Monday, 23 June 2014

செய்திகள் - 23.06.14

செய்திகள் - 23.06.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடுகிறவர்கள் வெளிவேடக்காரர்கள்

2. மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவ சமூகங்களுக்காகச் செபிப்போம், டுவிட்டரில் திருத்தந்தை

3. திருத்தந்தை : பிறருக்காக தங்களையே கையளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்

4. திருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள்

5. "அல்லா" என்ற வார்த்தை முஸ்லிம் கடவுளைக் குறிக்க மட்டுமே மலேசிய உச்ச நீதிமன்றம்

6. பெர்லினில் ஒரே கூரையின்கீழ் மூன்று மதங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள்

7. காடுகள் மனித வாழ்வுக்கு அடிப்படையானவை, ஐ.நா. அறிக்கை

8. மாரடைப்பிற்கு மன அழுத்தம் காரணமாவதைக் கண்டுபிடித்துள்ளனர் அறிவியலாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரைத் தீர்ப்பிடுகிறவர்கள் வெளிவேடக்காரர்கள்

ஜூன்,23,2014. தனது சகோதரரை குற்றவாளி எனத் தீர்ப்பிடுகிறவர் தானும் அதேபோல் தீர்ப்பிடப்படுவார்; இறைவன் ஒருவரே ஒரே நீதிபதி; மாறாக, தீர்ப்பிடப்படுகிறவர் அவரின் முதல் நீதிபதியான இயேசு மற்றும் தூய ஆவியின் பாதுகாப்பில் எப்போதும் தன்னை வைக்கலாம் என இத்திங்கள் காலை திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில், பிறர் உடமையை அநியாயமாய்ப் பறித்துக் கொள்பவர் இறுதியில் அவரே இழப்பவராக இருப்பார், ஏனெனில் அவரிடம் குறைபடும் கருணைக்கு அவரே பலியாகிவிடுவார் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
தீர்ப்பிடுகிறவர் தவறு செய்கிறார், குழம்பிப்போய் இருக்கிறார் மற்றும் தோல்வியடைந்தவராக மாறுகிறார், ஏனெனில் ஒரே நீதிபதியாக இருக்கும் இறைவனின் இடத்தை அவர் எடுத்துக் கொள்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு வானகத்தந்தையின் முன்னால் ஒருபோதும் நம்மை குறைகூற மாட்டார், மாறாக, நமக்காக பரிந்துபேசுவார், அவரே நமக்காக முதலில் பரிந்து பேசுபவர் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நாம் இயேசுவின் பாதையில் நடக்க விரும்பினால் ஒருபோதும் தீர்ப்பிடாதவர்களாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

2. மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவ சமூகங்களுக்காகச் செபிப்போம், டுவிட்டரில் திருத்தந்தை

ஜூன்,23,2014. கிறிஸ்தவம் பிறந்த மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வாழும்பொருட்டு அப்பகுதிவாழ் கிறிஸ்தவ சமூகங்களுக்காகச் செபிப்போம் என, இத்திங்களன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள Golan Heights பகுதியில் சிரியாவின் தாக்குதலில் இஸ்ரேல் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இத்திங்கள் காலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவுக்குள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன என ஓர் ஊடகச் செய்தி கூறுகின்றது.
சிரியா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒன்பது இடங்களில் இஸ்ரேல்  குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாக, இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற ஜூலை 5ம் தேதி சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் இத்தாலியின் மொலிசே சென்று, தொழிலாளர்கள், நோயாளிகள் மற்றும் ஏழைகளைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

3. திருத்தந்தை : பிறருக்காக தங்களையே கையளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்

ஜூன்,23,2014. இயேசு இவ்வுலகிற்கு ஏதோ ஒன்றை வழங்க வரவில்லை, மாறாக, தன்னையே கையளிக்க வந்தார் என்பதை நினைவில் கொள்ளும் கிறிஸ்தவர்கள், பிறருக்காக தங்களையே கையளிக்க முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திரு உடல் திரு இரத்தத் திருவிழாவைக் குறித்து தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படும் அப்பமாக நாம் ஒவ்வொருவரும் மாறுவதே, இயேசுவைப் பின்பற்றுவதாகும் எனவும் எடுத்துரைத்தார்.
நாம் திருப்பலியில் பங்கேற்று திருநற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொருமுறையும்  இயேசு மற்றும் தூய ஆவியின் இருப்பு நம்மில் செயலாற்றி நம் இதயங்களைச் சீர்படுத்துகிறது எனவும் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் பிறரன்பை நாம் இதயம் திறந்து வரவேற்கும்போது, அது நம்மை மாற்றியமைத்து நம்மை அன்புகூர்பவர்களாக ஆக்குகின்றது என எடுத்துரைத்த திருத்தந்தை, அத்தகைய அன்பு, அளவுகளுக்குள் அடங்காத இறையன்பின் மாதிரிகையாக இருக்கும் எனவும் கூறினார். நம்மை அன்புகூராதவர்களையும் நாம் அன்புகூரவும், தீமையை நன்மையால் எதிர்கொள்ளவும், மற்றவர்களை மன்னிக்கவும் அவர்களுடன் பகிரவும், அவர்களை வரவேற்கவும் இறையன்பே நமக்கு உதவுகிறது எனவும் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
சித்ரவதைகளுக்குப் பலியானவர்களுக்கன ஐ.நா. நாள் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படுவது குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சித்ரவதைகள் என்பது மிகக்கொடிய பாவம் எனக் குறிப்பிட்டு, சித்ரவதை முறைகள் ஒழிக்கப்பட ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்களாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள்

ஜூன்,23,2014. இத்தாலிய மாஃபியா திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்களால் நடத்தப்படும் வஞ்சகச் செயல்களையும் வன்முறைகளையும் இச்சனிக்கிழமை மாலையில் கண்டித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியில் மாஃபியா குற்றங்கள் அதிகமாக இடம்பெறும் கலாபிரியா மாநிலத்துக்கு, ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று ஒருநாள் திருப்பயணத்தை மேற்கொண்டு, அன்று மாலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில், மாஃபியா உறுப்பினர்கள் தீமையை வழிபடுபவர்கள் என்று குறை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவழிபாடு, பணவழிபாட்டால் ஈடுகட்டப்படும்போது பாவத்தின் பாதை ஒருவரின் சொந்த ஆதாயங்களுக்கு வழி திறக்கிறது என்றும், ஒருவர் இறைவனை வழிபடாமல் இருக்கும்போது, வஞ்சகச் செயல்களிலும் வன்முறைகளிலும் வாழும் மனிதரைப் போன்று தீமையை வழிபடுபவராக மாறுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
கலாபிரியா மாநிலத்தின் சிபாரியில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அழகான உங்கள் பூமி, மாஃபியா பாவத்தின் விளைவுகளின் அடையாளங்களை அறிந்திருக்கின்றது எனவும், Ndrangheta என்ற பெயரில் இயங்கும் கலாபிரியா மாஃபியா, தீமையை வழிபடுகின்றது மற்றும் பொதுநலனை வெறுக்கின்றது எனவும் கூறினார்.
இந்தத் தீமைக்கு எதிராய்ப் போராட வேண்டும் மற்றும் இத்தீமை வெளியேற்றப்பட வேண்டுமெனவும், இந்தத் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் இறைவனோடு ஒன்றிணையாதவர்கள், அவர்கள் புறம்பாக்கப்பட்டவர்கள் எனவும் உரையாற்றினார் திருத்தந்தை.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, இறைவனை மட்டும் வழிபடுவதை மையமாக வைத்து தனது மறையுரையை வழங்கினார்.
தென் இத்தாலியில் நேப்பிள்ஸ் பகுதியில் Camorra, சிசலிப் பகுதியில் Cosa Nostra, கலாபிரியா பகுதியில் Ndrangheta ஆகிய பெயர்களில் மாஃபியா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 

5. "அல்லா" என்ற வார்த்தை முஸ்லிம் கடவுளைக் குறிக்க மட்டுமே மலேசிய உச்ச நீதிமன்றம்

ஜூன்,23,2014. மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற சொல்லை, மலேசியாவில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்திவந்த நிலையில், அதனை எதிர்த்து எழுந்த சர்ச்சையை அடுத்து, அரசால் இந்தப் பதத்தை கிறித்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம், கத்தோலிக்கத் திருஅவையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல் முதலில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதல் நீதிமன்றத்தில் கத்தோலிக்கர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்த நிலையில் அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்த்தைத்தொடர்ந்து, மலேசிய கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4- 3 என்ற வாக்குகளில் நிராகரித்து தள்ளுபடி செய்தனர்.
இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருட்திரு இலாரன்ஸ் ஆண்ட்ரூ கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்  : BBC

6. பெர்லினில் ஒரே கூரையின்கீழ் மூன்று மதங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள்

ஜூன்,23,2014. யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஒரே இடத்தில் வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு ஜெர்மனியின் பெர்லின் மாநகராட்சி திட்டமிட்டு வருகின்றது.
ஒரே கூரையின்கீழ் ஒரு யூதமதத் தொழுகைக்கூடம், ஒரு மசூதி, ஒரு கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அமைக்கவும், இது, ஒரு வீடு என அழைக்கப்படும் எனவும் கூறியுள்ள பெர்லின் மாநகராட்சி, இம்மூன்று மதத்தினரும் தாங்கள் வழிபடுவதற்கென தங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களை ஒன்றிணைந்து கட்டுவார்கள் எனக் கூறியுள்ளது.
இவ்விடம் எழுப்பப்படுவதற்கான வரைபடம் குறித்து போட்டி வைக்கப்பட்டு வெற்றிபெறும் கட்டட அமைப்பு தேர்ந்தெடுக்கப்படும் எனவும் பிபிசி ஊடகச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : BBC

7. காடுகள் மனித வாழ்வுக்கு அடிப்படையானவை, ஐ.நா. அறிக்கை

ஜூன்,23,2014. உலகின் காடுகள் மனிதரின் நலவாழ்வுக்கும், மனிதர் உயிர் வாழ்வதற்கும் அடிப்படையானவை என்று ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
காடுகள் குறித்து உரோம் நகரில் இத்திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து, கருத்து தெரிவித்த FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் வனப்பிரிவு இயக்குனர் Eva Mueller, காடுகள் வருவாய்க்கும், எரிபொருள்களுக்கும், பயன்படுகின்றன என்று கூறினார்.
உலகின் 80 விழுக்காட்டுப் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடங்களாக காடுகள் உள்ளன என்றும், 1 கோடியே 32 இலட்சம் பேருக்கு இவை வேலைவாய்ப்பை வழங்குகின்றன என்றும், 4 கோடியே 10 இலட்சம் வாழ்க்கைத் தொழில்கள் காடுகளைச் சார்ந்துள்ளன என்றும் Mueller தெரிவித்தார்.

ஆதாரம் : BBC

8. மாரடைப்பிற்கு மன அழுத்தம் காரணமாவதைக் கண்டுபிடித்துள்ளனர் அறிவியலாளர்கள்

ஜூன்,23,2014. மன அழுத்தமானது மாரடைப்பு  நோய்க்கு எவ்வாறு காரணமாகின்றது என அறிவியலாளர்கள் நீண்ட காலமாக அறிந்திராத நிலையில் தற்போது முதன் முறையாக அறிவியல் ரீதியான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
Massachusetts பொதுமருத்துவமனை  மற்றும் Harvard மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வுகளின் விளைவாக மன அழுத்தம், இரத்த நாளங்களின் வீக்கம் என்பன மாரடைப்பிற்கு காரணமாக அமைவதாக  கண்டறிந்துள்ளனர்.
இவ்வாய்வின்படி மன அழுத்தமானது நோய் எதிர்ப்பு முறைமையை செயலிழக்கச் செய்வதாகவும், இதனால் குருதியில் வெண்குருதிச் சிறுதுணிக்கைகளின் அளவு அதிகரித்து நாடி, நாளங்களில் மோசமான வீக்கம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக நாடி, நாளங்களில் சேதம் ஏற்பட்டு மாரடைப்பு நோய் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment