய்திகள் - 02.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் இடத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பணமும் அதிகாரமும் போலியான தெய்வங்கள்

2. காசாப் பகுதி ஆக்ரமிக்கப்பட்ட ஒரு சிறைபோல் நடத்தப்பட்டால், அங்கு போர் நிறுத்தம் பலனற்றது, முதுபெரும் தந்தை Twal

3. புனித பூமியின் அமைதிக்காக காசாவிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் நோன்புகள், செபங்கள்

4. முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு, கானடா ஆயர்களின் அறிக்கை

5. இந்திய சமூகம் அறநெறி விழுமியங்களை இழந்து வருவதே, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம், தலத்திருஅவை அதிகாரி

6. சியெரா லியோனில் இபோலா நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை பணி

7. இபோலா நோய்ப் பரவல் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்

8. மியான்மாரில் சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளது ஐ.நா. நிறுவனம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் இடத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பணமும் அதிகாரமும் போலியான தெய்வங்கள்

ஆக.02,2014. நாம் இறைவனை வணங்காதபோது வேறு எதையோ நாம் வணங்குகின்றோம். இறைவனின் இடத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பணமும் அதிகாரமும் போலியான தெய்வங்கள் என்ற குறுஞ்செய்தியை தனது டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இயேசு சபை புனிதர் பீட்டர் ஃபேபர் திருவிழாவை முன்னிட்டு ஐரோப்பிய இயேசு சபை இளம் துறவியருக்கு இச்சனிக்கிழமையன்று திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சின் Villaret ல் 1506ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த புனிதர் பீட்டர் ஃபேபர், 1546ம் ஆண்டு ஆகஸ்ட்1ம் தேதி உரோமையில் காலமானார். இயேசு சபையை நிறுவிய புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் முதல் குழுவில் இருந்த புனிதர் பீட்டர் ஃபேபர், இயேசு சபையில் அருள்பணியாளராக முதலில் திருநிலைப்படுத்தப்பட்டவர். இப்புனிதர், 1872ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 2013ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. காசாப் பகுதி ஆக்ரமிக்கப்பட்ட ஒரு சிறைபோல் நடத்தப்பட்டால், அங்கு போர் நிறுத்தம் பலனற்றது, முதுபெரும் தந்தை Twal

ஆக.02,2014. காசாப் பகுதி ஆக்ரமிக்கப்பட்ட ஒரு சிறைபோல் நடத்தப்பட்டால், அங்கு போர் நிறுத்தம் பலனற்றது என, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
தாக்குதல்களின் பிடியிலுள்ள காசாப் பகுதியில் அச்சமும் சோர்வுமே காணப்படுகின்றன, இவற்றால் வெறுப்புணர்வே வளர்ந்து வருகின்றது என்றுரைத்த முதுபெரும் தந்தை Twal அவர்கள், பயங்கரவாதிகள் எதையும் செய்யத் தயாராகும் நிலைக்குஉதவும் நம்பிக்கையிழந்த மக்களின் தொழிற்சாலையாக காசாப் பகுதி உள்ளது என்று கூறினார்.
இதற்கிடையே, ஐ.நா.வின் வலியுறுத்தலில் 72 மணிநேரப் போர் நிறுத்தத்துக்கு இசைவு தெரிவித்த இஸ்ரேல் இராணுவமும், ஹமாஸ் புரட்சியாளர்களும் அதைப் புறக்கணித்து மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இஸ்ரேல் படைவீரர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு மறைத்து வைத்திருப்பதாகக் கூறி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை வீரியப்படுத்தியுள்ளது. ஹமாஸ் புரட்சியாளர்களும் இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides

3. புனித பூமியின் அமைதிக்காக காசாவிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் நோன்புகள், செபங்கள்

ஆக.02,2014. புனித பூமியில் அமைதி நிலவுவதற்காக காசாவிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் நோன்புகளும் செபங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 
இயேசு உருமாறிய விழாவான இம்மாதம் 6ம் தேதியன்று உலகினர் அனைவரும் இக்கருத்துக்காகச் செபிக்குமாறு Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு கேட்டுள்ளது. இதே நாளில் ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுள்ளார் ஈராக் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.  
மேலும், எகிப்திலுள்ள கத்தோலிக்கர்கள் நோன்புடன் செபங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளனர். காசாவில் அமைதி நிலவுவதற்காக இடம்பெறும் இச்செப தப முயற்சிகள் இம்மாதம் 15ம் தேதி அன்னைமரியாவின் விண்ணேற்பு விழா வரை நடக்கும்.
மேலும், எகிப்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள் அழைப்பின்பேரில், அச்சபை கிறிஸ்தவர்களும் இம்மாதம் 7 முதல் 22 வரை 15 நாள் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.
பெய்ட் கனினாவிலுள்ள புனித ஜேம்ஸ் ஆலயத்தில் எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள் இவ்வெள்ளி மாலை போர் முடிவுக்கு வரச் செபித்து திருப்பலி நிகழ்த்தினார்.
இன்னும், பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், காசாவில் இடம்பெறும் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி

4. முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு, கானடா ஆயர்களின் அறிக்கை

ஆக.02,2014. முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை இவ்வுலகம் நினைவுகூரும் இந்நாள்களில், நீதி மற்றும் அமைதிக்குச் செயல்துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்வதற்கு நமது அர்ப்பணத்தைப் புதுப்பிப்போம் என, கானடா நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
முதல் உலகப்போரில் கானடா இணைந்ததன் நூறாம் ஆண்டு நினைவு ஆகஸ்ட் 4, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படவிருப்பதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Paul-André Durocher அவர்கள், போரின் கொடுமைகள் ஒருபோதும் புகழப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெல்ஜியத்தின் நடுநிலைமையை மீறி, ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்ரமித்ததைத் தொடர்ந்து, 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிரிட்டன் ஜெர்மனிக்கெதிராகப் போரை அறிவித்தது. அச்சமயத்தில் பிரித்தானியப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த கானடாவும் பிரிட்டனுடன் சேர்ந்து முதல் உலகப்போரில் இணைந்தது.
கானடா போரிடத் தொடங்கியதன் இரண்டு மாதங்களுக்குள்ளேயே காணப்பட்ட போரின் கொடூரங்கள் பற்றி அப்போதைய கானடா ஆயர்கள் எழுதிய அறிக்கையை  சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Durocher அவர்கள், கிறிஸ்தவர்கள் அமைதிக்கான தங்கள்  அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
1914ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918ம் ஆண்டு நவம்பர் 11வரை நான்காண்டுகள் நடந்த முதல் உலகப்போரில், ஏறக்குறைய 90 இலட்சம் இராணுவத்தினரும், 70 இலட்சம் அப்பாவி மக்களும் இறந்தனர்.  

ஆதாரம் : Zenit                           

5. இந்திய சமூகம் அறநெறி விழுமியங்களை இழந்து வருவதே, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம், தலத்திருஅவை அதிகாரி

ஆக.02,2014. இந்திய சமுதாயத்தில் அறநெறி மற்றும் ஆன்மீக விழுமியங்கள் குறைந்து வருவதே, நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணம் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் முக்கிய விழுமியங்கள் சீரழிந்து வருகின்றன என்றும், ஊடகங்களால் தூண்டப்படும் ஆசைகளால் ஏற்படும் மகிழ்ச்சி, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு இளம் சிறுமிகளும், ஏன் நவதுறவியரும்கூட ஆளாகின்றனர் என்றுரைத்த பேராயர் ஆல்பர்ட் டி சூசா அவர்கள், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் வேகமாக அதிகரித்து வருவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் குறை கூறினார்.
இன்டர்னெட் மூலம் கிடைக்கும் இழிபொருள் படங்களும், இலக்கியங்களும் இதற்கு ஒரு காரணம் என்றுரைத்த பேராயர், குற்றவாளிகளின் அச்சுறுத்தலால் பல பாலியல் வன்செயல்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுவதையும் குறிப்பிட்டார்.
புதுடெல்லியை மையமாகக் கொண்ட காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2  பாலியல் வன்செயல்கள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

ஆதாரம் : CNS

6. சியெரா லியோனில் இபோலா நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை பணி

ஆக.02,2014. சியெரா லியோனில் இபோலா நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும், அது குறித்த மக்களின் மூடநம்பிக்கையும் அதிகரித்துவரும்வேளை, திருஅவைப் பணியாளர்கள் மக்களிடமிருந்து பயத்தைப் போக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர் என்று தலைநகர் Freetown உயர்மறைமாநில காரித்தாஸ் இயக்குனர் அறிவித்தார்.
அதிக வீரியம்கொண்ட தொற்றுநோயான இபோலாவைத் தடுப்பதற்கு அந்நாட்டை முன்னின்று நடத்திவந்த மருத்துவர் Sheik Umar Khan அவர்கள் ஜூலை 29ம் தேதி இறந்ததையொட்டி நாட்டின் நிலைமை நம்பிக்கையிழந்த சூழலில் உள்ளதாக, CNS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் அருள்பணி Peter Konteh
கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இபோலா நோய்க் கிருமிகளின் பாதிப்பால் 729 பேர் இறந்துள்ளனர். இதனால் சியெரா லியோனில் ஜூலை 31ம் தேதி அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS

7. இபோலா நோய்ப் பரவல் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்

ஆக.02,2014. மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும், அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மெதுவாகச் செல்கின்றன என்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் Margaret Chan  கூறியுள்ளார்.
இந்நோயினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகளின் தலைவர்களை, கினி நாட்டின் கோனாக்ரியில் சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் Margaret Chan.
வரலாற்றில் இபோலா நோய் இதற்குமுன் இவ்வளவு பெரிய அளவில் பரவியது இல்லை என்றும், இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்றும் எச்சரித்த மருத்துவரான Chan, இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பத்து கோடி டாலர் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு. இரத்தம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புழங்கிய இடங்கள் மற்றும் பொருட்கள் வழியாகவும் இக்கிருமி பரவுகிறது.
இக்கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்தான் ஏற்படும். பின்னர் கண்கள், பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும். அடுத்த கட்டமாக உடலுக்குள்ளேயே இரத்தக்கசிவு ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழக்கும். இந்நோய்க் கிருமித் தொற்றியவருக்கு உடலில் பாதிப்பு தோன்ற இரண்டு முதல் 21 நாட்கள் வரை ஆகலாம்.

ஆதாரம் : BBC

8. மியான்மாரில் சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளது ஐ.நா. நிறுவனம்

ஆக.02,2014. மியான்மார் நாட்டின் ஆயுதப் படையிலிருந்து சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, அவர்கள் கல்வி வாய்ப்பைப் பெறவும், ஆயுதங்களிலிருந்து அவர்கள் விலகி இருக்கவும் அரசு முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளது ஐ.நா. நிறுவனம்.
Tatmadaw என்றழைக்கப்படும் மியான்மார் ஆயுதப் படையிலிருந்து 91 சிறார் படைவீரர்கள் இவ்வாரத்தில் விடுதலைசெய்யப்பட்டு தங்கள் குடும்பங்களைச் சந்தித்துள்ளனர். இச்சிறாரில் பலர் பல ஆண்டுகள் தங்கள் குடும்பங்களைவிட்டுப் பிரிந்திருந்தனர்.
மியான்மார் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள, ஐ.நா. சிறார் நிதி நிறுவனமான யூனிசெப்பின் உதவிப் பிரதிநிதி ஷாலினி பகுகுணா, 18 வயதுக்குட்பட்ட சிறார், படைப்பிரிவில் சேர்க்கப்படக்கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு, Tatmadaw அமைப்பிலிருந்து அனைத்துச் சிறார் படைவீரர்களும் நீக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
2016ம் ஆண்டுக்குள், அரசு பாதுகாப்புப் படைகள், சிறாரைப் படைப்பிரிவில் சேர்ப்பதைத்  தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், சிறார், படை வீரர்கள் அல்ல என்ற தலைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் யூனிசெப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது. 

ஆதாரம் : UN                               
 

No comments:

Post a Comment