மிளகுப் பொடி தூவும் ஆளில்லா விமானங்களை விற்பனை செய்யும் தென்னாப்பிரிக்க நிறுவனம்
Source: Tamil CNN. தென்னாப்பிரிக்காவில் செயல்பட்டுவரும் டெசர்ட் வுல்ப் என்ற நிறுவனம் கலகக்காரர்களை உயிருக்கு ஆபத்தில்லாமல் விரட்ட உதவும் ஒரு புதுவகையான ஆளில்லா விமானங்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த மாதம் புதிய வரவாக விற்பனைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த இயந்திரத்தின் சிறப்பு அம்சமாகக் கூறப்படுவது மிளகு பொடி ஸ்பிரே தோட்டாக்கள் ஆகும். இதைத் தொடர்ந்து 25 யூனிட்டுகளுக்கு தங்களுக்கு விற்பனை ஆர்டர் கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்னி கீசர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவற்றை வாங்கும் நிறுவனத்தின் பெயரை அவர் வெளியிடாதபோதும் சர்வதேச சுரங்கத் தொழில் நிறுவனமே இவற்றை ஆர்டர் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள சில சுரங்கத்தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், பிற நாடுகளைச் சேர்ந்த காவல்துறை நிறுவனங்கள், தொழில்துறை வாடிக்கையாளர்கள் போன்றோரும் இதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறினார். *இந்த தகவல் குறித்து சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தங்களின் அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளது. தொழிலாளிகளின் மீது மிளகு ஸ்பிரேயைப் பயன்படுத்துவது என்பது சித்ரவதையின் ஒரு வடிவம் ஆகும் என்று கூட்டமைப்பின் தகவல் தொடர்பாளரான டிம் நூனன் கூறினார்.
இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத முன்னேற்றம் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஒரு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான எந்த ஒரு அரசாங்கமும் தொழிலாளர்கள் மீதோ, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீதோ இதுபோன்ற நவீன போர்க்கள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை தடை செய்யும் என்று தாங்கள் கருதுவதாக நூனன் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய கலக கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தினை வாங்க விரும்பும் நிறுவனத்தைக் கண்டறியும் முயற்சியிலும் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு ஈடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment