Tuesday 19 August 2014

செய்திகள் - 11.08.14

செய்திகள் - 11.08.14
------------------------------------------------------------------------------------------------------
 
1. திருத்தந்தை : நமது விசுவாசம் உறுதியற்றதாக இருந்தாலும் அது எப்போதும் வெற்றியடையக்கூடியது
 
2. திருத்தந்தை :  ஈராக்கிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள், இறைவனையும் மனிதகுலத்தையும் காயப்படுத்துகின்றன
 
3. 'ஆசிய இளைஞர்களே எழுந்திருங்கள், மறைசாட்சிகளின் மகிமை உங்கள்மேல் ஒளிர்விடுகின்றது'
 
4. ஈரானில் விமானம் விபத்துக்குள்ளானதையொட்டி திருத்தந்தையின் இரங்கல் தந்தி
 
5. பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை இழந்து நிற்பது பாவம்
 
6. 'காணாமல்போனோர் ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை': மன்னார் ஆயர்
 
7. சிறார் சட்டத்தில் திருத்தம்: 'யுனிசெப்' கடும் கவலை
 
------------------------------------------------------------------------------------------------------
 
1. திருத்தந்தை : நமது விசுவாசம் உறுதியற்றதாக இருந்தாலும் அது எப்போதும் வெற்றியடையக்கூடியது
 
ஆக. 11, 2014.  நமது விசுவாசம் உறுதியற்றதாக இருந்தாலும் அது எப்போதும் வெற்றியடையக்கூடியது மட்டுமல்ல, எத்தனை புயல்கள் மற்றும் துன்பங்கள் மத்தியிலும் இயேசுவை நோக்கியே நடந்துச் செல்ல வல்லது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் கூறப்பட்டுள்ள, இயேசு கடல்மீது நடந்த புதுமை குறித்து நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் அழைப்பை ஏற்று, கடல்மீது காலடி எடுத்து வைத்த பேதுரு, இயேசுவிடமிருந்து தன் பார்வையை விலக்கும்போது, கடலில் மூழ்கும் நிலைக்கு வருகிறார், ஆனால் இயேசுவோ அவரை ஆபத்திலிருந்துக் காப்பாற்ற அருகிலேயே இருக்கிறார் என்றார்.
புயலால் கவிழவிருக்கும் படகைக் காப்பது அதில் பயணம் செய்யும் மனிதர்களின் தரமோ அல்லது வீரமோ அல்ல, மாறாக நம்மை இருளிலும் சிரமங்கள் மத்தியிலும் நடக்கவைக்கும் விசுவாசமேயாகும் எனவும் எடுத்தியம்பினார் திருத்தந்தை.
நம்முடன் படகில் நம் இறைவன் இருக்கும்போது, அங்கு நம் குறைபாடுகளையும் பலவீனங்களையும் தாண்டி நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனை எப்போது வணங்கி ஆராதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என மேலும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புயல் ஓய்ந்ததும் படகில் இருந்தவர்கள் கிறிஸ்துவை வணங்கி 'உண்மையில் நீரே இறைமகன்' என எடுத்தியம்பியதையும் சுட்டிக்காட்டினார்.
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 
2. திருத்தந்தை :  ஈராக்கிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள், இறைவனையும் மனிதகுலத்தையும் காயப்படுத்துகின்றன
 
ஆக. 11, 2014.  ஈராக்கிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் வன்முறைகள், இறைவனையும் மனிதகுலத்தையும் காயப்படுத்துபவைகளாக உள்ளன என தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பகைமையும் போரும் எக்காலத்திலும் இறைவனின் பெயரால் நடத்தப்படக்கூடாது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் போரால் துன்புறும் மக்களுக்காக, குறிப்பாக பசியால் வாடும் குழந்தைகள், வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் ஆகியோருக்காக ஒரு நிமிடம் அமைதியில் செபிப்போம் எனவும் அழைப்பு விடுத்தார்.
துன்புறும் மக்களுக்கு துணிவுடன் உதவிகளை ஆற்றும் அனைவருக்கும் தன் நன்றிகளையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காசா பகுதியில் இடம்பெறும் போர் குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பாவி மக்களையே பழிவாங்கிவரும் இத்தகைய போர்கள், இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை அதிகரிக்க உதவுமேயொழிய வேறொன்றிற்கும் உதவாது என்றார்.
இவ்வாரம் புதன் முதல் வரும் திங்கள் வரை தென்கொரியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்தும் தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் செபத்தோடு அனைவரும் தன்னோடு பயணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 
3. 'ஆசிய இளைஞர்களே எழுந்திருங்கள், மறைசாட்சிகளின் மகிமை உங்கள்மேல் ஒளிர்விடுகின்றது'
 
ஆக. 11, 2014.  கொரிய சமூகத்திற்கும் திருஅவைக்கும் தன் இவ்வாரத் திருப்பயணம் நல்கனிகளைக் கொணரவேண்டும் என தன்னோடுச் சேர்ந்து கொரிய மக்கள் அனைவரும் செபிக்கவேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு ஒலி-ஒளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆறாவது ஆசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கொரிய நாட்டிற்கு வரும் நான், 'ஆசிய இளைஞர்களே எழுந்திருங்கள், மறைசாட்சிகளின் மகிமை உங்கள்மேல் ஒளிர்விடுகின்றது' எனக்கூற ஆவல் கொள்கின்றேன் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 16ம் தேதி கொரியாவில், இறையடியார் பால் யுன் சி-சுங் மற்றும் அவரின் 123 உடனுழைப்பாளர்களை அருளாளர்களாக அறிவிக்க உள்ளதையும் எடுத்துரைத்துள்ளார்.
வருங்காலத்தின் நம்பிக்கை மற்றும் சக்தியாக இருக்கும் இளையோர், நம் காலத்தின் ஆன்மீக மற்றும் ஒழுக்கரீதி நெருக்கடிகளின் பலிக்கடாக்களாகவும் மாறிவருகிறார்கள் என்ற கவலையையும் வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதிலிருந்து நம்மையெல்லாம் மீட்கவல்ல ஒரே பெயர் கிறிஸ்துவே எனவும் கூறியுள்ளார்.
முதியோருக்கும் இளையோருக்கும் இடையே நிலவவேண்டிய நல்லுறவுகள் பற்றியும் எடுத்துக்கூறி, மனித குல பாதையை நடைபோட வைப்பது இந்த நல்லுறவே என மேலும் தன் ஒலி-ஒளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 
4. ஈரானில் விமானம் விபத்துக்குள்ளானதையொட்டி திருத்தந்தையின் இரங்கல் தந்தி
 
ஆக. 11, 2014.  இஞ்ஞாயிறன்று ஈரானில் உள்நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 38பேர் உயிரிழந்தது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி அந்நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள், ஈரான் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் இக்னாசியோ பெதினிக்கு அனுப்பியுள்ள தந்தியில், இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தையின் இதயம் நிறைந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தங்களால் அன்புச் செய்யப்பட்டவர்களின் இழப்புக் குறித்து துன்புறுவோர்க்கு அதைத் தாங்கும் பலம், ஆறுதல் மற்றும் அமைதியை வழங்கும் இறைவனின் ஆசீருக்கு வேண்டுவதாகவும் திருத்தந்தையின் உறுதி அச்செய்தி வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து கிழக்கு நகரான தபாஸ் நோக்கி புறப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 48 பேரில் 38 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
 
5. பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை இழந்து நிற்பது பாவம்
 
ஆக. 11, 2014.  ஈராக்கில் துன்புறும் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் துன்பங்களோடு பங்கெடுக்க விரும்பும் திருத்தந்தை, தன் பிரதிநிதியாக அப்பகுதிக்கு தன்னை அனுப்பியுள்ளதாக இஞ்ஞாயிறன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்ததையொட்டி பத்திரிகையாளர்களிடம் கூறினார் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி.
ஈராக்கின் துன்பநிலைகள் குறித்து பலமுறை தன் கவலையை திருத்தந்தை வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஃபிலோனி அவர்கள், பெரும்பான்மையினராக வாழும் இஸ்லாமியர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சிறுபான்மையினரான ஈராக் கிறிஸ்தவர்கள், தற்போது தாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த இடங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை தற்போது இழந்து நிற்பது பாவமாகும் எனவும் கூறினார் கர்தினால்.
கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவும், அவர்களின் வருங்கால வாழ்வுக்கு ஈராக் அரசு உறுதி வழங்கும் என்ற நம்பிக்கையுடனும் ஈராக் நாட்டிற்கு தான் திருத்தந்தையின் பிரதிநிதியாக பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் கர்தினால் ஃபிலோனி.
 
ஆதாரம் வத்திக்கான் வானொலி
 
6. 'காணாமல்போனோர் ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை': மன்னார் ஆயர்
 
ஆக. 11, 2014.  இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான அரசுத்தலைவர் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை இல்லையென்றபோதிலும், காணாமல்போனவர்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய தமது ஆதங்கத்தைத் தெரிவிப்பதற்காக சாட்சியம் வழங்குவதாகக் கூறியுள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, ஆணைக்குழுவின் முன் தோன்றிய மன்னார் ஆயர், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின்
காணாமல்போனவர்கள் பற்றிய விடயங்கள் மட்டுமல்லாமல், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
பலவிதமாகக் காணாமல் போயிருப்பவர்கள், உழைப்பாளிகளின்றி தனிமையில் வாடுகின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், உரிய விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்கள், மதங்களுக்கிடையில் குரோதங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படாமை உள்ளிட்ட 14 விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மன்னார் ஆயர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையிலான தமது சாட்சியத்தின்போது வலியுறுத்தினார்.
 
ஆதாரம் : BBC
 
7. சிறார் சட்டத்தில் திருத்தம்: 'யுனிசெப்' கடும் கவலை
 
ஆக. 11, 2014.  சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான இந்திய அரசின் அறிவிப்புக்கு, 'யுனிசெப்' கவலை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கும் சில நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிறார் சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாகவும், சிறாருக்கான வயது வரம்பை, தற்போதுள்ள, 18லிருந்து, 16 ஆக குறைக்கப் போவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியகம், 'யுனிசெப்' கவலையை வெளியிட்டுள்ளது.
சிறார் வயது வரம்பு என்பது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சிந்தனை திறன் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து, சர்வதேச நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வகுக்கப்பட்டுள்ளது, சிறார் தொடர்பான வழக்குகளை, வழக்கமான வழக்காடுமன்றங்களுக்கு மாற்றி, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், குற்றங்களை குறைக்க முடியாது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள், ஆய்வு முடிவுகள் உள்ளன எனக்கூறும் 'யுனிசெப்' அமைப்பு, குழந்தைகளை பாதுகாப்பதற்கு கடுமையான நடைமுறைகளை உருவாக்குவது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளது.
 
ஆதாரம் : தினமலர்
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...