பட்டினி கிடந்து பிறர் பசியைப் போக்கியவர் (St. Joseph Cafasso)
19ம்
நூற்றாண்டின் துவக்க காலத்தில் இத்தாலியின் தூரின் நகரில் சமூகச்
சீர்திருத்தங்களைச் சிறப்பாகச் செய்தவர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர்
அருள்பணி புனித ஜோசப் கஃபாசோ. இவர் காஸ்தெல் நோவோ த ஆஸ்தி(Castelnuovo d'Asti-தற்போது இந்நகர் காஸ்தெல்நோவோ தொன்போஸ்கோ என அழைக்கப்படுகிறது) என்ற ஊரில் வேளாண் குடும்பத்தில் 1811ம் ஆண்டு பிறந்தார். பிறக்கும்போதே முதுகுத்தண்டுவடப் பிரச்சனை இவருக்கு இருந்தது. குள்ளமான உடல் அமைப்பையே கொண்டிருந்த இவர், கடின உழைப்பாளி. அறிவிலும் பக்தியிலும் சிறந்திருந்த ஜோசப் கஃபாசோ, தனது
22வது வயதில் 1833ம் ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
சலேசிய சபையை நிறுவிய புனித தொன்போஸ்கோ அவர்கள் குருத்துவ வாழ்வைத்
தேர்ந்துகொள்ளவும், தெருச்சிறாருக்குப் பணி செய்யவும் இவர் தூண்டுகோலாய் இருந்தார். சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த ஜோசப் கஃபாசோ, ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டவர்க்கு உதவியாக இருந்தார். தான் சாப்பிட உணவில்லாமல் பட்டினி கிடக்கும் அளவுக்கு, தன்னிடமிருந்த அனைத்தையும் தானம் செய்தார். சிலநேரங்களில் ஏழைகளிடம் உணவு வாங்கி தனது பசியைப் போக்கினார். சிறைகளுக்குச் சென்று, கைதிகளுடன், குறிப்பாக
மரணதண்டனை கைதிகளிடம் மணிக்கணக்காய் பேசிக்கொண்டிருப்பார். கைதிகள் மனம்
மாற உதவினார் இவர். பல துறவு சபைகள் தொடங்கப்படுவதற்குத் தூண்டுகோலாய்
இருந்தார் இவர். தனது 49வது வயதில் 1860ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இறந்தார்
ஜோசப் கஃபாசோ. இப்புனிதரின் விழா ஜூன் 23. புனித ஜோசப் கஃபாசோ, "மரணதண்டனைக் கைதிகளின் அருள்பணியாளர்" என்று அழைக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment