செய்திகள் - 17.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய நீதிபதிகளிடம் : நுண்மதி உள்ளவர்களாய் பாரபட்சமின்றி செயல்படுங்கள்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் கடவுளுக்கு எரிச்சலூட்டுகிறது
3. திருத்தந்தை பிரான்சிஸ் : வயதானவர்களை ஒதுக்கி வைப்பது அநீதியானது மற்றும் சரிசெய்ய இயலாத இழப்பாகும்
4. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை தாய், அது அரசு-சாரா அமைப்பு அல்ல
5. ப்ரெஞ்ச், போலந்து இறையியல் வல்லுனர்களுக்கு இராட்சிங்கர் விருதுகள்
6. கடத்தப்பட்ட அருள்பணி பிரேம் குமார் நலமுடன் திரும்புவார்: ஆப்கான் இந்திய தூதர் நம்பிக்கை
7. இலங்கையில் இடம்பெற்றுவரும் வகுப்புவாத வன்முறைகள் நிறுத்தப்படுமாறு நவி பிள்ளை வலியுறுத்தல்
8. ஆட்சியராகப் போகும் சென்னை பார்வையற்ற மாணவி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய நீதிபதிகளிடம் : நுண்மதி உள்ளவர்களாய் பாரபட்சமின்றி செயல்படுங்கள்
ஜூன்,17,2014. ஒரு நீதிபதியின் சிறப்புப் பண்பாக விளங்க வேண்டிய நுண்மதி என்ற பண்பு, அவரின் நீதித் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைய வேண்டுமெனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
CSM என்ற இத்தாலிய நீதிபதிகள் அமைப்பின் உயர்மட்ட அவையின் ஏறக்குறைய 280 பிரதிநிதிகளை இச்செவ்வாய் காலை வத்திக்கானில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நீதித் தீர்ப்பில் தெளிவு இருக்க வேண்டும், அது சொந்தக் கருத்துக்களிலிருந்து விலகியதாகவும், அதேநேரம் மனிதப் பக்குவத்தை வெளிப்படுத்துவதாகவும், உண்மையான நிலைகளோடு ஒத்துப்போவதாகவும் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நீதிபதியாய் இருப்பவருக்கு அறிவுத்திறன், உளவியல் மற்றும் நன்னெறிப் பண்புகள் அவசியம் என்றுரைத்த திருத்தந்தை, நுண்மதி உள்ளவர்களாய், பாரபட்சமின்றி செயல்பட்டு, நன்னெறி வாழ்வுக்கு எடுத்துக்காட்டாயத் திகழுங்கள் என்றும் இத்தாலிய நீதிபதிகளைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியில், CSM நீதிபதிகள் அமைப்பைச் சந்திப்பதற்கான தேதியை தள்ளிப் போட்டதற்கு வருத்தமும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழைகளுக்கு வழங்கப்படும் ஊதியம் கடவுளுக்கு எரிச்சலூட்டுகிறது
ஜூன்,17,2014. ஊழல்வாதிகள் கடவுளை எரிச்சலடையச் செய்கின்றனர் மற்றும் கடவுளின் மக்களைப் புண்படுத்துகின்றனர் என, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரயேல் அரசன் ஆகாபு, நாபோத்தின்
திராட்சைத் தோட்டத்தைக் கவர்ந்து அவரைக் கொலை செய்ததால் எலியா இறைமனிதர்
வழியாக கடவுள் அரசன் ஆகாபுக்கு விடுத்த தண்டனைய பற்றிச் சொல்லும் இந்நாளைய
திருப்பலி முதல் வாசகத்தை மையமாக வைத்து வழங்கிய மறையுரையில் திருத்தந்தை, அரசியலிலும், வணிகத்திலும் திருஅவையிலும் இடம்பெறும் ஊழல்களைக் கண்டித்துப் பேசினார்.
தினத்தாள்களில் நாம் வாசிக்கும் இலஞ்ச ஊழல்கள், இன்னும், சில அருள்பணியாளர்கள் செய்யும் பல காரியங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, ஊழல்வாதிகள் தங்களது செயல்களிலிருந்து வெளிவருவதற்கு, கடவுளிடம் மன்னிப்பைப் பெறக் கெஞ்சுவதே ஒரே வழி, இல்லாவிடில் அவர்கள் கடவுளின் சாபத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.
ஒருவர் ஊழல் பாதையில் நுழையும்போது தனது மனிதத்தை இழந்து, தன்னையே விற்கிறார் என்றும், வாங்கி விற்பனை செய்யும் சந்தைப் பொருள் என ஊழலுக்கு அர்த்தம் சொல்லலாம் என்றும், ஊழல்வாதிகள் கடவுளை எரிச்சல்படுத்தி, சமுதாயத்துக்குத் துர்மாதிரிகையாக உள்ளனர், ஏனெனில் இவர்கள் நலிந்தவர்களை அடிமைப்படுத்தி சுரண்டி, ஏன் கொலையும் செய்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
இத்திங்கள் மறையுரையில் கூறியதுபோல, ஊழல் அரசியல்வாதிகள், ஊழல் தொழிலதிபர்கள், ஊழல் திருஅவை நபர்கள் ஆகிய மூவருமே அப்பாவிகளையும் ஏழைகளையும் புண்படுத்துகின்றனர், தங்கள் ஊழல்களில் ஒரு பகுதியை ஏழைகள் செலுத்துமாறு செய்கின்றனர், இவர்கள்மீது பேரிடரை வரச் செய்வேன் என ஆண்டவர் தெளிவாகச் சொல்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஊழலைவிட்டு வெளியே வருவதற்கு கடும் தபம் செய்ய வேண்டும், இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இச்செவ்வாய் காலைத் திருப்பலியில் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : வயதானவர்களை ஒதுக்கி வைப்பது அநீதியானது மற்றும் சரிசெய்ய இயலாத இழப்பாகும்
ஜூன்,17,2014. சில நேரங்களில் நாம் வயதானவர்களை ஒதுக்கி வைக்கிறோம், ஆனால் அவர்கள் விலைமதிப்பில்லாத சொத்து; அவர்களை ஒதுக்கி வைப்பது அநீதியானது மற்றும் சரிசெய்ய இயலாத இழப்பாகும் என, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தான் திருத்தந்தையாகப் பணியேற்றதிலிருந்து இளையோர்
மற்றும் வயதானவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டி அவர்களின் நலனில் அதிகக்
கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வயதானவர்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலக நாள் ஜூன்,15 இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கைகளில், இன்று உலகில் 4 முதல் 6 விழுக்காட்டு வயதானவர்கள் வீடுகளில் பல வழிகளில் அவமதிக்கப்படுகின்றனர் எனச் சொல்லப்பட்டுள்ளது.
பல நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்த மூத்த குடிமக்கள் அனுபவிக்கும் உரிமை மீறல்கள் அதிகரிக்கும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வயதானவர்களின் உரிமைகள் குறித்த புதிய ஐ.நா. உடன்பாடு ஒன்று கொண்டுவரப்படுமாறு, HelpAge International அமைப்பு வலியுறுத்தி வருவதாக, அத ன் டான்சானியக் கிளை இயக்குனர் Amleset Tewodros வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை தாய், அது அரசு-சாரா அமைப்பு அல்ல
ஜூன்,17,2014. திருஅவை தாயாக நோக்கப்பட வேண்டும், ஆனால் அது நிறைய மேய்ப்புப்பணித் திட்டங்களைக் கொண்டிருக்கும் நன்கு திட்டமிடப்பட்ட அரசு-சாரா அமைப்பாக நோக்கப்படக் கூடாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தனது உரோம் மறைமாவட்டத்தின் மாநாட்டை இத்திங்கள் மாலையில் தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதிகமதிகமான
மக்கள் கைவிடப்பட்டவர்கள் போன்று வாழ்வு நடத்தும் ஒரு சமுதாயத்தில்
திருஅவை ஒரு தாயின் பங்கை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திப்
பேசினார்.
கடந்த ஆண்டில் உரோம் மறைமாவட்டத்தில் பல பங்குத்தளங்களைப் பார்வையிட்டு பெருமளவான மக்களைத் தான் சந்தித்ததாகவும், அவர்கள் தங்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றுடன், தங்களின் வேதனைகளையும் பிரச்சனைகளையும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார் திருத்தந்தை.
பலர் தங்கள் வாழ்வின் பொருளையும் விழுமியங்களையும் இழந்து, வாழ்வின் இன்னல்களோடு குழம்பிப்போய் இருப்பதாக உணர்கின்றனர் எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, பெற்றோரின் ஒரு நாளைய கடினமான பணியை நிநைத்துப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பில்லாமல் கைவிடப்பட்ட நிலைக்கு இளையோரை உட்படுத்தும் கலாச்சாரம் குறித்து கவலை தெரிவித்தவேளையில், திருஅவை ஓர் அன்னையாக இருந்து செயல்பட வேண்டியது அவசியம் என, உரோம் மறைமாவட்ட மாநாட்டில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. ப்ரெஞ்ச், போலந்து இறையியல் வல்லுனர்களுக்கு இராட்சிங்கர் விருதுகள்
ஜூன்,17,2014.
கத்தோலிக்க-யூத மத உரையாடலில் செயலூக்கத்துடன் தங்களை ஈடுபடுத்தி வரும்
இரு விவிலிய வல்லுனர்களுக்கு இவ்வாண்டின் இராட்சிங்கர் விருது
வழங்கப்படுவதாக, இச்செவ்வாயன்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
இவ்விருதுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, பிரான்ஸ் நாட்டவரான Anne-Marie Pelletier அவர்கள், பாரிசிலுள்ள Notre Dame குருத்துவக் கல்லூரியிலும், ஐரோப்பிய சமய அறிவியல் நிறுவனத்திலும் விவிலியப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மேலும், பாரிசிலுள்ள யூத-கிறிஸ்தவ ஆவணத் தகவல் பணி அமைப்பின் உதவித் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
இராட்சிங்கர் விருதைப் பெறும் மற்றொருவரான போலந்து நாட்டு பேரருள்திரு Waldemar Chrostowski அவர்கள், போலந்து இறையியல் பத்திரிகையின் ஆசிரியர். இவர் 2005ம் ஆண்டிலிருந்து, போலந்து விவிலிய வல்லுனர்கள் கழகத் தலைவராக இருந்து வருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கடத்தப்பட்ட அருள்பணி பிரேம் குமார் நலமுடன் திரும்புவார்: ஆப்கான் இந்திய தூதர் நம்பிக்கை
ஜூன்,17,2014.
ஆப்கானில் கடத்தப்பட்டுள்ள தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ்
பிரேம் குமார் அவர்கள் நலமுடன் திரும்புவார் என அந்நாட்டுக்கான இந்திய
தூதர் அமர் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்கானில்
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அருள்பணியாளர் பிரேம் குமார் நலமாக
இருப்பதாகவும் அவர் விரைவில் மீட்கப்படுவார் எனவும் அமர் சின்ஹா
தெரிவித்துள்ளார்.
தமிழக இயேசு சபை அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார், இம்மாதம் 2ம் தேதி ஆப்கானின் ஹெராத் மாநிலத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.
ஆப்கானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், அருள்பணியாளர் பிரேம் குமாரை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கும் பணியை, ஆப்கான் அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஆப்கானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தூதர் அமர் சின்ஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக
அருள்பணியாளர் மீட்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. நாங்கள்
ஆப்கான் அரசுடன் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் இணைந்தே செயல்பட்டு
அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அருள்பணியாளர் நலமுடன் விரைவில்
நாடு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதில் உரிய ஆதாரங்கள் இன்றி இது குறித்து மேலும் எதவும் கூறுவதற்கு இல்லை என்றாலும், அருள்பணியாளர் இன்னும் சில தினங்களில் மீட்கப்படுவார் என்றும் அமர் சின்ஹா கூறினார்.
முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த அருள்பணியாளரை மீட்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 4ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அருள்பணியாளரை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ஆப்கான் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் முதல்வரின் கடிதத்திற்கு, பிரதமர் நரேந்திரே மோடி பதிலளித்திருந்தார்.
ஆதாரம் : தி இந்து
7. இலங்கையில் இடம்பெற்றுவரும் வகுப்புவாத வன்முறைகள் நிறுத்தப்படுமாறு நவி பிள்ளை வலியுறுத்தல்
ஜூன்,17,2014.
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும்
தாக்குதல்கள் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அதேவேளையில், வெறுப்புணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் நிறுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவி பிள்ளை.
வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை அடக்கி ஒடுக்கவும், வன்முறையை நிறுத்தவும் இலங்கை அரசு அனைத்து வழிகளிலும் முயற்சிக்குமாறு கேட்டுள்ளார் நவி பிள்ளை.
மேலும், இலங்கையில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மை சமயத்தவர்க்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெறுவது குறித்து, இந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அவை தனது அதிர்ச்சியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் களுத்துறை மாவட்டம், அளுத்கமவில்
தீவிரவாத புத்தமதக் குழுக்களுடன் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.
கடந்த
இரு வருடங்களாக சிங்கள தீவிரவாத புத்தமதக் குழுவினர் முஸ்லிம் எதிர்ப்பு
போராட்டங்களை நடத்திவருகின்றனர். வழக்கமாக புத்த பிக்குமார் இவற்றுக்குத்
தலைமை தாங்குவது வழக்கம் என்றும், இவை அண்மை ஆண்டுகளில் மத வன்முறைகளாக உருவெடுத்துள்ளன என்றும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஆதாரம் : UN
8. ஆட்சியராகப் போகும் சென்னை பார்வையற்ற மாணவி
ஜூன்,17,2014.
தனது தளராத முயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர் ஆகப்
போகிறார் சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பெனோ ஷெபைன். இது அவரது
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு என ஊடகங்கள்
பாராட்டியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை வெளியான ஐ ஏஎஸ் தேர்வு முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி பெண் அதிகாரி பெனோ ஷெபைன்(24) வெற்றி பெற்று அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளார். பெனோ, பிறவியிலேயே பார்வையில்லாதவர் என்பதுதான் அந்த வியப்புக்கு காரணம்.
சிவில்
சர்வீஸ் தேர்வுக்குத் தயாரான அனுபவங்களையும் சந்தித்த சவால்களையும் தி
இந்து தினத்தாள் நிருபர் ஒருவருடன் பகிர்ந்து கொண்ட பெனோ, தனது வெற்றியில், தனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள். அதைச் செயல்படுத்த உழைக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக வேண்டுமானால், தன்னம்பிக்கையுடன்
விடாமுயற்சி அவசியம். அதுதான் தடைகளைத் தகர்த்தெறியும் ஆயுதம். அனைத்து
மாணவர்களுக்கும் பெனோ கூறும் அறிவுரை இதுதான் என்று அந்த நிருபர்
எழுதியுள்ளார்.
ஆதாரம் : தி இந்து
No comments:
Post a Comment