செய்திகள் - 12.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் கொரிய நாட்டிற்கான திருப்பயணம் இப்புதனன்று துவங்குகிறது
2. வறியப் பகுதிகளுக்கு உதவும் அர்ஜென்டீனா திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு
3. ஈராக்கிலுள்ள எண்ணெய்க் கிணறுகளைக் காப்பதே அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம் - முதுபெரும் தந்தை சாக்கோ
4. இம்மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஈராக் கிறிஸ்தவர்களுக்கான செப நாள்
5. ஈராக் கிறிஸ்தவர்களுக்கென கத்தோலிக்க அமைப்புகளின் நிதியுதவி
6. இலங்கையில் காணாமல் போனவர் பற்றிய அரசு விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பே, ஆயர் ஜோசப்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் கொரிய நாட்டிற்கான திருப்பயணம் இப்புதனன்று துவங்குகிறது
ஆக.12,2014. தென்கொரியாவில் தான் மேற்கொள்ளும் 5 நாள் திருப்பயணத்தையொட்டி இப்புதனன்று மாலை உரோம் நகரிலிருந்து புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய நேரம் புதன் மாலை 4 மணிக்கு அதாவது இந்திய நேரம் மாலை 7.30 மணிக்கு புறப்படும் ஆலித்தாலியா விமானம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சுமந்துகொண்டு, மறுநாள் காலை தென் கொரிய நேரம் 10.30 மணிக்கு தலைநகர் Seoulஐ அடைவதிலிருந்து அந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் துவங்குகிறது.
ஆசிய இளையோர் மாநாட்டையொட்டி இங்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ், கொரியாவின் பல்வேறு மதப்பிரதிநிதிகளைச் சந்திப்பதோடு, ஆசிய ஆயர்களையும் சந்தித்து உரையாடுவார்.
கொரியாவின் 124 மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிப்பதும் இத்திருப்பயணத்தில் சனிக்கிழமையன்று இடம்பெறும். தன் திருப்பயணத்தின் இறுதி நாளான திங்களன்று, கொரியாவின் அமைதி மற்றும் ஒப்புரவிற்கென அந்நாட்டு ஆயர்கள் அனைவருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான வானொலி
2. வறியப் பகுதிகளுக்கு உதவும் அர்ஜென்டீனா திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு
ஆக.12,2014. அதிக உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு உதவி என்ற நோக்குடன் அர்ஜென்டீனா ஆயர்கள் நடத்திவரும் நிதி திரட்டலுக்கு தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வோர் ஆண்டும் அர்ஜென்டீனாவின் கத்தோலிக்கர்கள் ஒன்றுகூடி, அந்நாட்டின் ஏழ்மைப் பகுதிகளுக்கு உதவிகளை வழங்கும் இந்தப் பழக்கம் குறித்து திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவிக்கும் இச்செய்தி, தாராள மனதுடன் சுயநலமின்றி செயல்படும் மக்களைப் பாராட்டியுள்ளது.
தங்கள் விசுவாச சாட்சியம் மூலமும், சகோதரத்துவ அன்பு, ஒருமைப்பாடு, பகிர்வு ஆகியவை மூலமும் ஏழைகளில் இயேசுவைக் கண்டு, இவ்வுலகின் உப்பாகவும் ஒளியாகவும் செயல்பட கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என அர்ஜென்டீனா திருஅவைக்கான திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
இச்செய்தியை திருத்தந்தையின் பெயரால் அர்ஜென்டீனா நாட்டிற்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின்.
ஆதாரம் : வத்திக்கான வானொலி
3. ஈராக்கிலுள்ள எண்ணெய்க் கிணறுகளைக் காப்பதே அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம் - முதுபெரும் தந்தை சாக்கோ
ஆக.12,2014. ஈராக்கிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தலைமை இடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம், குர்திஸ்தான் தலைநகரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே எனத் தெரிவதாக, தன் கவலையை வெளியிட்டுள்ளார், பாக்தாத் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
Mosul மற்றும் Qaragosh நகர்களிலிருந்து கிறிஸ்தவர்கள் முற்றிலுமாக விரட்டியடிக்கப்படுவது குறித்து கவலையின்றி, குர்திஸ்தான் தலைநகர் Erbilஐக் காப்பாற்ற முயல்வது, அங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் மீது அமெரிக்க ஐக்கிய நாடு கொண்டுள்ள அக்கறையாலேயே என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் குறை கூறியுள்ளார்.
ISIS எனும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவால் நடத்தப்படும் வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் தடுப்பதாக அல்லாமல், பதட்டநிலைகளைக் குறைக்கும் முயற்சியாகவே அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களின் நோக்கம் தெரிகின்றது என்று கூறினார், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள்.
எண்ணெய் கிணறுகளைக் காப்பதில் காட்டும் ஆர்வத்தை, நாட்டின் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியரிடையே உருவாகியுள்ள இன வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை ஒருங்கிணைப்பதில் அமெரிக்க அரசு காட்டவேண்டும் என்ற விண்ணப்பத்தை, முதுபெரும் தந்தை சாக்கோவுடன் இணைந்து, இஸ்லாமிய உயர் தலைவர் ஒருவரும் விடுத்துள்ளார்.
ஈராக்கின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதி, அமெரிக்க ஐக்கிய நாடு தற்போது காப்பாற்ற முயலும் Erbil நகரில் கிட்டுகிறது என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆதாரம் : AsiaNews
4. இம்மாதம் 17ம் தேதி அமெரிக்காவில் ஈராக் கிறிஸ்தவர்களுக்கான செப நாள்
ஆக.12,2014. உலகம் முழுவதும் மதக்காரணங்களுக்காக சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக ஈராக் கிறிஸ்தவர்களுக்காக ஒன்றிணைந்து செபிக்கும் நாளை அறிவித்துள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை எழுதிய செபத்தின் துணையுடன் அமெரிக்க ஐக்கிய நாடு முழுவதும் ஒன்றிணைந்து இம்மாதம் 17ம் தேதி ஞாயிறை, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு செபிக்கும் நாளாக சிறப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அமெரிக்க ஆயர்களின் அனைத்துலக நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ஆயர் Richard Pates, ஒவ்வொரு அமெரிக்க கத்தோலிக்கரும் தங்கள் பகுதி செனட் அவை அங்கத்தினர்களிடம் உலகின் பல பகுதிகளில் மதக்காரணங்களுக்காக மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
உலகம் முழுவதும் துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்நாளில், உண்ணா நோன்பை மேற்கொள்வதுடன், துன்புறும் கிறிஸ்தவர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் அமெரிக்க ஆயர்கள் கத்தோலிக்கர்களை விண்ணப்பித்துள்ளனர்.
ஆதாரம் : EWTN
5. ஈராக் கிறிஸ்தவர்களுக்கென கத்தோலிக்க அமைப்புகளின் நிதியுதவி
ஆக.12,2014. ஈராக்கில் தங்கள் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கில் 25,000 பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD.
சிரியாவிலிருந்து வெளியேறி வட ஈராக்கில் அடைக்கலம் தேடியுள்ள அகதிகளிடையேயும், லெபனனில் அடைக்கலம் தேடும் ஈராக் கிறிஸ்தவர்களிடையேயும் கடந்த சில மாதங்களாக பணியாற்றிவரும் CAFOD அமைப்பு, தற்போது ஈராக்கிற்குள் பணியாற்றும் கிறிஸ்தவ உதவி நிறுவனங்களுக்கு நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் கத்தோலிக்க அமைப்பு ஒன்று ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
Aid to the Church in Need என்ற இந்த அமைப்பு ஏற்கனவே ஜூன் மாதத்திலும் பெரிய அளவிலான நிதியுதவியை வழங்கியுள்ளது.
ஆதாரம் : ICN
6. இலங்கையில் காணாமல் போனவர் பற்றிய அரசு விசாரணைக் குழுவின் செயல்பாடுகள் வெறும் கண்துடைப்பே, ஆயர் ஜோசப்
ஆக.12,2014. உள்நாட்டு போர்க்காலத்தின்போது காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் இலங்கை அரசுத்தலைவரின் விசாரணை அவை வெறும் கண்துடைப்பே என உரைத்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
காணாமல்போனவர்கள் குறித்த விசாரணைகளில் தங்கள்முன் தோன்றி சாட்சியம் வழங்கவேண்டும் என விசாரணைக்குழு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள ஆயர் ஜோசப், இத்தகைய குழுக்களின் கடந்தகால விசாரணைகள் வெறும் கண்துடைப்பாகவே மாறியுள்ள நிலையில், தற்போதைய குழுவின்முன் சாட்சியம் வழங்குவதில் பலன் இருக்கும் என, தான் நம்பவில்லை என அரசுத்தலைவர் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதில் அரசுக்கு எவ்வித ஆர்வமும் இருப்பதாகத் தெரியவில்லை என தன் செய்தியில் கூறியுள்ள மன்னார் ஆயர், இக்குழுவின் முயற்சிகள், இங்கு சாட்சி கூற வருபவர்களுக்கு உதவுவதாக அல்லாமல், அவர்களின் பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு செய்வதாகவே உள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மை மற்றும் நீதி மீதான தீவிர அர்ப்பணமின்றி ஒப்புரவை ஒருநாளும் பெறமுடியாது என்பது மட்டுமல்ல, அமைதியும் வெறும் கானல் நீராகவே இருக்கும் எனவும், காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்குழுவுக்கான தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்
ஆதாரம் : MISNA
No comments:
Post a Comment