செய்திகள் - 07.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இயேசு சபை மீண்டும் பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்ட 200ம் ஆண்டு நினைவு – திருத்தந்தையுடன் திருப்பலி
2. கொலம்பஸ் தளபதிகள் அமைப்பின் 132வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
3. திருஅவையையும் உலகையும் இணைக்கும் ஒரு பாலம், திருத்தந்தை ஆறாம் பவுல் - கர்தினால் Battista Re
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், சிரியாவின் Aleppo பேராயர் சந்திப்பு
5. அச்சத்துடன் வாழ்வது, தன்னை ஒரு கைதியாக மாற்றிவிடும் - நைஜீரியப் பேராயர் கைகாமா
6. அணு ஆயதங்கள் அற்ற வருங்காலத்தை உருவாக்க ஹிரோஷிமா நம்மை மேலும் தூண்டவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்
7. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 69வது ஆண்டு நினைவு - Pax Christi அமைப்பு
8. இரயில் நடைமேடை இடையே சிக்கிய பயணியின் கால்: மக்கள் சக்தியால் பத்திரமாக மீட்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இயேசு சபை மீண்டும் பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்ட 200ம் ஆண்டு நினைவு – திருத்தந்தையுடன் திருப்பலி
ஆக.07,2014. "தன்னுடைய இதயத்திலும் அடுத்தவர் இதயங்களிலும் தான் என்பதைக் குறைத்துக் கொண்டு, ஆண்டவரை வளர விடுபவரே கிறிஸ்தவர்" என்ற வார்த்தைகளை, தன் Twitter செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 7ம் தேதி, இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மேலும், இயேசு சபையில் இறுதி நிலை பயிற்சியில் உள்ளவர்களைப் பயிற்றுவிப்போருடன், இவ்வியாழன் காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அகில உலக இயேசு சபை தலைவர் அருள்பணி அடோல்ஃப் நிக்கோலாஸ் அவர்கள் உட்பட, பல
நாடுகளைச் சேர்ந்த 26 பேர் இத்திருப்பலியில் பங்கெடுத்தனர். இவர்களில்
இருவர் மதுரை இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இத்திருப்பலியின்
இறுதியில் ஒவ்வொருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் உரையாடி, கைகுலுக்கி பின்னர் அனைவரும் திருத்தந்தையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
1773ம் ஆண்டு, ஜூலை 21ம் தேதி, திருத்தந்தை 14ம் கிளமென்ட் அவர்களால் கலைக்கப்பட்ட இயேசு சபை, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, 1814ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
உரோம் நகரில், இயேசு சபையினரின் தாய் ஆலயம் என்றழைக்கப்படும் Gesu கோவிலில் அமைந்துள்ள பிரபுக்களின் சிற்றாலயத்தில், திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களின் முன்னிலையில், "Solicitudo omnium ecclesiarum" என்ற சுற்றுமடல் வாசிக்கப்பட்டு, இயேசு சபை மீண்டும் பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்டது.
இயேசு
சபை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் 200ம் ஆண்டு நினைவு
தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு சபை இன்று உலகின் ஆறு கண்டங்களின்
112 நாடுகளில் 17,287 உறுப்பினர்களைக் கொண்டு பணியாற்றி வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கொலம்பஸ் தளபதிகள் அமைப்பின் 132வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
ஆக.07,2014. நமது கிறிஸ்தவ நம்பிக்கை அன்பினால் முழுமை பெறுவதுபோல், கொலம்பஸ் தளபதிகளாகிய (Knights of Colombus) உங்கள் உடன்பிறப்பு உணர்வு, பிறரன்புச் சேவைகளில் ஒளிர்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 5, இச்செவ்வாய் முதல் 7, இவ்வியாழன் முடிய, அமெரிக்காவின் Orlando நகரில் நடைபெற்ற கொலம்பஸ் தளபதிகள் அமைப்பின் 132வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"நீங்கள் அனைவரும் உடன்பிறந்தோர்: உடன்பிறப்பு என்ற நிலைக்கு நமது அழைப்பு" என்ற மையக் கருத்து இந்த ஆண்டுக் கூட்டத்திற்காக, கொலம்பஸ் தளபதிகள் அமைப்பினர் தேர்ந்துகொண்டது, திருத்தந்தையின் மனதுக்குப் பிடித்த ஒரு கருத்து என்று கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
132 ஆண்டுகளுக்கு முன்னர், இறையடியார் Michael McGivney அவர்களின்
முயற்சியால் துவக்கப்பட்ட கொலம்பஸ் தளபதிகள் என்ற அமைப்பில் தற்போது 20
இலட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
Orlando நகரில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில், 11 கர்தினால்கள், 90க்கும் அதிகமான ஆயர்கள் உட்பட, 2000க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பல்வேறு பிறரன்புச் சேவைகளில் ஈடுபட்டுவரும் கொலம்பஸ் தளபதிகள் அமைப்பினர், 2013ம் ஆண்டு ஒரு கோடியே 70 இலட்சம் டாலர்கள் திரட்டி, பல்வேறு பிறரன்புப் பணிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNS
3. திருஅவையையும் உலகையும் இணைக்கும் ஒரு பாலம், திருத்தந்தை ஆறாம் பவுல் - கர்தினால் Battista Re
ஆக.07,2014. கத்தோலிக்கத் திருஅவையையும் நவீன உலகையும் இணைக்கும் ஒரு பாலமாக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் என்று கர்தினால் Giovanni Battista Re அவர்கள் கூறினார்.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறைவனடி சேர்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் மறைவின் 36ம் ஆண்டு நிறைவு திருப்பலியில், ஆயர்கள் திருப்பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் Battista Re அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
அன்பு குறைந்து, வன்முறைகள் வளர்ந்து வந்த உலகில் வாழ்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், அன்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று கர்தினால் Battista Re அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இத்தாலியை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் திருத்தந்தையாகவும், ஒப்புரவை வளர்க்க புனித பூமிக்கு பயணித்த திருத்தந்தையாகவும், இவ்வுலகில் தான் ஒரு பயணி என்று, ஐக்கிய நாடுகள் அவையில் தன்னை அறிமுகம் செய்த திருத்தந்தையாகவும் ஆறாம் பவுல் அவர்கள் விளங்கினார் என்று கர்தினால் Battista Re அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், சிரியாவின் Aleppo பேராயர் சந்திப்பு
ஆக.07,2014. மின்சக்தி, தண்ணீர் வசதி ஏதும் இல்லாத நிலையில், அடுத்தத் தாக்குதல் எப்போது நிகழும் என்ற பதைபதைப்புடன் வானத்தைப் பார்த்தபடியே வாழும் மக்களே Aleppo நகரில் உள்ளனர் என்று Aleppo பேராயர் Boutros Marayati அவர்கள் கூறினார்.
சிரியாவின் உள்நாட்டுப் போரினால் கடந்த மூன்றாடுகளுக்கும் மேலாக துன்பங்களை அனுபவித்து வரும் Aleppo நகரில் ஆர்மேனிய கத்தோலிக்கப் பேராயராகப் பணியாற்றிவரும் Marayati அவர்கள், இப்புதன் பொது மறையுரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, சிரியாவின் இன்றைய நிலை குறித்து விளக்கினார்.
இத்தகைய வன்முறைகளின் மத்தியிலும், தன் உயர் மறைமாவட்டத்தில் மறைக்கல்வி வகுப்புக்களை நடத்தி வரும் Yaghlji Gemma என்ற இளம் தாய் ஒருவரை, பேராயர் Marayati அவர்கள், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
எளிய மக்களிடம் விளங்கும் நம்பிக்கை, சிரியா தலத்திருஅவைக்கு பெரும் உந்து சக்தியாக விளங்குகிறது என்று பேராயர் Marayati அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அச்சத்துடன் வாழ்வது, தன்னை ஒரு கைதியாக மாற்றிவிடும் - நைஜீரியப் பேராயர் கைகாமா
ஆக.07,2014. Boko Haram இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரால் உருவாகும் ஆபத்துக்களை அறிந்தபோதும், தான் மக்கள் மத்தியில் தொடர்ந்து வாழ்வதே முக்கியம் என்று நைஜீரிய ஆயர் ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டு வரும் Boko Haram வன்முறை கும்பலின் ஆபத்துக்களை துணிவுடன் எதிர்கொள்ள விரும்புவதாக Jos உயர் மறைமாவட்டத்தின் பேராயர் இக்னேசியஸ் கைகாமா அவர்கள் Aid to the Church in Need அமைப்பினருக்கு வழங்கியப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
நைஜீரியாவில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்வுகளிலும் ஆயர் உடையுடன் தான் பங்கேற்பதாகக் கூறிய பேராயர் கைகாமா அவர்கள், அச்சத்துடன் தன்னை மட்டும் காத்துக்கொள்ள முயல்வது, தன்னை ஒரு கைதியாக மாற்றிவிடும் என்று குறிப்பிட்டார்.
வாழ்வில் பல வசதிகளை இழந்து, அச்சத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஆயரும், அருள் பணியாளர்களும் அச்சத்தை வெளிப்படுத்துவது, மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையைக் குலைக்கும் என்று பேராயர் கைகாமா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
2009ம் ஆண்டு முதல் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் Boko Haram குழுவால் இதுவரை 2000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; Jos நகர் பேராலயத்தில் மேமாதம் 20ம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை, 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 56 பேர் காயமுற்றுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : CNA/EWTN
6. அணு ஆயதங்கள் அற்ற வருங்காலத்தை உருவாக்க ஹிரோஷிமா நம்மை மேலும் தூண்டவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்
ஆக.07,2014. கடந்த 69 ஆண்டுகளாக போரை மேற்கொள்ளாது வாழ்ந்துவரும் நாடாக நாம் திகழ்கிறோம் என்று ஹிரோஷிமா நகர மேயர் Kazumi Matsui அவர்கள், ஜப்பான் பிரதமரிடமும், மக்களிடமும் கூறினார்.
ஆகஸ்ட் 6, இப்புதனன்று, ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 69வது ஆண்டை நினைவுகூர, பல்லாயிரம் மக்கள் அந்நகரில் அமைந்துள்ள அமைதி நினைவுச் சின்னத்தின் முன்பு கூடியிருந்தபோது, அந்நகர மேயர் Matsui அவர்கள் இவ்வாறு கூறினார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, 70 நாடுகளின் பிரதிநிதிகளோடு, 45,000க்கும் அதிகமான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் பேசிய மேயர் Matsui அவர்கள், அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா உட்பட, உலகத் தலைவர்கள் அனைவரும் ஹிரோஷிமா வந்து, அணுகுண்டின் அழிவை உணரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஹிரோஷிமாவில் 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அழிவுகள், அணு
ஆயதங்கள் அற்ற வருங்காலத்தை உருவாக்க நம்மை மேலும் தூண்டவேண்டும் என்று
ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் அனுப்பிய செய்தியை, ஐ.நா. உயர் அதிகாரி, Angela Kane அவர்கள் அமைதி நினைவுச் சின்னத்தின் முன்பு கூடியிருந்த மக்களிடம் வாசித்தார்.
போர்களை
மேற்கொள்வதில்லை என்று ஜப்பான் நாட்டின் சட்டம் 9 கூறிவருவதை மறு பரிசீலனை
செய்யவேண்டும் என்று ஜப்பான் பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதங்கள்
எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
ஆதாரம் : AsiaNews / UN
7. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 69வது ஆண்டு நினைவு - Pax Christi அமைப்பு
ஆக.07,2014. ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 69வது ஆண்டு நினைவைக் கடைபிடிக்கும் ஒரு முயற்சியாக, Pax Christi அமைப்பினர், இப்புதனன்று Westminster பேராலயத்திற்கு முன்பாக அமைதி செப வழிபாட்டை மேற்கொண்டனர்.
முதல் உலகப் போரின் 100ம் ஆண்டை நினைவுகூரும் இவ்வேளையில், இருபதாம்
நூற்றாண்டு இரு உலகப் போர்களை மேற்கொண்ட காரணங்களை ஆய்வு செய்ய நாம்
அழைக்கப்பட்டுள்ளோம் என்று ஜப்பான் ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையை, Pax Christi தலைவர், Pat Gaffney அவர்கள், இந்த வழிபாட்டில் வாசித்தார்.
போர் மனிதர்களின் செயல்பாடு, போர் மனித உயிரின் அழிவு, போரை
விட மதியற்ற ஒரு செயல் இருக்க முடியாது என்பதை ஹிரோஷிமா நமக்கு
நினைவுறுத்துகிறது என்று புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், ஜப்பானுக்கு 1981ம் ஆண்டு சென்றபோது, ஹிரோஷிமா அமைதி நினைவிடத்தில் கூறினார்.
புனிதத் திருத்தந்தையின் இந்தக் கூற்றும் Pax Christi அமைப்பினர் மேற்கொண்ட இந்த வழிபாட்டில் வாசிக்கப்பட்டது.
மேலும் Pax Christi அமைப்பினர், ஆகஸ்ட் 9, இச்சனிக்கிழமையன்று நாகசாகி அணுகுண்டு வீச்சு நினைவையும் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆதாரம் : ICN
8. இரயில் நடைமேடை இடையே சிக்கிய பயணியின் கால்: மக்கள் சக்தியால் பத்திரமாக மீட்பு
ஆக.07,2014. ஆஸ்திரேலியாவில் புறநகர் இரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவே சிக்கிய பயணி ஒருவரின் கால், பயணிகளின் முயற்சியால் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சிரியமடைய செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின்
பெர்த் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் இரயில் நிலையத்தில் இப்புதன் காலை
வழக்கம் போல பயணிகள் அனைவரும் தங்கள் பணிகளுக்கு செல்வற்காக வந்து கூடினர்.
ரயில் மேடைக்கு 8.50 மணி அளவில் வழக்கம் போல புறநகர் இரயில் வந்து
சேர்ந்தது. பயணிகள் அனைவரும் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த போது, பயணி ஒருவரின் கால் இரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே மாட்டிக்கொண்டது.
இதனையடுத்து, இரயில்வே நிரவாகத்திடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு, இரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் உதவி செய்தும், மாட்டிய காலை வெளியே எடுக்க முடியவில்லை.
அங்கிருந்த
பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரயிலை எதிர்புறம் சாய்க்க முடிவு
செய்தனர். இரயிலின் உள்ளும் மற்றும் நடைமேடையிலும் இருந்த பயணிகள் அனைவரும்
ஒன்று சேர்ந்து இரயிலை ஒரே மூச்சில் தள்ளவே, இரயில் ஒரு பக்கமாக சற்று சாய்ந்தது, மாட்டிய காலை அந்தப் பயணி பத்திரமாக வெளியே இழுத்தார்.
இது குறித்து இரயில்வே செய்தி தொடர்பாளர் கூறும்போது, "இது போன்ற ஒரு சம்பவத்தை நான் இதுவரை கண்டதும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்ததால், பயணியை லேசான காயத்துடன் மீட்க முடிந்தது" என்றார்.
Transperth passengers rescue man at Stirling Station என்ற பெயரில், பதிவாகியுள்ள இச்சம்பவத்தின் வீடியோ, YouTubeல் தற்போது பலராலும் கண்டு, பகிரப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment