Friday, 29 August 2014

செய்திகள் - 28.08.14

செய்திகள் - 28.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து சொல்லித் தருகிறார்

2. திருத்தந்தை பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது - பேராயர் சில்வானோ தொமாசி

3. காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தோல்வியையே தழுவியுள்ளனர் - ஆயர் வில்லியம் ஷொமாலி

4. காசாப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும்

5. ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே - சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை

6. ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது: மலேசிய பிரதமர் சாடல்

7. பெங்களூருவில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் மேற்கொண்ட ஊர்வலம்

8. ஜெர்மனியில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நீர்ப் பாலம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து சொல்லித் தருகிறார்

ஆக.28,2014. நம் மீது அன்பு செலுத்தாதவர் மீதும் அன்பு செலுத்தும்படி சிலுவையிலிருந்து கிறிஸ்து நமக்குச் சொல்லித் தருகிறார் என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.
மேலும், சிலுவையில் அறையப்பட்டுள்ள கிறிஸ்துவின் பெயராலும், வாழ்வின் ஊற்றாகிய தந்தையின் பெயராலும், அன்பின் ஆவியாரின் பெயராலும் கருணை, நீதி ஆகியவற்றிற்காக உங்களிடம் விண்ணப்பிக்கிறோம் என்று கனடா நாட்டு ஆயர்கள் ஒரு விண்ணப்ப மடலை வெளியிட்டுள்ளனர்.
கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Paul-André Durocher, மற்றும் ஆயர் பேரவை பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த மடல், மத்தியக் கிழக்குப் பகுதியின் ஈராக், சிரியா, புனித பூமி ஆகிய நாடுகளிலும், உக்ரைன் மற்றும் ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் அமைதி நிரந்தரமாகத் திரும்பிட அழைப்பு விடுக்கிறது.
அறையப்பட்ட கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்ற அடிப்படையில், துன்புறும் அனைவரோடும் தங்களை ஒன்றிணைத்து, ஆயர்கள் விடுத்துள்ள இந்த விண்ணப்பம், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் குழுவினர், ஏனைய கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர், மற்றும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது - பேராயர் சில்வானோ தொமாசி

ஆக.28,2014. 'மூன்றாம் உலகப் போரை நாம் அனுபவித்து வருகிறோம்' என்று திருத்தந்தை அண்மையில் பயன்படுத்திய சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஆப்ரிக்க நாடுகள், சிரியா, ஈராக், மற்றும் உலகின் பல இடங்களில் வெடித்துள்ள ஆபத்தான மோதல்களை கவனத்திற்குக் கொணரும் வகையில் திருத்தந்தை அவர்கள் பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற எண்ணம், ஒவ்வொரு நாடும் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை மட்டும் உறுதி செய்வதற்குப் பதில், உலகளாவிய அமைதியை உருவாக்கத் தூண்டுகிறது என்று பேராயர் தொமாசி அவர்கள் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரும், அமெரிக்க ஆயர்களும் வாஷிங்க்டனில் சந்திக்கும் வாய்ப்பு குறித்தும், 2015ம் ஆண்டு, திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு குறித்தும், பேராயர் தொமாசி அவர்கள் இப்பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுவரை திருத்தந்தையர்கள் ஐ.நா. அவையில் ஆற்றிய உரைகள் அனைத்தும், உலகத் தலைவர்களை ஆழமாகப் பாதித்ததுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஐ.நா.அவையில் உரையாற்றினால் அதன் விளைவுகள் நல்லவிதமாய் அமையும் என்ற நம்பிக்கையை பேராயர் தொமாசி அவர்கள் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : Zenit

3. காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தோல்வியையே தழுவியுள்ளனர் - ஆயர் வில்லியம் ஷொமாலி

ஆக.28,2014. கடந்த ஏழு வாரங்களாக காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் வெற்றி பெறாமல், தோல்வியையே தழுவியுள்ளனர் என்பதை உணர்ந்திருப்பர் என தான் நம்புவதாக, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை துணை ஆயர் வில்லியம் ஷொமாலி அவர்கள் கூறினார்.
இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தேவை என்பதையும், வன்முறைகளால் அல்ல, பேச்சு வார்த்தைகளாலேயே இரு தரப்பினரும் வாழ முடியும் என்பதையும் கடந்த ஏழுவார பலிகள் உணர்த்தியிருக்கவேண்டும் என்று ஆயர் ஷொமாலி அவர்கள் CNA என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 50 நாட்கள் தொடர்ந்த தாக்குதல்களின் விளைவாக, அப்பகுதியில் மருத்துவ உதவிகள் மிக அவசரத் தேவைகளாக உள்ளன என்றும், அதைத் தொடர்ந்து உணவு, உறைவிடம் என்ற மற்ற மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் ஆயர் ஷொமாலி அவர்கள் எடுத்துரைத்தார்.
மக்களின் உறைவிடங்களை மீண்டும் எழுப்புவதற்கும், குழந்தைகளின் மனநிலையில் உருவாகியுள்ள பாதிப்புக்களை நீக்குவதற்கும் தலத்திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆயர் ஷொமாலி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/EWTN

4. காசாப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும்

ஆக.28,2014. காசாப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் 2000த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு வழங்கும் பணியில் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள் பணியாளர் Raed Abusahlia அவர்கள் கூறினார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவர் என்று தான் நம்புவதாக, அண்மை கிழக்கு கத்தோலிக்க நற்பணிக் கழகத்தின் இயக்குனர் Sami El-Yousef அவர்கள் கூறினார்.
காசாப் பகுதியில் விரைவில் பள்ளிகள் துவங்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறிய El-Yousef அவர்கள், அப்பகுதியில் உள்ள 3,73,000த்திற்கும் அதிகமான குழந்தைகளின் மனதைச் சூழ்ந்துள்ள பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
காசாப் பகுதியில் இச்செவ்வாய் மாலை 7 மணிமுதல் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் எவ்விதத் தாக்குதல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எகிப்திலிருந்து காசாப் பகுதியில் நுழைவதற்கு தரப்பட்டுள்ள அனுமதியால், ஐ.நா.வின் உதவிகளும் அப்பகுதிக்குச் செல்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS

5. ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே - சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை

ஆக.28,2014. சமயச் சுத்திகரிப்பு என்ற பெயரில், ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே என்று குர்திஸ்தான் பகுதிக்கு அண்மையில் சென்று திரும்பிய சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னாஸ் ஜோசெப் யூனான் அவர்கள் கூறினார்.
அப்பகுதியில் ஐந்து முதுபெரும் தந்தையர் மேற்கொண்ட பயணத்தின் முடிவில், Ankawa, Erbil ஆகிய நகரங்களில் தாங்கள் கண்டது, முழுமையான மனித உரிமை மீறல்களே அன்றி வேறெதுவும் இல்லை என்று முதுபெரும் தந்தை யூனான் அவர்கள் கூறினார்.
நினிவே பகுதியிலிருந்து விரட்டப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், Yezidi இனத்தவர், ஷியா இஸ்லாமியர் மற்றும் Shabak இனத்தவர் ஆகிய சிறுபான்மைக் குழுவினர் அனைவரையும் கடந்த ஆறு நாட்கள் சந்தித்து வந்திருந்த முதுபெரும் தந்தையர், தாங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இப்புதனன்று, பெய்ரூட்டில், தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் அனைவரும், செப்டம்பர் மாதம் 9 முதல் 11ம் தேதி முடிய, திருப்பீட கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களுடன், வாஷிங்க்டன் நகரில் ஒரு முக்கியச் சந்திப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று CNS செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CNS

6. ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது: மலேசிய பிரதமர் சாடல்

ஆக.28,2014. ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவினரின் செயல்பாடுகள், இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்கள் (Najib Razak) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள், இறைதூதர் முகமது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது இஸ்லாம் மதச்சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், இராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியப் பெண்கள் மூன்று பேர், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பாலியல் தேவைக்காக தங்களை அப்படையுடன் இணைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதன் பின்னணியிலேயே, மலேசிய பிரதமர் நஜீப், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை கடுமையாக சாடியுள்ளார்.
அல்காய்தா அமைப்பின் இருந்து பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கிளர்ச்சிப்படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, இராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன. சன்னி முஸ்லீம்கள் தலைமையிலான ஆட்சியை அமைக்க இவர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டிருந்த 26 வயது அமெரிக்க இளம்பெண்ணை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அவரின் பாதுகாப்பு கருதி அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அப்பெண்ணின் குடும்பத்தினரும், அமெரிக்க அதிகாரிகளும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரிடமும், வேறு தீவிரவாத இயக்கத்தினரிடமும் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து

7. பெங்களூருவில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் மேற்கொண்ட ஊர்வலம்

ஆக.28,2014. உலகில் வாழும் பார்வையற்றோரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேலானோர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்ற புள்ளிவிவரம் நமக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், இந்தக் குறையைக் களைய அழைப்பும் விடுக்கிறது என்று அருள் பணியாளர் ஜார்ஜ் கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
Project Vision என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் பணியாளர் கன்னந்தானம் அவர்களின் முயற்சியால், கண் தானத்தை வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக, பெங்களூரு நகரில் அண்மையில் 600க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களைக் கட்டியவண்ணம் அணிதிரண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தை முன்னின்று நடத்தியவர்கள் பார்வையற்றோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண் தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க, இந்த ஊர்வலத்தை, அடுத்த சில ஞாயிறுகள் தொடர்ந்து அந்நகரில் நடத்த இருப்பதாக அருள்பணி கன்னந்தானம் அவர்கள் கூறினார்.
2013ம் ஆண்டு துவக்கப்பட்ட Project Vision என்ற அமைப்பின் வழியாக இதுவரை 10,000த்திற்கும் அதிகமானோர் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளனர் என்று இவ்வமைப்பு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு கூறுகிறது.
உலகில் வாழும் 3 கோடியே, 90 இலட்சம் பார்வையிழந்தோரில் 1 கோடியே 15 இலட்சம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர்.

ஆதாரம் : UCAN

8. ஜெர்மனியில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நீர்ப் பாலம்

ஆக.28,2014. ஜெர்மனியில் ஆற்றின் மேலேயே கட்டப்பட்டுள்ள நீர்ப் பாலத்தின் மேலே படகு போக்குவரத்து நடைபெறுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
உலகில் அமைந்துள்ள மிக நீளமான நீர்ப் பாலம் எனப் புகழ்பெற்ற இது Magdeburg என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பாலத்தை கட்ட 1905ம் ஆண்டிலேயே திட்டமிடப்பட்டு, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு 1930ம் ஆண்டு தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1942ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் இரண்டாம் உலகப் போர் காரணமாகவும், இரு நாடுகளாகக் கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் பிரிந்ததாலும், கட்டுமானப் பணிகளைத் தொடர முடியவில்லை.
கடந்த 1990ம் ஆண்டில் கிழக்கு ஜேர்மனியும், மேற்கு ஜேர்மனியும் ஒன்றாக இணைந்ததால், 1997ம் ஆண்டில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2003ம் ஆண்டில் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்காக பாலம் திறக்கப்பட்டது.
918 மீட்டர் நீளமும், 34 மீட்டர் அகலமும், 4.25 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த நீர்ப் பாலம், தற்போது ஜேர்மனியின் தலைநகரான பெர்லினின் உள் நாட்டுத் துறைமுகத்தையும், ரைன் நதி துறைமுகத்தையும் இணைக்கிறது.

ஆதாரம் : TamilWin

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...