Wednesday, 27 August 2014

செய்திகள் - 27.08.14

செய்திகள் - 27.08.14
------------------------------------------------------------------------------------------------------

1. தான் போதித்த புண்ணியங்களை தன் வாழ்வாக்கியவர், திருத்தந்தை முதலாம் ஜான்பால் - கர்தினால் Beniamino Stella

2. கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, வாஷிங்க்டன் நகரில் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரைச் சந்திக்கவுள்ளார்

3. உரோம் நகரில், பல மதங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டி

4. அனைத்து மதங்களும், உரையாடல் வழியில் சமயப் பணிகள் ஆற்றுவதே இன்றையத் தேவை - பிலிப்பின்ஸ் கர்தினால் Quevedo

5. இஸ்லாமிய மதம் வன்முறையை உள்ளடக்கிய மதம் என்று ஒரு சிலர் கூறிவருவது தவறு - ஜெர்மன் ஆயர் பேரவை

6. காசா பகுதியில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையொட்டி கொண்டாட்டம்

7. பழங்குடியினர் மத்தியில் திருஅவை செய்துவரும் பணிகள் போற்றுதற்குரியன - இந்தியக் குடியரசுத் தலைவர்

8. மின்னணு சிகரெட்டுக்களால் நன்மைகள் உருவாகும் அதே நேரம், ஆபத்துக்களும் உள்ளன - WHO அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. தான் போதித்த புண்ணியங்களை தன் வாழ்வாக்கியவர், திருத்தந்தை முதலாம் ஜான்பால் - கர்தினால் Beniamino Stella

ஆக.27,2014. தான் போதித்த எளிமை, பிறரன்பு, கீழ்ப்படிதல் ஆகிய புண்ணியங்களை தன் வாழ்வாக்கியவர், திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி கர்தினால் Albino Luciani அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 36ம் ஆண்டு நினைவையொட்டி, அருள் பணியாளர்கள் திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Beniamino Stella அவர்கள் இச்செவ்வாயன்று திருப்பலி நிறைவேற்றுகையில், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த ஊரான Agordoவில் புனித திருமுழுக்கு யோவான் பங்குக் கோவிலில் இச்செவ்வாய் மாலை திருப்பலியாற்றிய கர்தினால் Stella அவர்கள், திருத்தந்தை லுசியானி அவர்கள், அருள் பணியாளர்களுக்குத் தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டாக என்றும் வாழ்வார் என்று கூறினார்.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களிடம் விளங்கிய எளிமை, பிறரன்பு, கீழ்ப்படிதல் ஆகிய புண்ணியங்களை மையமாகக் கொண்டு கர்தினால் Stella அவர்கள் தன் மறையுரையை வழங்கினார்.
1978ம் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் தேதி திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதலாம் ஜான்பால் அவர்கள், 'புன்முறுவல் பூக்கும் திருத்தந்தை' என்ற பெயருடன், 33 நாட்களே தலைமைப் பணியாற்றியபின், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் பெர்னாண்டோ பிலோனி, வாஷிங்க்டன் நகரில் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரைச் சந்திக்கவுள்ளார்

ஆக.27,2014. திருத்தந்தையின் சார்பாக அண்மையில், ஈராக் நாட்டிற்குப் பயணம் செய்து திரும்பிய நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள், விரைவில் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரைச் சந்திப்பார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இத்தாலியின் ரிமினியில் நடைபெற்றுவரும் ஒரு மாநாட்டில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரில் கர்தினால் பிலோனி அவர்களுக்கும், கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையருக்கும் இடையே நடைபெறும் இச்சந்திப்பில், கீழை வழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும் கலந்துகொள்வார் என்று பேராயர் தொமாசி கூறினார்.
ஈராக்கில் நடைபெற்றுவரும் பிரச்சனைகளில், அமெரிக்க அரசையும், இன்னும் உலகத் தலைவர்களையும் ஈடுபடுத்த, அமெரிக்க ஆயர்கள் தங்கள் குரலை எழுப்பவேண்டும் என்பதை வலியுறுத்த கர்தினால்கள் பிலோனி அவர்களும், சாந்த்ரி அவர்களும் விண்ணப்பங்கள் எழுப்புவர் என்று பேராயர் தொமாசி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit

3. உரோம் நகரில், பல மதங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டி

ஆக.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலின் பேரில், பல நாடுகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டி, செப்டம்பர் 1, இத்திங்களன்று உரோம் நகரில் நடைபெறவுள்ளது.
அர்ஜென்டீனா நாட்டில், மிக வறியக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கல்வி வசதிகள் செய்துதரும் Scholas Occurrentes என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில், உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்ட பல வீரர்கள் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Scholas Occurrentes என்ற அமைப்பினருடன் இத்தாலியின் PUPI என்ற அமைப்பினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்விளையாட்டுப் போட்டியில், இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர், யூதர், என்ற பல மதங்களைச் சார்ந்தவர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து விளையாடுகின்றனர்.
உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நடைபெறும் இப்போட்டியில் திரட்டப்படும் நிதி, Scholas Occurrentes என்ற அமைப்பினரின் பல்வேறு கல்விப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit

4. அனைத்து மதங்களும், உரையாடல் வழியில் சமயப் பணிகள் ஆற்றுவதே இன்றையத் தேவை - பிலிப்பின்ஸ் கர்தினால் Quevedo

ஆக.27,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகளை, கண்டனம் செய்துவரும் உலக அமைப்பினருடன் தானும் இணைந்து இதனை வன்மையாகக் கண்டிப்பதாக பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால் Orlando Quevedo அவர்கள் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களை தீவிரமாகக் கண்டனம் செய்துள்ள கர்தினால் Quevedo அவர்கள், பெரும்பான்மை மதத்தவர் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவது மதத்திற்கே இழுக்கான ஒரு செயல் என்று கூறினார்.
தங்கள் மதமே தலைசிறந்தது என்ற எண்ணத்தில் ஏனைய மதத்தினரை மதிக்காமல் செயல்பட்ட பழங்காலத் தவறுகளிலிருந்து விடுபட்டு, அனைத்து மதங்களுக்கும் மதிப்பளித்து, உரையாடல்கள் வழியில் சமயப் பணிகள் ஆற்றுவதே இன்றையத் தேவை என்பதை கர்தினால் Quevedo அவர்கள் வலியுறுத்தினார்.
ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து பிலிப்பின்ஸ் அரசு இதுவரை தன் கண்டனத்தை வெளியிடாமல் இருப்பதற்கு, கர்தினால் Quevedo அவர்கள் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews

5. இஸ்லாமிய மதம் வன்முறையை உள்ளடக்கிய மதம் என்று ஒரு சிலர் கூறிவருவது தவறு - ஜெர்மன் ஆயர் பேரவை

ஆக.27,2014. ஈராக்கில் நிகழ்ந்துவரும் பயங்கரவாதச் செயல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்றும், தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேற்றப் பட்டுள்ளவர்கள் விரைவில் தங்கள் சொந்த இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜெர்மன் ஆயர் பேரவை ஜெர்மன் அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ISIS தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் Kurdish பகுதியினருக்கு ஜெர்மன் அரசு ஆயுதங்கள் அளிப்பதா என்ற விவாதம் ஜெர்மன் பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வேளையில், ஜெர்மன் ஆயர்கள் இவ்விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்கள் வழியே அமைதியை உறுதி செய்யமுடியாது என்பதை வலியுறுத்தும் ஜெர்மன் ஆயர்களின் விண்ணப்பம், அதேவேளையில், அர்த்தமற்ற வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளை நிறுத்துவதும் உலக அரசுகளின் தார்மீகப் பொறுப்பு என்று கூறியுள்ளது.
ISIS என்ற தீவிரவாதக் குழுவும் இஸ்லாமிய மதமும் ஒன்றல்ல என்று கூறும் ஜெர்மன் ஆயர்கள், இஸ்லாமிய மதம் வன்முறையை உள்ளடக்கிய மதம் என்று ஒரு சிலர் கூறிவருவது தவறு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. காசா பகுதியில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையொட்டி கொண்டாட்டம்

ஆக.27,2014. இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே கடந்த 50 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுத மோதல்கள் இச்செவ்வாய் முதல் நிறுத்தப்பட்டதை, காசா பகுதியில் வாழும் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடினர்.
ஜூலை 8ம் தேதி துவங்கிய இந்த கடுமையான ஆயுத மோதல்களில் இதுவரை 2,143 பாலஸ்தீனயர்களும் 69 இஸ்ரேல் இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இச்செவ்வாய் மாலை 4 மணி முதல் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
எகிப்து அரசின் முயற்சியால் நடைபெற்றுள்ள இந்த போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டு, தொடர்ந்து அப்பகுதியின் நிரந்தர அமைதிக்கு இருதரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொள்வர் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறிய 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரும்பிவந்ததால், காசா பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது என்றும், அப்பகுதியில் உள்ள மசூதிகள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகள் வழியே இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN/AFP

7. பழங்குடியினர் மத்தியில் திருஅவை செய்துவரும் பணிகள் போற்றுதற்குரியன - இந்தியக் குடியரசுத் தலைவர்

ஆக.27,2014. மேற்கு வங்காளத்தில் வாழும் பழங்குடியினர் மத்தியில் கத்தோலிக்கத் திருஅவை செய்துவரும் பணிகள் போற்றுதற்குரியன என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள Palsanda எனுமிடத்தில் Daya Duar என்ற மருத்துவமனையின் அடிக்கல்லை அண்மையில் நாட்டிய குடியரசுத் தலைவர் முகர்ஜி அவர்கள், திருஅவையின் பணிகளால், பழங்குடி மக்களிடையே நிலவி வந்த குழந்தைப் பேறு கால துன்பங்கள் நீங்கியுள்ளன என்று குறிப்பிட்டார்.
பழங்குடி மக்களின் முழுமையான முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள கிறிஸ்தவப் பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது என்று குறிப்பிட்ட முகர்ஜி அவர்கள், 'இறைவனின் சேவை, மக்களின் சேவை' என்பதை கிறிஸ்தவர்கள் உலகறியச் செய்து வருகின்றனர் என்று கூறினார்.
பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை இழக்கும் ஆபத்து நாடெங்கும் நிலவிவருகிறது என்பதைக் குறிப்பிட்டுப் பேசிய முகர்ஜி அவர்கள், இந்த அநீதியைத் தட்டிக் கேட்பதிலும் கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறையை அனைவரும் பின்பற்றினால் நாடு இன்னும் செழிப்புறும் என்று கூறினார்.

ஆதாரம் : India TV/UCAN

8. மின்னணு சிகரெட்டுக்களால் நன்மைகள் உருவாகும் அதே நேரம், ஆபத்துக்களும் உள்ளன - WHO அறிக்கை

ஆக.27,2014. 'e-cigarette' என்றழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்களால் நன்மைகள் உருவாகும் அதே நேரம், ஆபத்துக்களும் உள்ளன என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
புகையிலையால் உருவாக்கப்படும் சிகரெட்டுக்கள் உருவாக்கும் ஆபத்துக்கள், மின்னணு சிகரெட்டுக்களால் குறைக்கப்பட்டுள்ளன எனினும், வளர் இளம் பருவத்தினருக்கும், கருவில் குழந்தைகளைத் தாங்கும் அன்னையருக்கும் இது ஆபத்தை விளைவிக்கிறது என்று WHO நிறுவனத்தின் உயர் அதிகாரி, Douglas Bettcher அவர்கள் கூறினார்.
மின்னணு சிகரெட்டுக்களில் வெளியாவது வெறும் நீர்ப்புகை என்று விளம்பரங்கள் கூறுவது தவறான செய்தி என்றும், இவ்வகைச் சிகரெட்டுக்களும், 'நிகோட்டின்' எனப்படும் ஆபத்தான பொருளை சிறிதளவாகிலும் உள்ளிழுக்கச் செய்கின்றன என்று WHO அறிக்கை கூறுகிறது.
மேலும், மின்னணு சிகரெட்டுக்கள் பல்வேறு பழச்சுவைகளையும், மதுபானச் சுவைகளையும் கொண்டு 8000 சுவைகளுடன் விளம்பரப்படுத்தப்படுவது வளர் இளம் பருவத்தினரை அதிகம் கவரும் ஆபத்து உள்ளதென்று இவ்வறிக்கை மேலும் எச்சரிக்கிறது.
2005ம் ஆண்டு, சீனாவில் ஒரு சிறு அளவில் உருவான மின்னணு சிகரெட்டுக்கள், தற்போது உலகெங்கும் 466 நிறுவனங்களால், 300 கோடி டாலர்கள் திரட்டும் வர்த்தகமாக மாறியுள்ளன என்றும், இவற்றில், புகையிலை நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருவது ஆபத்தானது என்றும் WHO நிறுவனம் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 13 முதல் 18ம் தேதி முடிய மாஸ்கோ நகரில் நடைபெறும் WHO பன்னாட்டுக் கருத்தரங்கில், மின்னணு சிகரெட்டுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...