செய்திகள் - 23.08.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் வாழ்வு, தாராளப் பிறரன்புச் செயல்களால் நிரம்பியுள்ளது
2. மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் பணியேற்பு
3. ஈராக் புலம்பெயர்ந்த மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பத்து இலட்சம் டாலர் உதவி
4. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உடைக்க முடியாதது
5. எபோலா நோய் பரவுவதைத் தடுப்பதற்கு மேற்கத்திய நாடுகளின் உடனடி உதவிகள் தேவை, லைபீரியப் பேராயர்
6. மேற்கு ஆப்ரிக்காவில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் துன்புறுவதற்கு சமுதாயம் அனுமதிக்கக் கூடாது, ஐ.நா.
7. சிரியாவில் 1,91,000த்துக்கு அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர், ஐ.நா.
8. 'மங்கள்யான்' விண்கலம் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும்: இஸ்ரோ தகவல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் வாழ்வு, தாராளப் பிறரன்புச் செயல்களால் நிரம்பியுள்ளது
ஆக.23,2014. “கொடுப்பது எப்படி என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர், அவர்களின் வாழ்வு, அடுத்தவருக்குத் தாராளமாகச் செய்வதால் நிரம்பியுள்ளது, இது பல நேரங்களில் மறைவாக உள்ளது” என்று, தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் 35வது ரிமினிக் கூட்டத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒதுக்குப்புறங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதற்கு அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் வாழ்வில் இயேசு மையமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ரிமினியில் நடக்கும் மக்கள் மத்தியில் நட்புக்கான 35வது கூட்டத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
உலகின் ஒதுக்குப்புறங்களுக்குச் செல்லுங்கள் என்ற, இக்கூட்டத்தின் மையப்பொருளை வைத்து அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், புவியியல் அளவுப்படி மட்டுமல்லாமல், மக்கள்
வாழுகின்ற ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதற்குத்
திருஅவை அழைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வுப் பொருள்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டநிலை, தனிமனிதக்
கோட்பாட்டால் தனிமையை உணரும் நிலை போன்றவற்றுக்கு மத்தியில் இறைவனுக்கான
தாகம் இருப்பதையும் இன்றைய சமுதாயத்தில் காண முடிகின்றது, இச்சூழலில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாச வாழ்வால் சான்று பகருமாறும் அச்செய்தி கேட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் பணியேற்பு
ஆக.23,2014. மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயராக, ஆகஸ்ட் 24, இஞ்ஞாயிறன்று மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் பணியேற்கிறார்.
மதுரை ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இஞ்ஞாயிறு மாலை 5.30 மணிக்கு இந்தப் பணியேற்புத் திருப்பலியும், அதன்பின்னர் வாழ்த்துக் கூட்டமும் நடைபெறும்.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயர் பணியேற்புத் திருநிகழ்வை, இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பினோக்கியோ அவர்கள், முன்னின்று நடத்துகிறார்.
இந்நிகழ்வில் தமிழக ஆயர்கள், ஏறக்குறைய 500 அருள்பணியாளர்கள், ஆயிரக்கணக்கான அருள் சகோதரிகள், பொதுநிலையினர் கலந்து கொள்வார்கள்.
மதுரை
உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயர் மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி
அவர்கள் ஆகஸ்ட் 25 திங்கள் காலை 6.30 மணியளவில் மதுரை புனித மரியன்னை
பேராலயத்தில் நன்றித் திருப்பலி நிகழ்த்துவார். பின்னர் காலை 9 மணிக்கு
பேராயர் இல்லத்தில் உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களைச் சந்திப்பார் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திண்டுக்கல் ஆயராகப் பணியாற்றிய மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை, மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, கடந்த ஜூலை 26ம் தேதியன்று அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. ஈராக் புலம்பெயர்ந்த மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பத்து இலட்சம் டாலர் உதவி
ஆக.23,2014.
ஈராக்கில் கட்டாயத்தின்பேரில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள
கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை மத மக்களுக்கு உதவுவதற்கென திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் பத்து இலட்சம் டாலர் வழங்கியுள்ளார் என்று கூறினார், கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி.
திருத்தந்தையின் பிரதிநிதியாக, இம்மாதம் 12 முதல் 20 வரை ஈராக்கின் எர்பில் நகருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி அவர்கள், திருத்தந்தையின் இந்நிதியுதவியைத் தான் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
இந்நிதியுதவியில் 75 விழுக்காடு கத்தோலிக்கருக்கும், 25 விழுக்காடு யாசிதி இன மக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் வன்முறைகளால் வெளியேறிய எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குர்திஸ்தான் தலைநகரான எர்பில் நகரில் வாழ்ந்து வருகின்றனர். இந்நகர், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு ஐம்பது மைல் தூரத்தில் உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் கொலை மிரட்டல்களால், கிறிஸ்தவர்கள் யாசிதி இனத்தவர், ஷியா இஸ்லாம் பிரிவினர் என 12 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர்.
ஆதாரம் : CNA
4. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உடைக்க முடியாதது
ஆக.23,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறி, கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றபோதிலும், அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தளர்ச்சியடையவில்லை என்று, குர்திஸ்தான் சென்று திரும்பியுள்ள கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம் ஒன்று கூறியது.
குர்திஸ்தானில் அகதிகளாக வாழும் கிறிஸ்தவர்களைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள Aid to the Church in Need கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனத்தின் Maria Lozano, இவ்வாறு கூறினார்.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈராக் கிறிஸ்தவர்கள், தங்களை கிறிஸ்தவர்கள் என அடையாளம் காட்டும் சிலுவைகள், செபமாலைகள் அல்லது புனிதர்களின் மெடல்களைத் தங்கள் கழுத்துக்களில் அணிந்துள்ளனர் எனக் கூறினார் Lozano.
கடும் இன்னல்களுக்கு மத்தியிலும், ஈராக் கிறிஸ்தவர்களின் விசுவாசம் உடைக்க முடியாதது என்றும் Lozano கூறினார்.
ஆதாரம் : CNA
5. எபோலா நோய் பரவுவதைத் தடுப்பதற்கு மேற்கத்திய நாடுகளின் உடனடி உதவிகள் தேவை, லைபீரியப் பேராயர்
ஆக.23,2014. மேற்கு ஆப்ரிக்காவில் பரவியுள்ள எபோலா ஆள்கொல்லி நோய், இதயத்தை நொறுக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று, லைபீரிய தலத்திருஅவை தலைவர் ஒருவர் கூறினார்.
எபோலா நோயின் தாக்கம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு இச்சனிக்கிழமையன்று பேட்டியளித்த லைபீரியத் தலைநகர் மொன்ரோவியப் பேராயர் Lewis Zeigler அவர்கள், இந்நோய் பரவுவதைத் தடுப்பதற்கு லைபீரியாவால் மட்டும் இயலாது, இதற்கு மேற்கத்திய நாடுகளின் உடனடி உதவிகள் தேவை என்று கூறினார்.
மேலும், எபோலா நோய், மேற்கு ஆப்ரிக்காவில், குறிப்பாக, லைபீரியாவில் அதன் நலவாழ்வு அமைப்புகளை வீழ்த்தியிருப்பதோடு, மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் உண்டுபண்ணியுள்ளது என எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு கூறியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மேற்கு ஆப்ரிக்காவில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் துன்புறுவதற்கு சமுதாயம் அனுமதிக்கக் கூடாது, ஐ.நா.
ஆக.23,2014. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோயால் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் துன்புறுவதற்கு மனித சமுதாயம் அனுமதிக்கக் கூடாது என்று, இந்நோய் பராமரிப்புக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் கூறினார்.
எபோலா உயிர்க்கொல்லி நோய் பரவியுள்ள நாடுகளுக்கானப் பயணத்தைத் தொடங்கியுள்ள மருத்துவர் David Nabarro அவர்கள், லைபீரியாவில் இவ்வெள்ளியன்று இவ்வாறு கூறினார்.
லைபீரியாவில் இரு மருத்துவர்களும், ஒரு தாதியும் ZMapp என்ற எபோலா நோய்க்கான சிகிச்சையைப் பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு மருத்துவரின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற செப்டம்பர் 4,5
தேதிகளில் ஜெனீவாவில் இந்நோய் குறித்த ஆய்வுக் கருத்தரங்கு ஒன்றையும் உலக
நலவாழ்வு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் 20 வல்லுனர்கள் உட்பட
நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
கினி, லைபீரியா, நைஜீரியா, சியெரா லியோன் ஆகிய மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோயால் 2,473 பேர் இறந்துள்ளனர்.
ஆதாரம் : UN
7. சிரியாவில் 1,91,000த்துக்கு அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர், ஐ.நா.
ஆக.23,2014. சிரியாவில் கொலை செய்யப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னர் கணக்கிடப்பட்டதைவிட தற்போது இருமடங்கு அதிகம் எனவும், துண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் கொலையாளிகள், அழிப்பவர்கள்
மற்றும் சித்ரவதைகள் செய்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக
சமுதாயம் தவறியுள்ளது எனவும் குறை கூறியுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள்
நிறுவனத் தலைவர் நவிபிள்ளை.
ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2011, மார்ச் மாதத்துக்கும் 2014, ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிரியாவில், 1,91,369 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
கொலை செய்யப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோர் ஆண்கள். பெண்கள் 9.3 விழுக்காட்டினர்.
மேலும், உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களைத் தடுப்பதில் ஐ.நா. பாதுகாப்பு அவை உரியமுறையில் செயல்படவில்லை என்றும், பதவி விலகிச்செல்லும் நவி பிள்ளை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு அவை மேலதிகமான பொறுப்புடனும், உடனுக்குடனும் செயல்பட்டிருந்தால், இலட்சக்கணக்கான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார் நவி பிள்ளை.
பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வெள்ளியன்று பேசும்போது நவி பிள்ளை இவ்வாறு கூறினார்.
ஆதாரம் : UN
8. 'மங்கள்யான்' விண்கலம் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும்: இஸ்ரோ தகவல்
ஆக.23,2014. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என இஸ்ரோ மையம் இச்சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கெனத் தயாரிக்கப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 33 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, "மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் (MOM) செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. பூமியில் இருந்து 189 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இன்னும் 33 நாட்களே உள்ளன" எனத் தெரிகிறது.
கடந்த ஜூன் 11ல்
மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையைச் சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக
செய்து முடித்தது. இதேபோல் ஆகஸ்டிலும் ஒரு நிகழ்விற்கு இஸ்ரோ
திட்டமிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய
துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய்
கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம்
பிடிக்கும்.
ஆதாரம் : தி இந்து
No comments:
Post a Comment