புனித பவுல் கூறும் "என் அன்பார்ந்த பிள்ளை"
(Saint Timothy)
திமொத்தேயு என்பவர் கிறிஸ்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து, கி.பி. 97ம்
ஆண்டளவில் இறந்த ஒரு புனித ஆயர் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு
"கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள்
உண்டு.
புதிய ஏற்பாட்டின்படி, திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும்.
திமொத்தேயு பற்றிய சில குறிப்புகள் திருத்தூதர் பணிகள் நூலிலும், புனித பவுல் பல்வேறு திருஅவைகளுக்கு எழுதியக் கடிதங்களிலும் காணக்கிடக்கின்றன.
பவுல், திமொத்தேயுவை "என் அன்பார்ந்த பிள்ளை" என்று அழைப்பதையும், திமொத்தேயு பவுலோடு சேர்ந்து பல மறையறிவிப்புப் பயணங்களை மேற்கொண்டதையும், திமொத்தேயு திருப்பணியில் அமர்த்தப்பட்டதையும், திமொத்தேயுவின் தாய் யூனிக்கி என்பவரும், பாட்டி லோயி என்பவரும் கடவுள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததையும், திமொத்தேயு சிறந்த விவிலிய அறிவு கொண்டிருந்தார் என்பதையும், திமொத்தேயு ஒருமுறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதையும், திமொத்தேயுக்கு ஒருவித வயிற்று நோய் இருந்ததையும் திருத்தூதர் பணிகள் நூல் மற்றும் பவுலின் கடிதங்கள் வழியே நாம் அறிகிறோம்.
பிற்கால மரபுப்படி, பவுல் திமொத்தேயுவை கி.பி. 65ம் ஆண்டளவில் எபேசு சபையின் ஆயராகத் திருநிலைப்படுத்தினார். அங்கே திமொத்தேயு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். கி.பி. 97ல், திமொத்தேயுவுக்கு 80 வயதானபோது, அவர் புறவினச் சமயக் கொண்டாட்டங்களைத் தடுக்க முயன்றபோது அவர்கள் அவரைத் தெருவில் இழுத்துக்கொண்டுபோய் கல்லால் எறிந்து, கொன்று போட்டனர் என அறிய வருகிறோம்.
கி.பி. 4ம் நூற்றாண்டில் திமொத்தேயுவின் புனிதப் பொருள்கள் காண்ஸ்டாண்டிநோபுளில் உள்ள தூய திருத்தூதர்கள் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
பவுலின் மற்றொரு சீடரான தீத்து என்பவரோடு இணைந்து திமோத்தேயுவின் விழா சனவரி 26ம் தேதி திருஅவையில் கொண்டாடப்படுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment