"ஆண்டவரே, நீர் எங்கே செல்கிறீர்?"
“Quo Vadis”
புனித பேதுருவைப் பற்றி கூறப்படும் “Quo Vadis” என்ற கதை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. உரோம் நகரில், மன்னன் நீரோ, கிறிஸ்தவர்களை வேட்டையாடி வந்த நேரத்தில், பல நண்பர்கள் கூடிவந்து, பேதுருவிடம், "நீங்கள் மிகவும் முக்கியமானவர். உங்கள் சேவை இந்த உலகிற்கு மிகவும் தேவை. எனவே, உரோம்
நகரை விட்டு வெளியேறுங்கள். இவ்வுலகின் ஏதாவது ஒரு பகுதியில் நீங்கள்
கிறிஸ்துவைப் போதிக்கச் செல்லுங்கள்" என்று அவரை வேண்டினர். பேதுருவுக்குள்
போராட்டம் எழுந்தது. இருப்பினும் நண்பர்கள் சொன்ன அறிவுரையைப் பின்பற்றி, அவர் உரோம் நகரை விட்டு இரவோடு இரவாகப் புறப்பட்டார்.
விடியற்காலையில் அவர் உரோம் நகர் எல்லையை அடைந்தபோது, அவருக்கு எதிர்புறமாக கிறிஸ்து உரோம் நகர் நோக்கி விரைந்து செல்வதைக் கண்டார். இந்த நிகழ்வை ஓவியமாகத் தீட்டிய ஒரு சிலர், இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு உரோம் நகர் நோக்கிச் செல்வதாகவும் சித்திரித்துள்ளனர். பேதுரு இயேசுவிடம் சென்று, "ஆண்டவரே, நீர் எங்கே செல்கிறீர்?" (“Quo vadis, Domine?”) என்று கேட்டபோது, இயேசு அவரிடம், "நான் உரோமையில் துன்புறும் மக்களோடு சேர்ந்து, மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்குச் செல்கிறேன். நீ எங்கே செல்கிறாய், பேதுரு?" என்று சொன்னார். இதைக் கேட்ட பேதுரு, மனமுருகி, கண்ணீர் விட்டபடி, மீண்டும் உரோம் நகர் திரும்பினார் என்று இந்தப் பாரம்பரியக் கதை சொல்கிறது. உரோம் நகரில், புனித பேதுரு, சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு மறைசாட்சியாக மரணம் அடைந்தார் என்பது நாமறிந்த வரலாறு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment