Tuesday, 19 August 2014

செய்திகள் - 17.08.14

செய்திகள் - 17.08.14
 
தென் கொரியாவில் திருத்தந்தை மேற்கொண்டுள்ள
முதல் ஆசியத் திருப்பயணம்...
நான்காம் நாள் நிகழ்வுகளும், உரைகளும்
 
திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணத்தின் நான்காம் நாள் : ஆசிய ஆயர்களுடன் திருத்தந்தை
 
ஆக.17,2014. இஞ்ஞாயிறுன்று கொரியாவில் எப்பக்கம் திரும்பினாலும், ஆசிய இளையோரே, விழித்தெழுங்கள்!என்ற வாசகத்தையே காண முடிந்தது. சுவரொட்டிகள், விளம்பரங்கள், இளையோரின் டி பனியன்கள், காப்பி டம்ளர்கள், கொடிகள் என எல்லாவற்றிலும் இந்த வாசகம் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. ஏனெனில் இதுதான் 6வது ஆசிய இளையோர் தின தலைப்பாகும். இஞ்ஞாயிறு, இத்தினத்தின் நிறைவு நாளும் ஆகும். இந்தியா இலங்கை என ஆசிய இளையோர் தங்களது மரபு உடைகளில் தெஜோன் மறைமாவட்டத்தின் Haemi நகரை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். கொரியாவில் மழை பெய்து கொண்டிருந்தாலும் இஞ்ஞாயிறு திருப்பயணத் திட்டங்கள் தடையின்றி நடந்தன.
இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 7 மணிக்கு, செயோல் திருப்பீடத் தூதரகத்தில் Lee Ho Jin என்பவருக்கு, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதல் அருளடையாளங்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடந்த செவோல் கப்பல் விபத்தில் பலியான Seung-hyeon என்ற இளைஞரின் தந்தை இவர். இந்நிகழ்வில் ஜின் அவர்களின் மகளும், சில குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தெஜோன் அரங்கத்தில், செவோல் கப்பல் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை, திருத்தந்தை சந்தித்தபோது, திருத்தந்தையிடமிருந்து தான் திருமுழுக்குப் பெற வேண்டுமென்ற ஆவலை வெளிப்படுத்தினார் Lee Ho Jin. அவரின் ஆவலை இஞ்ஞாயிறன்று நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீட தூதர் பேராயர் ஆஸ்வால்டு பதில்லா அவர்களும் திருத்தந்தையுடன் சேர்ந்து இந்நிகழ்வை நடத்தினார். இத்திருப்பயணத்தில், கொரிய மொழியிலிருந்து மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாளராக திருத்தந்தைக்கு உதவும் இயேசு சபை அருள்பணியாளர் John Chong Che-chon அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார். இத்திருமுழுக்கில் பிரான்சிஸ் என்ற புதிய பெயரை ஏற்ற Lee Ho Jin, இந்நிகழ்வு பற்றிப் பேசியபோது, செவோல் விபத்தில் பலியானவர்கள் மீது திருத்தந்தை காட்டிய அன்பையும், நெருக்கத்தையும் உணர முடிந்தது என்று கூறினார். இந்த செவோல் விபத்தில் பலியானவர்கள் நினைவாக நடந்த 900 கிலோ மீட்டர் தூரம் திருப்பயணத்தில் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்தவர் Lee Ho-jin. இவர் கடந்த ஈராண்டளவாக திருமுழுக்குக்குத் தயார் செய்து வந்துள்ளார்.  
இஞ்ஞாயிறு காலை உள்ளூர் நேரம் காலை 9.45 மணிக்கு, செயோல் திருப்பீடத் தூதரகத்திலிருந்து Yongsanக்குக் காரில் சென்று, பின்னர் அங்கிருந்து 102 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். Haemi நகர் ஆரம்பப் பள்ளியில் வரவேற்பைப் பெற்ற பின்னர், அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi திருத்தலத்துக்கு உடனடியாக சென்றார் திருத்தந்தை. தெஜோன் மறைமாவட்டத்திலுள்ள இத்திருத்தலத்தை, அறியப்படாத மறைசாட்சிகள் திருத்தலம் எனவும் அழைக்கலாம். ஏனெனில், இங்குதான் 132 மறைசாட்சிகளில் பெரும்பாலானோர் சித்ரவதைப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இத்திருத்தலத்தில் ஆசிய ஆயர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பில், முதலில், FABC என்ற ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பின் தலைவரான, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஆசிய ஆயர்களுக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் Haemi திருத்தல இல்லத்தில் ஆசிய ஆயர்களோடு மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு காலை 9.30 மணியாகும். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் இஞ்ஞாயிறு மாலை 3.45 மணிக்கு, இத்திருப்பயணத்தின் முத்தாய்ப்பு நிகழ்வுக்குத் தயாரானார் திருத்தந்தை.
 
ஆதராம் : வத்திக்கான் வானொலி
 
திருத்தந்தை ஆசிய ஆயர்களிடம் - உரையாடல் என்பது, ஆசியத் திருஅவையின் முக்கியப் பணியாகிறது
 
ஆக.17,2014. அன்பு சகோதர ஆயர்களே, கிறிஸ்துவுக்காக பலர் தங்கள் உயிரை வழங்கிய இடத்தில் நாம் கூடியிருக்கும் வேளையில், உங்களை வாழ்த்துகிறேன். கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அளித்த வரவேற்பிற்கும், ஆசிய ஆயர்களாகிய நீங்கள், விளிம்புகளில் வாழ்வோருக்கு செய்துவரும் பணிக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஆசியக் கண்டத்தில், உரையாடல் என்பது, ஆசியத் திருஅவையின் முக்கியப் பணியாகிறது. உரையாடலை மேற்கொள்ள ஒருவருக்குத் தேவையான அடிப்படைப் பண்பு, தன்னுடைய சுய அடையாளத்தை உணர்ந்து ஏற்றுக்கொள்வது.
கிறிஸ்தவர்களாகிய நமது சுய அடையாளத்தைத் திசை திருப்ப, இவ்வுலகம் தரும் சோதனைகள் பல உள்ளன. அவற்றில் மூன்றை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
குறிப்பிட்ட கொள்கை ஏதும் இல்லாமல், எதையும் சார்ந்திருக்கும் 'சார்பியல்வாதம்' (Relativism) என்பது, உலகம் தரும் முதல் சோதனை. சார்பியல்வாதம் என்பது வெறும் கருத்தளவில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வின் செயல்பாடுகளிலும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
கிறிஸ்தவ சுய அடையாளத்தைத் தடுமாறச் செய்யும் இரண்டாவது உலகச் சோதனை, மேற்போக்கான மனநிலை (Superficiality). கடந்து செல்லும் எதையும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் வகையில், கலாச்சாரக் கூறுகளையும், புதுப் புதுக் கருவிகளையும் உருவாக்கும் உலகப் போக்கு ஆபத்தானது. உண்மையைச் சந்திக்கவிடாமல், தப்பித்துச் செல்லும் பல வழிகளைக் காட்டும் உலகப் போக்கு, நமது மேய்ப்புப்பணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கிறிஸ்துவில் வேரூன்றாமல், நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள், மேற்போக்கான, சமரச முயற்சிகளை மேற்கொள்ளும் ஆபத்தை உருவாக்கும்.
இவ்வுலகம் நமக்குத் தரும் மூன்றாவது சோதனை: எளிதான, விரைவான விடைகளைத் தேடுவது. நமக்குள் நாமே விடைகளைத் தேடுவதில், கிறிஸ்தவ நம்பிக்கை அடங்குவதில்லை. நம்மைத் தாண்டி வெளியேச் செல்லும் முயற்சிகளில் நம் நம்பிக்கை வெளிப்படுகிறது. இறைவனை, தனிப்பட்ட முறையில் தொழுவதில் அல்ல, மாறாக, அடுத்தவரை அன்பு செய்வதில், அவர்களுக்குப் பணியாற்றுவதில் நமது நம்பிக்கை அடங்கியுள்ளது. கிறிஸ்துவில் நாம் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையே, நமது சுய அடையாளம். இதிலிருந்து ஆரம்பமாவது, நமது உரையாடல்.
இறுதியாக, உரையாடல் என்பது, நமது பரிவுகாட்டும் சக்தியில் வெளிப்படுகிறது. நம்முடன் உரையாடலை மேற்கொள்வோர் கூறும் வார்த்தைகளை மட்டும் நாம் கேட்பது போதாது; அவ்வார்த்தைகளின் பின்புலத்தில் அவர் சொல்லமுடியாமல் தவிக்கும் உணர்வுகளை, போராட்டங்களை, நம்பிக்கையை நாம் கேட்க முயலவேண்டும். இவ்வாறு, அடுத்தவரை முழுமையாகப் புரிந்துகொள்ள விழையும் முயற்சி வழியே உண்மையான உரையாடல் உருவாகும்.
புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியதுபோல, 'இறைவன் மனுவுருவான மறையுண்மையில் நமது உரையாடலின் அடித்தளம் அமைந்துள்ளது. மனித வாழ்வை முற்றிலும் பகிர்ந்துகொண்ட இறைமகன் இயேசுவிடம் விளங்கிய திறந்த மனப்பான்மை, உரையாடலுக்கு அவசியம்.
திருப்பீடத்துடன் முழுமையான உறவுகளைக் கொண்டிராத பல ஆசிய நாடுகள், திறந்த மனதுடன் உரையாடல் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதே என் ஆழ்ந்த நம்பிக்கை.
அன்பு சகோதர ஆயர்களே, பழமைக் கலாச்சாரமும், பாரம்பரியமும் கொண்டு, பரந்து விரிந்த ஆசியக் கண்டத்தைக் காணும்போது, அங்கு வாழும் கிறிஸ்தவக் குடும்பம், ஒரு சிறு மந்தை என்பதை உணர்கிறோம். ஆயினும், இச்சிறு மந்தை, விவிலிய ஒளியை உலகின் எல்லைகளுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. நல்லாயனாம் இறைவன், இச்சிறு மந்தையை வழிநடத்தி, உலகெங்கும் பரவியுள்ள மந்தையுடன் ஒருங்கிணைப்பாராக! திருஅவையின் தாயான அன்னைமரியாவின் பரிந்துரை உங்கள் அனைவருக்கும் கிடைப்பதாக!
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 
ஆறாவது ஆசிய இளையோர் தின நிறைவு நிகழ்வு
 
ஆக.17,2014. Haemi திருத்தலத்திலிருந்து 1.7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Haemi அரண்மனை வளாகம் சென்ற திருத்தந்தையை வரவேற்க, ஏறக்குறைய 22 ஆசிய நாடுகளின் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் கூடியிருந்தனர். கடற்கொள்ளையரிடமிருந்து நகரைப் பாதுகாப்பதற்காக 1421ம் ஆண்டில் கட்டப்பட்ட Haemi அரண்மனை, 1490ம் ஆண்டில் இராணுவத்தின் மையமாகவும், சிறையாகவும் மாறியது. 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறைகள், சித்ரவதைகள் மற்றும் கொலைகளுக்கு இந்த Haemi அரண்மனை வளாகம் பயன்படுத்தப்பட்டது. இங்கு ஏறக்குறைய மூவாயிரம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வளாகத்தில் இஞ்ஞாயிறு மாலை 4.30 மணிக்குத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் திருத்தந்தை ஆங்கிலத்தில் மறையுரையாற்றினார். இந்தி, ஜப்பானியம், ஆங்கிலம், லாவோஸ், கொரியம் ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு இடம்பெற்றது. இந்த 6வது ஆசிய இளையோர் தின நிறைவுத் திருப்பலியின் இறுதியில், கொரிய ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Peter Kang U-il அவர்களும்,   மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர்.
இத்திருப்பலியின் இறுதியில் இந்தோனேசிய இளையோர் குழு ஒன்று ஆசிய இளையோர் தினத் திருச்சிலுவையை திருப்பலி மேடை சென்று பெற்றுக்கொண்டது. 1991ம் ஆண்டில் போலந்து நாட்டின் செஸ்டகோவாவில் நடந்த உலக இளையோர் தினத்தில் கலந்துகொண்ட ஆசிய இளையோர் பிரதிநிதிகள் குழு, ஆசிய இளையோர் தினம் தேவை என்று கேட்டதன் பேரில் 1993ம் ஆண்டில் முதல் ஆசிய இளையோர் தினம் பாங்காக்கில் சிறப்பிக்கப்பட்டது. 2003ல் இத்தினம் பங்களூருவில் நடந்தது.
ஆசிய இளையோர் தினத்தை நிறைவு செய்து மீண்டும் ஹெலிகாப்டரில் செயோல் சென்று திருப்பீட தூதரகத்தில் இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் இத்திருப்பயணத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. தென் கொரியத் திருப்பயணத்தை இத்திங்களன்று நிறைவு செய்து திங்கள் மாலை 6 மணிபோல் உரோம் வந்து சேருவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 
ஆதராம் : வத்திக்கான் வானொலி
 
திருத்தந்தை 6வது ஆசிய இளையோர் நாள் திருப்பலியில் வழங்கிய மறையுரை - உறங்கும் இளையோரைக் கண்டால் எனக்கு வருத்தமாக உள்ளது!
 
ஆக.17,2014. அன்பு இளைய நண்பர்களே, மறைசாட்சிகளின் மகிமை உங்கள் மீது ஒளிர்கிறது. 6வது ஆசிய இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்ட விருதுவாக்கின் ஒரு பகுதியான இவ்வார்த்தைகள், நமக்கு உறுதியூட்டுகின்றன. மரணத்தைத் துணிந்து சந்தித்த கொரிய மறைசாட்சிகள், உண்மையிலேயே நம் அனைவருக்கும் உறுதியளிக்கின்றனர்!
இந்த விருதுவாக்கின் மற்றொரு பகுதியாக இருப்பது - ஆசிய இளையோரே, விழித்தெழுங்கள்! இந்த மூன்று வார்த்தைகளை இன்று நாம் சிந்திப்போம்.
முதல் வார்த்தை - 'ஆசிய' என்பது. பழமையும், செறிவும் மிகுந்த வரலாறும், கலாச்சாரமும் கொண்ட ஆசியக் கண்டத்தின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் இளையோரே, உங்கள் சமுதாயங்களின் வாழ்வில் முழுமையாக ஈடுபட தயங்காதீர்கள்! நம்பிக்கையின் அறிவொளியை வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் கொண்டு செல்ல அஞ்சாதீர்கள்!
ஆசியர்களாகிய நீங்கள், உங்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் விளங்கும் உன்னதமான, உண்மையான அம்சங்களை அன்புடன் ஏற்றுக் கொள்கிறீர்கள். விவிலிய விழுமியங்கள், கத்தோலிக்க நம்பிக்கை இவற்றுடன் இந்த அம்சங்களை இணைத்து வாழுங்கள். இன்றையக் கலாச்சாரம் தரும் தவறானவற்றை விட்டு அகலுங்கள்.
 
விருதுவாக்கின் இரண்டாவது வார்த்தை, 'இளையோரே'. நேர்மறை உணர்வுகள், சக்தி, நல்மனம் ஆகியவை, இளமைக்குரிய பண்புகள். உங்களிடம் விளங்கும் நேர்மறை உணர்வுகளை, கிறிஸ்தவ நம்பிக்கையாக, கிறிஸ்து உங்களில் மாற்றுவாராக! உங்கள் சக்தியை, நன்னெறி புண்ணியமாகவும், உங்கள் நல்மனதை, தியாகம் செய்யும் அன்பாகவும் மாற்றுவாராக!
திருஅவையின் நிகழ்காலம், நீங்களே! உங்கள் ஆயர்கள், அருள் பணியாளர்கள், உங்களுடன் பயிலும், அல்லது பணியாற்றும் இளையோர் அனைவரோடும் உறவு கொண்டு, தற்போதைய புனிதத் திருஅவையை, இன்னும் புனிதமான திருஅவையாக, இன்னும் பணிவுள்ள திருஅவையாக மாற்றுங்கள். சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோருக்கு, வறியோருக்கு, தனிமையில் வாடுவோருக்கு, நோயுற்றோருக்குப் பணியாற்றுவதன் வழியாக, இத்திருஅவை, இறைவனை அன்புசெய்து, வழிபடுகிறது.
'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று குரலெழுப்பிய கானானியப் பெண்ணைப் போல, எத்தனையோ பேரின் கூக்குரல்கள் இவ்வுலகில் எழுந்தவண்ணம் உள்ளன. அப்பெண்ணை அனுப்பிவிடுவதற்கு சீடர்களுக்குச் சோதனை எழுந்ததுபோல, உங்களுக்கும் சோதனைகள் எழலாம். உதவிகேட்டு குரல் எழுப்புவோரைக் கண்டு விலகிச் செல்லாமல், அவர்களை நெருங்கி உதவிகள் செய்வோம்.
மூன்றாவது வார்த்தை - 'விழித்தெழுங்கள்'. ஆண்டவர், இளையோராகிய உங்களை நோக்கி விடுக்கும் ஒரு சிறப்பு அழைப்பு இது. புனிதத்தின் அழகு, விவிலியத்தின் மகிழ்வு ஆகிய உன்னத நிலையை விட்டு விலகி, உங்கள் மனம் உறங்கிக் கொண்டிருந்தால், இப்போது விழித்தெழுங்கள்! உறங்கும் இளையோரைக் கண்டால் எனக்கு வருத்தமாக உள்ளது. உறங்குபவர்கள், பாடி, ஆடி, மகிழ முடியாது. இறைவனின் அன்பையும், கருணையையும் பெற்ற நீங்கள், மற்றவரோடு இதைப் பகிர்ந்து, ஆடி, பாடி மகிழுங்கள்! ஆசியக் கண்டத்தில் உங்களுடன் கல்வி பயில்வோர், உடன் உழைப்போர் அனைவருக்கும் இந்த மகிழ்வை எடுத்துச் செல்லுங்கள்.
இறைவனை இவ்வுலகிற்குக் கொணர்ந்த அன்னை மரியாவை அணுகிச் செல்வோம். மற்றவர்களுக்குப் பணிபுரிய, மரியன்னையின் பாசம் நம்மை வழிநடத்துவதாக!
இந்நாட்டிலும், ஆசியா முழுவதிலும் இயேசுவை மகிமைப்படுத்த மரியன்னை நமக்கு உதவுவாராக! ஆமென்!
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...