Friday 29 August 2014

செய்திகள் - 29.08.14

செய்திகள் - 29.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. முதல் உலகப் போரின்  நினைவாக, Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் திருத்தந்தை

2. புனித அகஸ்டின் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

3. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே - கர்தினால் Vegliò

4. உத்திரப் பிரதேசத்தில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்

5. குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் மதத் தலைவர்களைக் குறித்து நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் - பேராயர் Khazen

6. மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டம்

7. துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti

8. ஹெயிட்டி நிலநடுக்கத்தால் உடல் உறுப்புக்களை இழந்தோரின் கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி - ஆவணப் படம் வெளியீடு

------------------------------------------------------------------------------------------------------

1. முதல் உலகப் போரின்  நினைவாக, Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் திருத்தந்தை

ஆக.29,2014. வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி, சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வடகிழக்கு இத்தாலியில் அமைந்துள்ள Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் நிகழ்வின் விவரங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி காலை 8.00 மணிக்கு சம்பினோ விமானத் தளத்தலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 9 மணியளவில் Ronchi எனுமிடத்தில் உள்ள விமானத் தளத்தை அடைகிறார்.
9.15 மணிக்கு Redipuglia கல்லறைக்கு தனியேச் சென்று செபிக்கும் திருத்தந்தை, அருகில் உள்ள இராணுவ நினைவுக் கோவிலில் திருப்பலியாற்றி மறையுரை வழங்குகிறார்.
திருப்பலியின் இறுதியில், உலகின் அனைத்து போர்களிலும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபங்கள் சொல்லப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கோவிலில் உள்ள ஆயர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் எரியும் விளக்குகளை வழங்குவார் என்றும், இவ்விளக்குகள் முதல் உலகப் போரின்  நினைவாக பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள மிகப் பெரிய இராணுவக் கல்லறையான Redipugliaவில், முதல் உலகப் போரின்போது இறந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனித அகஸ்டின் பசிலிக்காவில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஆக.29,2014. தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும் என்ற ஆவலால் புனித அகஸ்டின் நிறைந்திருந்தார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 28, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட புனித அகஸ்டின் திருநாளையொட்டி, உரோம் நகரில் உள்ள புனித அகஸ்டின் பசிலிக்காவில் திருப்பலியாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், சென்ற ஆண்டு, இதேநாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு சென்று திருப்பலியாற்றி, புனித அகஸ்டின் துறவுச் சபையின் 184வது பொது அவையைத் துவக்கி வைத்ததை நினைவு கூர்ந்தார்.
அறிவுக் களஞ்சியமாக விளங்கிய புனித அகஸ்டின் அவர்களின் கருத்துக்களில் பலவற்றை மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இப்புனிதரைப் போல, தலைசிறந்த கிறிஸ்தவராகவும், மக்களை வழிநடத்தும் மேய்ப்பராகவும் வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் பசிலிக்காவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் வகையில், புனித அகஸ்டின் துறவுச் சபையினர் பசிலிக்காவில் பதித்திருந்த ஒரு நினைவுக் கல்லை, கர்தினால் பரோலின் அவர்கள், திறந்து வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே - கர்தினால் Vegliò

ஆக.29,2014. ஒடுக்கப்பட்ட வறியோரின் குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்படி, அவர்களைக் குறித்து நமது மறையுரைகளிலும், இன்னும் பல பொது உரைகளிலும் பேசுவதற்கு நாம் தயக்கமோ, சலிப்போ அடையக்கூடாது என்று திருத்தந்தை தன்னிடம் கூறியதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாடுவிட்டு நாடு செல்வோர் மேய்ப்புப்பணிக்காக செயலாற்றும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Antonio Maria Vegliò அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தபின், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகின் பல இடங்களில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò அவர்கள், உலகின் பல நாடுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை நாம் கேட்பதில்லை என்று எடுத்துரைத்தார்.
தங்களையே காத்துக்கொள்ள முடியாத, வலுவிழந்த மக்களைக் காப்பது திருஅவையின் முக்கிய கடமை என்பதில் திருத்தந்தை மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Vegliò அவர்கள், வன்முறையையே வாழ்வாகக் கொண்டுள்ளவர்களைத் தடுப்பதற்கு உலக அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உத்திரப் பிரதேசத்தில் இந்து அடிப்படைவாதக் குழுவினரின் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்

ஆக.29,2014. உத்திரப் பிரதேசத்தில் பழங்குடியினரான கிறிஸ்தவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றியிருக்கும் செயல்பாடு வருத்தத்தைத் தருகிறது என்று மும்பைப் பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
1995ம் ஆண்டு, உத்திரப் பிரதேசத்தில் உள்ள வால்மீகி என்ற பழங்குடியினரில் சிலர் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். அண்மையில் அவர்களை மீண்டும் இந்து மதத்தில் சேர்க்கும் ஒரு முயற்சியாக, இந்து அடிப்படைவாதக் குழுவினர், ஒரு கிறிஸ்தவக் கோவிலின் மீதிருந்த சிலுவையை உடைத்துவிட்டு, அக்கோவிலில் இந்துக் கடவுளின் படத்தை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களைத் தேடிச் சென்று உதவிகள் செய்வது, இந்தியத் திருஅவையின் வரலாறாக இருந்துள்ளது என்று கூறினார்.
இந்தியாவில் அண்மையக் காலங்களில் சகிப்பற்ற நிலை ஆபத்தான அளவு வளர்ந்துள்ளது என்றும், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கடந்த ஜூலை மாதம் முதல் பெருமளவில் வளர்ந்துள்ளன என்றும் இந்தியக் கிறிஸ்தவர்கள் உலக அவையின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews

5. குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் மதத் தலைவர்களைக் குறித்து நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் - பேராயர் Khazen

ஆக.29,2014. ஆயுதங்கள் வழியே வன்முறைகளைக் காட்டும் மனிதர்களைவிட, குழந்தைகள் மனதிலும் வன்முறையை வளர்க்கும் வகையில், மசூதிகளிலும், கோவில்களிலும் வெறுப்பைப் போதிக்கும் மதத் தலைவர்களைக் குறித்தே நாம் மிகவும் கவலை கொள்ளவேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிரியாவின் அலெப்போவில் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் George Abou Khazen அவர்கள், இத்தாலியில் நடைபெற்ற Rimini கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வாழும் இஸ்லாமியர், அனைவரோடும் இணைந்து வாழும் மென்மையான எண்ணங்களும், பழக்கங்களும் கொண்டவர்கள் என்று கூறிய பேராயர் Khazen அவர்கள், அந்நிய நாடுகளிலிருந்து சிரியாவிற்குள் ஊடுருவியுள்ள வன்முறையாளர்கள் தற்போது சிரியாவில் வெறுப்பை வளர்க்கும் போதனைகளைப் பரப்பி வருகின்றனர் என்று கவலை தெரிவித்தார்.
இந்த வன்முறையாளர்களுக்கு நிதி உதவிகள் செய்வது ஏனைய அரபு நாடுகள் என்பதை உலகம் நன்கு அறியும் என்று கூறிய பேராயர் Khazen அவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக போர்க்களமாக மாறியுள்ள சிரியாவில் அனைத்து அடிப்படை வசதிகளும் குறைந்துள்ளன என்று கூறினார்.

ஆதாரம் : Zenit

6. மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டம்

ஆக.29,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டுள்ளது.
1964 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் உச்சக்கட்ட நிகழ்வுகள் நடைபெற்றதைக் கொண்டாட, அடுத்த 12 மாதங்கள் பல்வேறு நிகழ்வுகளை அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டு வருகிறது.
மக்கள் உரிமைகள் இயக்கத்தில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் இந்தக் கொண்டாட்டங்களில் நினைவுகூரப்படும் என்று இக்கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் லுயிசியானா ஆயர், Shelton Fabre அவர்கள் கூறினார்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு சமுதாயப் படிப்பினைகளை உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்தப் பொன்விழா ஆண்டில் மக்களுக்கு விளக்க, இந்தக் கொண்டாட்டங்கள் உதவும் என்று ஆயர் Fabre மேலும் எடுத்துரைத்தார்.
1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கறுப்பின மக்களின் தலைவர், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "எனக்கொரு கனவு உண்டு" என்ற உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவு, மக்கள் உரிமைகள் இயக்கம் தீவிரமாகச் செயல்பட பெரும் உந்துதலாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN

7. துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti

ஆக.29,2014. உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு தந்தையைப் போல விளங்குகிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் Paul Bhatti அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 27ம் தேதி, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் வழங்கிய புதன் பொது மறையுரைக்குப் பின்னர், Paul Bhatti அவர்கள் தன் அன்னையுடன் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, Paul Bhatti அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், தன் அன்னை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்தது அவருக்குக் கிடைத்த மாபெரும் பேறு என்று கூறினார்.
கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பல்வேறு துன்பங்கள் குறித்து உலகச் சமுதாயம் மௌனம் காப்பது குறித்தும், இஸ்லாமியக் குழந்தைகளை வெறுப்பில் வளர்த்துவரும் ஒரு சில இஸ்லாமியத் தலைவர்கள் குறித்தும் Paul Bhatti அவர்கள் தன் பேட்டியில் கவலை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களின் சார்பில் பல்வேறு பிரச்சனைகளை அரசிடம் கூறிவந்த Shabhaz Bhatti அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபின்னர், அவரது சகோதரர் Paul Bhatti அவர்கள், பாகிஸ்தான் அரசின் அமைச்சர்களில் ஒருவராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit

8. ஹெயிட்டி நிலநடுக்கத்தால் உடல் உறுப்புக்களை இழந்தோரின் கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி - ஆவணப் படம் வெளியீடு

ஆக.29,2014. ஹெயிட்டியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை மையப்படுத்திய ஓர் ஆவணப் படம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆகஸ்ட் 30, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்படுகிறது.
The Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பும், EVTV என்ற தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், “Unbreakable: A Story of Hope and Healing in Haiti,” அதாவது, “உடைக்கமுடியாதது: ஹெயிட்டியில் நம்பிக்கையும், நலமும் வழங்கும் ஒரு கதை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு, சனவரியில் ஹெயிட்டியைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவு வலுவான நிலநடுக்கத்தால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்தோரைத் திரட்டி, அவர்களைக் கொண்டு, Zaryen என்று பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி இந்த ஆவணப் படம் விவரிக்கிறது.
Zaryen என்ற எட்டுக்கால் பூச்சி, தன் கால்களில் ஒன்றை இழந்தாலும், தொடர்ந்து வாழும் திறமை பெற்றது என்பதால், இந்த கால்பந்தாட்டக் குழுவிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது என்று The Knights of Columbus உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...