செய்திகள் - 10.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஐவரி கோஸ்ட் கர்தினால் Agré மறைவு, திருத்தந்தை இரங்கல் தந்தி
2. பாலியல் வன்முறைக்குப் பலியாகும் அனைவருக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
3. போர்களின்போது பாலியல் வன்முறைகளைத் தவிர்த்து நடக்குமாறு நாடுகளுக்கு அழைப்பு
4. ஹாங்காங்கில் மக்களாட்சி மலர 84 மணி நேர நடைப் பயணம், கர்தினால் சென்
5. பாகிஸ்தானில் பதட்டமும் வன்முறையும் முடிவுக்கு வர கிறிஸ்தவர்கள் செபம்
6. மியான்மார் சமயத் தலைவர்கள் அமைதிக்காகச் செபம்
7. உலகப் பெருங்கடல்கள் குறித்த ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு நாடுகளுக்கு வேண்டுகோள், ஐ.நா.
8. தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
9. உலகப் பாரம்பரியச் சின்னமாகிறது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஐவரி கோஸ்ட் கர்தினால் Agré மறைவு, திருத்தந்தை இரங்கல் தந்தி
ஜூன்,10,2014. ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டுக் கர்தினால் Bernard Agré அவர்கள் இறந்ததை முன்னிட்டு தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Abidjan உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயராகிய கர்தினால் Agré அவர்கள், தலத்திருஅவைக்கும், அகிலத் திருஅவைக்கும் ஆற்றிய சேவைகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் Agré அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறத் தான் செபிப்பதாகக் குறிப்பிட்டு, அவரின் பிரிவால் வருந்தும் அந்நாட்டினருக்குத் தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
ஐவரி கோஸ்ட் நாட்டில் 1926ம் ஆண்டு பிறந்த கர்தினால் Agré அவர்கள், 1953ம் ஆண்டில் குருவானார். 1994ம் ஆண்டில் Abidjan உயர் மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட கர்தினால் Agré அவர்கள், 2001ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
2000மாம் ஆண்டின் ஜூபிலி குழுவிலும் ஒருவராகப் பணியாற்றிய இவர், மேற்கு ஆப்ரிக்க ப்ஞ்ச் பேசும் நாடுகளின் ஆயர் பேரவையின் தலைவராக 1985ம் ஆம்டு முதல் 1991ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார்.
88 வயதாகும் கர்தினால் Bernard Agré அவர்களின் மறைவுக்குப் பின்னர், திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 213 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 118 ஆகவும் உள்ளன.
கர்தினால் Bernard Agré அவர்கள், ஜூன்09, இத்திங்களன்று பாரிசில் இறைபதம் அடைந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. பாலியல் வன்முறைக்குப் பலியாகும் அனைவருக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
ஜூன்,10,2014.
போர்க் காலங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைக்குப் பலியாகும்
அனைவருக்காகவும் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களின்போது பாலியல் வன்முறைக்குப் பலியாகுவோர் மற்றும் இக்குற்றத்தை ஒழிப்பதற்கு உழைப்போருக்காகச் செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார்.
இக்குற்றத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு இதுவே நேரம் என்றும் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போர்களின்போது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் ஜூன் 10, இச்செவ்வாயன்று இலண்டனில் தொடங்கியுள்ள உலகளாவிய மாநாட்டை கருத்தில்கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. போர்களின்போது பாலியல் வன்முறைகளைத் தவிர்த்து நடக்குமாறு நாடுகளுக்கு அழைப்பு
ஜூன்,10,2014. போர்களின்போது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் இச்செவ்வாயன்று இலண்டனில் தொடங்கியுள்ள உலகளாவிய மாநாட்டை, பிரிட்டன் வெளியுறவு செயலர் William Hague, ஐ.நா. சிறப்புத் தூதர் Angelina Jolie ஆகிய இருவரும் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த நான்கு நாள் மாநாட்டில் ஏறக்குறைய 140 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய Hague அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் போஸ்னியச் சண்டையில் ஐம்பதாயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர், இவர்களில் ஒருவருக்குக்கூட நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
அதேசமயம், போர்களின்போது பாலியல் வன்முறைகளைத் தவிர்த்து நடக்குமாறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் Hague.
வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும் இந்த மாநாடு, போர்களில் பாலியல் வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக நடக்கும் மிகப்பெரிய மாநாடாக உள்ளது எனச் சொல்லப்பட்டுள்ளது.
மோதல்களில் பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. தீர்மானத்தை அங்கீகரித்துள்ள எல்லா அரசுகளும், சட்டத்துறை, நீதித்துறை மற்றும் இராணுவ நிபுணர்களும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அரசு-சாரா நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்கின்றனர்.
ஆதாரம் : BBC
4. ஹாங்காங்கில் மக்களாட்சி மலர 84 மணி நேர நடைப் பயணம், கர்தினால் சென்
ஜூன்,10,2014.
ஹாங்காங்கில் முழு மக்களாட்சிக்கு அழைப்புவிடுக்கும் அதிகாரப்பூர்வமற்ற
கருத்து வாக்கெடுப்பில் பங்குகொள்வதற்கு குடிமக்களை ஊக்குவிக்கும்
நோக்கத்தில் அப்பகுதியில் 84 மணி நேரம் நடைப்பயணம் ஒன்றை மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளார் ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென்.
ஒரு நாளைக்கு 20 கிலோ மீட்டர் வீதம் தினமும் ஏறக்குறைய 12 மணி நேரம் நடக்கத் திட்டமிட்டுள்ளார் 82 வயதாகும் கர்தினால் சென்.
இம்மாதம் 20 முதல் 22ம் தேதி வரை நடக்கவிருக்கும் பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பின் மூலம், ஹாங்காங்கில் உண்மையான மக்களாட்சியையும், 2017ம்
ஆண்டில் முற்றிலும் சனநாயகமுறையில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதையும்
மக்கள் விரும்புகின்றனர் என்பதை சீனாவுக்கு உணர்த்தவிருப்பதாக ஊடகச் செய்தி
ஒன்று கூறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஹாங்காங் நாடாளுமன்றத்துக்குப் பாதிப்பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஹாங்காங் ஆளுனர், சீன அரசால் உருவாக்கப்பட்ட குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
ஆதாரம் : AsiaNews
5. பாகிஸ்தானில் பதட்டமும் வன்முறையும் முடிவுக்கு வர கிறிஸ்தவர்கள் செபம்
ஜூன்,10,2014. பாகிஸ்தானின் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பதட்டமும் வன்முறையும் நிறைந்த சூழல் உருவாகியுள்ளவேளை, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்காகச் செபித்து வருகின்றனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
கடந்த
ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சி விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய
பயங்கரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 24 பேர் இறந்தனர்
மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளின் இத்தாக்குதலை முறியடித்து விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இந்நேரத்தில், இச்செவ்வாயன்று கராச்சி விமான நிலையத்துக்கு அருகில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதிகமான விமானச் சேவைகள் இடம்பெறும் கராச்சி விமான நிலையத்தின்மீது இச்செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, தாங்களே பொறுப்பு என்று தாலிபான்கள் கூறியுள்ளனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அற்புதங்கள் செய்யும் புனித பதுவை அந்தோணியாரின் விழாவுக்கென நவநாள் பக்திமுயற்சிகளை மேற்கொண்டுவரும் கராச்சி கத்தோலிக்கர், இப்புனிதரிடம் பாகிஸ்தானின் அமைதிக்காகச் செபித்து வருகின்றனர் என்று, கராச்சி உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழு பொறுப்பாளர் அருள்பணி மாரியோ ரொட்ரிக்கெஸ் தெரிவித்தார்.
ஆதாரம் : Fides
6. மியான்மார் சமயத் தலைவர்கள் அமைதிக்காகச் செபம்
ஜூன்,10,2014. மியான்மாரில் கச்சின் மாநிலத்துக்கு எதிராக போர் தொடங்கியதன் மூன்றாமாண்டு நினைவுகூரப்படும் இவ்வேளையில், அம்மாநிலத்தில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுமாறு கேட்டுள்ளன, அந்நாட்டின் பல்வேறு சமய மற்றும் சமூகக் குழுக்கள்.
கத்தோலிக்க, பிரிந்த கிறிஸ்தவ சபையினர் உள்ளிட்ட 55 பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மியான்மார் அரசுக்கு முன்வைத்துள்ள விண்ணப்பத்தில், அரசும் இராணுவமும் தாக்குதல்களை நிறுத்தி உரையாடலைத் தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
கச்சின்
வட மாநிலத்தில் ஏறக்குறைய 17 ஆண்டுகள் அமைதி நிலவிய பின்னர் 2011ம்
ஆண்டில் மீண்டும் மோதல்கள் தொடங்கின. இதில் எண்ணற்ற அப்பாவி மக்கள்
இறந்துள்ளனர். குறைந்தது 200 கிராமங்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஒரு
இலட்சத்து இருபதாயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.
மியான்மாரில் 135க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன.
ஆதாரம் : AsiaNews
7. உலகப் பெருங்கடல்கள் குறித்த ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு நாடுகளுக்கு வேண்டுகோள், ஐ.நா.
ஜூன்,10,2014. வெப்பநிலை மாற்றம் உலகுக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருந்துவரும் இவ்வேளையில், உலகப்
பெருங்கடல்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் நாடுகள் அக்கறை
காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
“உலகப் பெருங்கடல்கள் அரசியல் அமைப்பு”
என்று அறியப்படும் இவ்வொப்பந்தம் அமலுக்கு வந்ததன் இருபதாம் ஆண்டு மற்றும்
ஜூன் 8ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகப் பெருங்கடல்கள் தினத்தை
முன்னிட்டு இவ்வாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பான் கி
மூன்.
உலக மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினரின் வாழ்வாதாரங்கள் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளன என்றும், அடுத்த
இருபது ஆண்டுகளில் மீன்வள புரோட்டின் சத்து இருமடங்கு அதிகமாக கிடைக்கும்
என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
உலகப் பெருங்கடல்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், 1994ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அமலுக்கு வந்தது.
ஆதாரம் : UN
8. தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜூன்,10,2014. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் 27,400 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும், 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரகப் பகுதி மற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளில், 31 ஆயிரம் களப்பணியாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவரும் ஆரம்பக் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக, தமிழக கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும், பள்ளிக்குச் செல்லாதக் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த கணக்கெடுப்பில், விழுப்புரத்தில், அதிகபட்சமாக, 2,794, காஞ்சிபுரத்தில், 2,225 மற்றும் நீலகிரியில் குறைந்தபட்சமாக, 153 பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என, கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆதாரம் : தினமலர்
9. உலகப் பாரம்பரியச் சின்னமாகிறது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா
ஜூன்,10,2014.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மேற்கு இமயமலையில் உள்ள
கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா அறிவிக்கப்படும் என்று சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில் இம்மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களைத் தேர்வு செய்யும் கூட்டம் நடக்கவுள்ளது.
யுனெஸ்கோவின் இயற்கை சார்ந்த தேசியப் பாரம்பரிய சின்னங்களுக்கான விதிமுறைப் பட்டியல் 10ன்படி “நீடித்த இயற்கை மற்றும் உயிரியில் பல்வகை (Bio - diversity) அடர்த்தி மிகுந்த பகுதிகள் அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்”என்கிற அடிப்படையில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்படவிருக்கிறது.
மேலும், இக்கூட்டத்தில், போட்ஸ்வானா நாட்டின் 'ஒகேவாங்கோ டெல்டா, பிலிப்பைன்ஸின் மெட் ஹமிகியூட்டன் வன விலங்குகள் சரணாலயம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தின் வேடன் கடல் (wadden sea) உட்பட ஏறக்குறைய 10 வகை இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட இருக்கின்றன.
இவை தவிர குஜராத் பாட்டன் டவுனில் இருக்கும் ராணி கிவ் வாவ் பகுதி (Rani-ki-vav- he Queen's Stepwell) கலாச்சாரம் சார்ந்த உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, சுந்தரவனக் காடுகள், அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா, மானாஸ் வன விலங்குகள் சரணாலயம், உத்தர
கண்ட்டின் நந்தாதேவி மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகியவை
யுனெஸ்கோவின் இயற்கை பாரம்பரியச் சின்னங் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment