செய்திகள் - 30.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறைவன் நம்மை மன்னிப்பதற்கு நம் ஒத்துழைப்பை வழங்குவோம்
2. கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கும் அரசியல் தலைவர்களுக்கு, திருப்பீடச் செயலரின் பாராட்டுக்கள்
3. திருத்தந்தை : துன்புறும் ஈராக் அகதிகளின் துயர் துடைப்புப் பணியாற்ற எப்போதும் தயார்
4. வன்முறைகள் நிறுத்தப்பட இந்தியக் கிறிஸ்தவ சபைகள் அழைப்பு
5. சிரியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: 30 லட்சம் பேர் அகதிகளாக தவிப்பு
6. இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க 50 ஆண்டுகள் ஆகலாம்: யுனிசெப்
7. 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு : ஐ.நா.,வில் இந்திய நடிகை வருத்தம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இறைவன் நம்மை மன்னிப்பதற்கு நம் ஒத்துழைப்பை வழங்குவோம்
ஆக.30,2014. 'இறைவன் நம்மை எப்போதும் மன்னிப்பதோடு, நம் அருகே நடந்தும் வருகிறார்; அவ்விதம் அவர் நடந்துவருவதற்கு நாம் அவரை அனுமதிக்கவேண்டும்' என்று இச்சனிக்கிழமை தன் Twitter பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் Twitter செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை மன்னிப்பதற்கும், நம்முடனேயே இறைவன் நடந்து வருவதற்கும் நாம் அவருக்கு வழங்கவேண்டிய ஒத்துழைப்பைக் குறித்து இச்சனிக்கிழமை Twitter வழியே நம்மிடம் விண்ணப்பித்துள்ளார்.
திருத்தந்தையின் Twitter செய்தியை ஒவ்வொருநாளும் ஏறத்தாழ 44 இலட்சம் பேர் வாசித்து வருகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கும் அரசியல் தலைவர்களுக்கு, திருப்பீடச் செயலரின் பாராட்டுக்கள்
ஆக.30,2014. இவ்வுலகில் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கி, கிறிஸ்தவ மதிப்பீடுகளையும் ஒழுக்க நெறிகளையும் வேரூன்றவைக்கும் அரசியல் தலைவர்களுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
உலக கத்தோலிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் 5வது கூட்டம் உரோம் நகருக்கு அருகேயுள்ள Frascatiயில் இடம்பெறுவதையொட்டி, அவர்களைச் சந்தித்து உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், மக்கள் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்வு, கிறிஸ்தவ மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட்டு வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
அனைத்தையும் தன் மயமாக்கும் சுயநலமும், தன்னையே வெறுத்து, இறைவனை மையமாக்கும் நம் இறை அன்பும் எப்போதும் ஒன்றுக்கொன்று மோதிவரும் நிலையில், நாம் மனச் சோர்வின்றி செயல்பட புனித அகஸ்டின் அவர்களின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுகின்றது என்று கூறியத் திருப்பீடச் செயலர், திருஅவை தன்னுடைய பணியில் கிறிஸ்தவ அரசியவாதிகளின் தேவையை உணர்வதுபோல், கிறிஸ்தவ அரசியல்வாதிகளுக்கும் திருஅவையின் பராமரிப்பு தேவைப்படுகிறது என்று கூறினார்.
அனைத்துலகக் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர் அமைப்பு, 2010ம் ஆண்டு ஆஸ்திரியக் கர்தினால், Christoph Schonborn அவர்களாலும், பிரித்தானியப் பிரபுக்கள் அவையின் கத்தோலிக்கப் பிரதிநிதி, David Alton அவர்களாலும் துவக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : துன்புறும் ஈராக் அகதிகளின் துயர் துடைப்புப் பணியாற்ற எப்போதும் தயார்
ஆக.30,2014. ஈராக்கில்
புலம்பெயர்ந்தோர் முகாமில் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர்
ஒருவருடன் திருத்தந்தை தொடர்புகொண்டு பேசினார் என்ற செய்தி உண்மையானதே
என்பதை உறுதிச் செய்துள்ளார் திருப்பீடச் செய்தித் தொடர்புத் துறையின்
துணைத்தலைவர்.
ஈராக் அகதிகளிடையேப் பணியாற்றும் அருள்பணி Behnam Benoka என்பவர், தன் நண்பரும் பத்திரிகையாளருமான Alan Holdren என்பவர் மூலமாக ஈராக் நிலை குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், தென்கொரிய திருப்பயணத்திலிருந்து விமானத்தில் திரும்பியபோது விவரங்களை வழங்கியதாகவும், வத்திக்கான் திரும்பியவுடன் அந்த அருள்பணியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு திருத்தந்தை உரையாடியதாகவும் திருப்பீட அதிகாரி அருள்பணி Ciro Benedettini கூறினார்.
ஈராக் அகதிகளிடையேப் பணியாற்றும் சுயவிருப்பப் பணியாளர்களுக்கு நன்றியை, தன் உரையாடலின்போது வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் மக்களின் துயர்களை அகற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் எப்போதும் மேற்கொள்வதாக அருள்பணி Benoka அவர்களிடம் உறுதியளித்ததாகவும் கூறினார் அருள்பணி Benedettini.
தொலைபேசி
உரையாடல் குறித்த விவரங்களை திருத்தந்தையின் செயலர் மூலமாக அறிய
வந்ததாகவும் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்புத்துறையின் துணைத்தலைவர்
Benedettini.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. வன்முறைகள் நிறுத்தப்பட இந்தியக் கிறிஸ்தவ சபைகள் அழைப்பு
ஆக.30,2014. இந்தியாவின் அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களின் எல்லைப்பகுதியில் 12 பேர்களின் உயிரிழப்புக்குக் காரணமான வன்முறைகள் நிறுத்தப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவேண்டும் என வடகிழக்கு இந்திய கிறிஸ்தவ சபை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் இணைந்து ஷில்லாங்கில் நடத்தியக் கூட்டத்தில் இவ்வழைப்பை விடுத்த கிறிஸ்தவப் பிரதிநிதிகள், ஒருவர் தான் வாழ்வதோடு பிறரையும் வாழவைக்கவேண்டும் என்ற கொள்கையுடன் அனைத்து அமைதி முயற்சிகளும் இடம்பெறவேண்டும் என்றனர்.
அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து எல்லையில் இடம்பெற்ற அன்மை வன்முறைகளால், 10,000 பேர் குடிபெயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவத் தலைவர்கள், இவர்களை மீள்குடியேற்றுவது, அமைதித் திட்டத்தின் முதல்படியாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்தனர்.
ஆதாரம் : MISNA
5. சிரியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: 30 லட்சம் பேர் அகதிகளாக தவிப்பு
ஆக.30,2014.
சிரியாவில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரால் அந்த நாட்டு மக்கள்
தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கும்
ஐ.நா. நிறுவனம், 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்தோராக தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறுகிறது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக 2011 முதல் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதால், இதுவரை 30 இலட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், கடந்த ஓராண்டில் மட்டும் 10 இலட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர் எனவும் கூறினார், ஐ.நா.அவையின் புலம்பெயர்ந்தோர் மறுவாழ்வுத் துறைத் தலைவர் António Guterres.
லெபனானில் 10,14,000 பேரும், துருக்கியில் 8,15,000 பேரும், ஜோர்டானில் 6,08,000 பேரும் அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். உள்நாட்டிலேயே 65 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, சிரியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா. புள்ளிவிவரப்படி, அகதிகள்
மக்கள் தொகையில் சிரியா முதலிடத்தில் உள்ளது. பாலஸ்தீனம் இரண்டாம்
இடத்தில் உள்ளது. சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும்
உள்நாட்டுப் போரில் இதுவரை 1,91,000 பேர் பலியாகி உள்ளனர்.
ஆதாரம் : BBC
6. இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க 50 ஆண்டுகள் ஆகலாம்: யுனிசெப்
ஆக.30,2014. இந்தியாவில் சிறார் திருமணங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்துவந்துள்ள போதிலும், அந்த குறைவின் வேகம் மெதுவாக உள்ளதால், இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று யுனிசெப் அமைப்பின் சிறார் திருமண ஒழிப்புப் பிரிவின் இந்திய அதிகாரி Dora Giusti தெரிவித்தார்.
இந்தியாவில், 20லிருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 43 விழுக்காட்டினருக்கு சிறுமியராக இருக்கும் போதே திருமணம் நடந்துள்ளது என்றும், அங்கு சிறார் திருமண வழக்கத்தின் வீழ்ச்சி வேகம் ஆண்டுக்கு ஒரு விழுக்காடாக உள்ளதாகவும் யுனிசெப் அதிகாரி Giusti சுட்டிக்காட்டினார்.
இந்த வீழ்ச்சி வீதத்தின் அடிப்படையில், இந்தியாவில் சிறார் திருமணத்தை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது எடுக்கும் என்று கூறிய அவர், சிறார் திருமண வழக்கத்தை தடுக்கும் பணிகள் இன்னும் தீவிரமாக எடுத்து நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சிறார் திருமணங்கள் பொதுவாக வட இந்தியாவிலேயே அதிகம் நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், சமீபத்திய அறிக்கைளின்படி, தெற்கு மாநிலமான கேரளாவில் சிறார் திருமணங்கள் விழுக்காடு சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 70 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, அவர்களின் 18 வயதுக்கு
முன்னமே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்றில் ஒரு
பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் யுனிசெஃப் அமைப்பு கடந்த ஜூலை
மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
ஆதாரம் : BBC
7. 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிப்பு : ஐ.நா.,வில் இந்திய நடிகை வருத்தம்
ஆக.30,2014. இந்தியாவில், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒரு பெண் கற்பழிக்கப்படுவதாகவும், இந்த கொடுமையை தடுத்து நிறுத்த ஆண்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் தான் முடியும் என இந்திய நடிகை Mallika Sherawat, ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றினார்.
ஐக்கிய நாடுகள் அவையின் பொது தகவல் துறை சார்பில், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய நடிகை Sherawat, இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க அரசும், நீதித்துறையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், இந்த கொடூர சம்பவங்களைக் குறைக்க முடியவில்லை என்ற கவலையை வெளியிட்டார்.
ஜாதி பிரச்னை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவையும், இக்கொடுமைக்குக் காரணமாக அமைந்துள்ளன என ஐ.நா.வில் பேசிய நடிகை Sherawat, ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற போதிலும், குழந்தை திருமணங்களும் இந்தியாவில் அதிக அளவில் இடம்பெறுவதையும் தடுக்கமுடியவில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment