செய்திகள் - 18.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்த விவரங்கள்
2. திருத்தந்தை 12ம் பயஸ், இத்தாலி நாட்டின் பாதுகாவலர்களை அறிவித்த 75ம் ஆண்டு நிறைவு
3. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது - கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி
4. "விருந்தோம்பல் ஒன்றே புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு" - இயேசு சபையினர் நடத்திய கருத்தரங்கு
5. தங்கள் சக்தியை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, புரட்சிக் குழுக்கள் அலெப்போ நகருக்கு வரும் நீர் இணைப்புக்களைத் தடுத்துள்ளனர்
6. போதைப் பொருள் ஒழிப்பு நாளையொட்டி அர்ஜென்டீனா நாட்டு ஆயர்களின் கருத்துப் பரப்பு முயற்சி
7. இஸ்லாமிய உடன்பிறந்தோருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இலங்கை கிறிஸ்தவத் தலைவர்கள்
8. நர்ஸ் என்பதால் மகனின் உடல் உறுப்பு தானத்துக்கு அம்மா உடனடி சம்மதம் : உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடல் தகனம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை, ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணம் குறித்த விவரங்கள்
ஜூன்,18,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென்கொரியாவில் நடைபெறும் அகில உலக ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விவரங்கள், ஜூன் 18, இப்புதனன்று வெளியிடப்பட்டன.
வருகிற ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 18ம் தேதி முடிய தென்கொரியாவுக்கு, திருத்தந்தை மேற்கொள்ளும் இந்த மேய்ப்புப்பணி பயணம், ஆகஸ்ட் 13, புதன் மாலை 4 மணிக்கு, உரோம் நகர், Fiumicino பன்னாட்டு விமான நிலையத்தில் துவங்குகிறது.
தென்கொரியாவின் தலைநகர், Seoul விமானப்படை தளத்தை, ஆகஸ்ட் 14, வியாழன் காலை 10.30 மணியளவில் சென்றடையும் திருத்தந்தை, அன்று மாலை 4.30 மணியளவில் தென்கொரிய அரசுத்தலைவரைச் சந்தித்தபின், மாலை 5.30 மணிக்கு கொரிய ஆயர்பேரவைத் தலைமையகத்தில் அனைத்து ஆயர்களையும் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 15, மரியன்னையின் விண்ணேற்பு திருநாளன்று, காலை 10.30 மணிக்கு, Daejon உலகக் கோப்பை திறந்த வெளியரங்கில் திருப்பலியாற்றும் திருத்தந்தை, அன்று மதியமும், மாலையும் இளையோர் குழுக்களைச் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 16, சனிக்கிழமை காலை 9 மணியளவில், தென்கொரிய மறைசாட்சிகளின் திருத்தலமான Seo So Mun செல்லும் திருத்தந்தை, 10 மணிக்கு, Paul Yun Ji-Chung அவர்களையும், அவரது 123 துணையாளர்களையும் முத்திப்பேறு பெற்றவர்களாக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
அன்று மாலையில் "நம்பிக்கையின் இல்லம்" என்ற இல்லத்தில் தங்கள் வாழ்வைச் சீரமைக்கும் இளையோரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை, பின்னர், பொதுநிலையினர் தலைவர்களையும், இருபால் துறவிகளையும் சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 17ம் தேதி, ஞாயிறன்று, ஆசிய ஆயர்களை, காலை 11 மணிக்குச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை 4 மணிக்கு அகில உலக ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளின் சிகரமாக அமையும் திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
ஆகஸ்ட் 18, திங்களன்று, காலை தென்கொரியாவில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கும் திருத்தந்தை, அன்று மதியம் 1 மணிக்கு Seoul விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு உரோம் நகர் வந்து சேருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை 12ம் பயஸ், இத்தாலி நாட்டின் பாதுகாவலர்களை அறிவித்த 75ம் ஆண்டு நிறைவு
ஜூன்,18,2014. இத்தாலி நாடு கடினமான வரலாற்றை எதிர்கொண்ட காலங்களில் வாழ்ந்த அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களும், சியென்னா
நகர் புனித கத்தரீன் அவர்களும் நம் அனைவருக்கும் நற்செய்தியின் புதிய
வழிகளைச் சொல்லித் தந்தனர் என்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில், அசிசி நகர், புனித பிரான்சிஸ் அவர்களையும், சியென்னா நகர் புனித கத்தரீன் அவர்களையும் இத்தாலி நாட்டின் பாதுகாவலர்கள் என்று அறிவித்து, சுற்றுமடல் ஒன்றை, 1939ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி வெளியிட்டார்.
அந்த சுற்றுமடல் வெளியிடப்பட்ட 75ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு ஜூன் 18, இப்புதனன்று திருஅவை சிறப்பிக்கும் வேளையில், இந்தச் சுற்றுமடலை, L'Osservatore Romano மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது.
திருஅவையைக் காப்பதிலும், மக்களுக்கு, குறிப்பாக, வறியோருக்கு
முன்னுரிமை வழங்கிப் பணியாற்றுவதிலும் இணையற்ற எடுத்துக்காட்டுகளாக
விளங்கிய இவ்விரு புனிதர்களின் நினைவு காலம் காலமாய் நம் மத்தியில்
இருக்கவேண்டும் என்று திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் தன் மடலில்
குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது - கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி
ஜூன்,18,2014. வன்முறைகளால் சூழப்பட்டுள்ள இவ்வுலகில் வாழும் நமக்கு, வன்முறையற்ற வழிகளே உயர்ந்த கோட்பாடுகளாக விளங்க வேண்டும் என்று சிரோ மலபார் திருஅவையின் உயர் தலைவர், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் கூறினார்.
Bosnia மற்றும் Herzegovina நாட்டின் தலைநகரான Sarajevo வில், "வன்முறை என்ற சோதனை: போருக்கும், ஒப்புரவுக்கும் இடையே மதங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் இவ்வாறு கூறினார்.
1893ம் ஆண்டு, சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தா ஆற்றிய புகழ்மிக்க உரையிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துரைத்த கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், சகிப்புத் தன்மை கொண்ட ஆசிய மக்கள் உலகெங்கும் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் என்று எடுத்துரைத்தார்.
இந்தியாவை ஆண்ட அசோகர், அக்பர் ஆகிய மாமன்னர்கள் பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் வளர்ப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தனர் என்பதையும் தன் உரையில் சுட்டிக் காட்டிய கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், தற்போது இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து, வன்முறைகள் பெருகியுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
ஆதாரம் : AsiaNews
4. "விருந்தோம்பல் ஒன்றே புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு" - இயேசு சபையினர் நடத்திய கருத்தரங்கு
ஜூன்,18,2014. ஜூன் 20, இவ்வெள்ளியன்று கடைபிடிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி, உரோம் நகரில், புலம்பெயர்ந்தோர் பராமரிப்பிற்கென, இயேசு சபையினர் நடத்திவரும் Astalli மையம், கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
"விருந்தோம்பல் ஒன்றே புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பு" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், திருத்தந்தையர் பலர் புலம்பெயர்ந்தொரைக் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
"அரசு எல்லைகள், பொருளாதார கட்டுமானங்கள், அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தையும் தாண்டி, அச்சமின்றி நாம் நமது நாடுகளை, புலம்பெயர்ந்தொருக்குத்
திறந்துவிடவேண்டும்" என்று திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் கூறிய
கருத்துக்கள் இக்கருத்தரங்கில் முக்கிய இடம் பெற்றன.
அதேபோல், "தூக்கியெறியும் கலாச்சாரத்தை விட்டு விலகி, அனைவரையும் வரவேற்கும் விருந்தோம்பலைக் கடைபிடித்தால் மட்டுமே, இவ்வுலகம் முன்னேற்றம் அடையும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும் முக்கிய இடம் பெற்றன.
இக்கருத்தரங்கில் பேசப்படும் அனைத்து கருத்துக்களையும் திரட்டி, Astalli மையம் தன் வலைத்தளங்களில் விரைவில் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. தங்கள் சக்தியை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, புரட்சிக் குழுக்கள் அலெப்போ நகருக்கு வரும் நீர் இணைப்புக்களைத் தடுத்துள்ளனர்
ஜூன்,18,2014. அலெப்போ நகரில், கோவில்களிலும், மசூதிகளிலும்
உள்ள கிணற்று நீரை மக்கள் பயன்படுத்துவதற்காக மீண்டும் திறந்து
வைத்துள்ளோம். இந்த நீர் மிகப் பாதுகாப்பான நீர் அல்லவென்றாலும் அதை மக்கள்
குடிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று
ஆர்மீனிய கத்தோலிக்க பேராயர் Boutros Marayati அவர்கள் கூறியுள்ளார்.
தங்கள் சக்தியை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக, புரட்சிக் குழுக்கள் அலெப்போ நகருக்கு வரும் நீர் இணைப்புக்களைத் தடுத்துள்ளனர் என்று Fides கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
அலெப்போ நகரின் பல வீடுகளும், பள்ளிகளும் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன என்று கூறும் பேராயர் Marayati அவர்கள், மக்கள் பயன்படுத்தும் இந்த நீரின் வழியே மேலும் பல தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, கோவில்களிலும், மசூதிகளும் தஞ்சம் அடைந்துள்ள மக்கள், தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்வுக்கும் பாதுகாப்பின்றி உள்ளனர் என்று பேராயர் Marayati அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.
ஆதாரம் : Fides
6. போதைப் பொருள் ஒழிப்பு நாளையொட்டி அர்ஜென்டீனா நாட்டு ஆயர்களின் கருத்துப் பரப்பு முயற்சி
ஜூன்,18,2014. "உங்கள் சுய உணர்வுக்குத் திரும்புங்கள்; உங்களையும், அடுத்தவரையும் கேளுங்கள்" என்ற விருதுவாக்குடன் போதைப் பொருள்களுக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்பு முயற்சியை, அர்ஜென்டீனா நாட்டு ஆயர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஜூன் 26, அடுத்த வியாழனன்று உலகெங்கும் போதைப் பொருள் ஒழிப்பு நாள் கடைபிடிக்கபடுவதையொட்டி, இச்செவ்வாய் முதல், பத்துநாள் கருத்துப் பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள ஆயர்கள், அனைத்து சமூக வலைத்தளங்கள் வழியாகவும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
தாங்களோ, தங்களுக்கு நெருங்கியவர்களோ போதைப்பொருள் தாக்கத்தில் இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் யாரை, எவ்விதம்
நெருங்கி உதவிகள் பெறமுடியும் என்ற விழிப்புணர்வை ஆயர்கள் உருவாக்கி
வருகின்றனர் என்று ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கல்வி நிலையங்கள், மற்றும்
இளையோர் அதிகம் சேர்ந்து வரும் இடங்கள் ஆகிய தளங்களில் இந்த விழிப்புணர்வு
முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு மேலும்
கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இஸ்லாமிய உடன்பிறந்தோருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் - இலங்கை கிறிஸ்தவத் தலைவர்கள்
ஜூன்,18,2014. இலங்கையில், இஸ்லாமிய
உடன்பிறந்தோருக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள கொடுமையை நாங்கள் வன்மையாகக்
கண்டிக்கிறோம் என்று இலங்கையில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் குரல்
கொடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள Bodu Bala Sena எனப்படும் புத்தமத அடிப்படைவாதக் குழுவினரால், ஜூன் 15, இஞ்ஞாயிறு முதல் துவக்கப்பட்ட தாக்குதல்களில் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஒரு வாரக் குழந்தை ஒன்று உட்பட, 91 பேர் காயமுற்றுள்ளனர் என்றும் ஆசியச் செய்தி கூறுகிறது.
அரசுக்கு எதிராக எழும் எந்த ஒரு சிறு எதிர்ப்பையும் உடனடியாக அடக்கிவிடும் அரசு இயந்திரங்கள், இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டோரை கட்டுப்படுத்தவோ, இஸ்லாமியரைக்
காப்பாற்றவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது வேதனையைத் தருகிறது என்று
அருள் பணியாளர் அசோக் ஸ்டீபன் அவர்கள் ஆசியச் செய்தியிடம் கூறினார்.
இலங்கையில் 69 விழுக்காடு மக்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள். அதற்கு அடுத்தபடியாக, 7.6 விழுக்காட்டினர் இஸ்லாமியர், மற்றும் 6.2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
ஆதாரம் : AsiaNews
8. நர்ஸ் என்பதால் மகனின் உடல் உறுப்பு தானத்துக்கு அம்மா உடனடி சம்மதம் : உறுப்புகளை தானம் செய்த இளைஞரின் உடல் தகனம்
ஜூன்,18,2014. மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞர் லோகநாதனின் உடல், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பழையனூரில் செவ்வாய் மாலை தகனம் செய்யப்பட்டது. இளைஞரின் தாய் ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உடனடியாக சம்மதித்தார் என தெரியவந்துள்ளது.
பழையனூரைச்
சேர்ந்த ராஜலட்சுமியின் ஒரே மகன் லோகநாதன் (27). எலக்ட்ரிக்கல் அண்டு
எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு படித்துவிட்டு, சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். கடந்த 11-ம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கிய லோகநாதன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், திங்கள்கிழமை (ஜூன் 16) காலையில் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து
மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தாய் ராஜலட்சுமி முன்வந்தார். எனவே
அன்று மாலையே அறுவைச் சிகிச்சை செய்து லோகநாதனின் உடலில் இருந்து
சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்கள் மற்றும் முதுகில் இருந்து தோல் ஆகியவற்றை டாக்டர்கள் எடுத்தனர்.
இதனைத்
தொடர்ந்து இரவோடு இரவாக அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய
கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மும்பையை சேர்ந்த இளம்
பெண்ணுக்கு லோகநாதனின் இதயம் பொருத்தப்பட்டது.
காவல்
துறையினரின் உதவியுடன் இந்த இதயம் இரு மருத்துவமனைகளுக்கு இடையே வெகு
வரைவில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வை ஊடகங்கள் புகழ்ந்துள்ளன.
லோகநாதனின் தாய் ராஜலட்சுமி அவர்கள் ஒரு நர்ஸ் என்பதால், மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். “மற்றவர்களுக்கு உதவி செய்வது எனக்கும், என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும். என் மகனால், பலர் உயிர் பிழைப்பார்கள் என்றால் அது பெருமைப்பட வேண்டிய விடயம்” என ராஜலட்சுமி கூறினார்.
No comments:
Post a Comment