செய்திகள் - 21.06.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை
2. கலாபிரியா மாநிலத்தில் திருத்தந்தையின் திருப்பயண நிகழ்ச்சிகள்
3. குற்றக்கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைகள் இனி ஒருபோதும் வேண்டாம், திருத்தந்தை
4. அருள்பணியாளர்க்கான 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சிக்கு திருத்தந்தை ஆசீர்
5. சிரியா நாட்டுப் புலம்பெயர்வோர்க்கு அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஆயர்கள்
6. ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு
7. மத்திய கிழக்கில் காணப்படும் இடர்கள் அப்பகுதியின் வரைபடத்தை மாற்றக்கூடும், மாரனைட் ஆயர்கள்
8. இந்தியா திரும்ப இயலாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் : ஆம்னெஸ்டி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், திருத்தந்தை
ஜூன்,21,2014. சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை நோக்கிய பயணம், நம்மை அன்பு செய்கின்ற, நம்மை அறிந்திருக்கின்ற, நம் பாவங்களை மன்னிக்கின்ற இறைவனோடு சந்திப்பு ஏற்படுத்துவதில் அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று இத்தாலியக் கைதிகளிடம் கூறினார்.
இச்சனிக்கிழமை
காலை உரோம் உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு தென் இத்தாலியின் கலாபிரியா
மாநிலத்துக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, முதலில் அம்மாநிலத்தின் Castrovillari மாவட்டச் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகள் மற்றும் அலுவலகர்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
சிறையில் இருப்பவர்களின் அடிப்படை மனித மாண்புப்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நியதி இருக்கும்வேளை, கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதை எளிதாக்கும் முயற்சிகளும் சிறை அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார் திருத்தந்தை.
இந்த நோக்கம் நிறைவேற்றப்படாதபோது சிறைத் தண்டனை வெறும் தண்டனையாகவும், பழிக்குப்பழி வாங்குவதாக மட்டுமே இருக்கும், இது தனிநபரையும் சமூகத்தையும் பாதிக்கும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைவன் நம்மை இந்த வழியில் நடத்தவில்லை என்றுரைத்த திருத்தந்தை, நாம்
ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுவதற்குச் செல்லும்போது இறைவன் நம்மை
மன்னிக்கிறார் மற்றும் நாம் அவரோடு செல்வதற்கு நம்மை அழைக்கிறார் என்றும்
கூறினார்.
நாம் பலவீனமானவர்கள் என்பதை இறைவன் நினைவுபடுத்துகிறார், எனவே ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறச் செல்வதற்கு சோர்வடையக் கூடாது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இச்சந்திப்பின் இறுதியில் கைதிகளின் குடும்பங்கள் இறைவனின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் அனுபவிக்குமாறு செபித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. கலாபிரியா மாநிலத்தில் திருத்தந்தையின் திருப்பயண நிகழ்ச்சிகள்
ஜூன்,21,2014. இச்சனிக்கிழமையன்று கலாபிரியா மாநிலத்தின் Castrovillari மாவட்டச் சிறைக்குச் சென்று கைதிகளுக்கு உரையாற்றிய பின்னர், Cassano all'Jonio நகருக்கு ஹெலிகாப்டரில் அந்நகர் “San Giuseppe Moscati” முதியோர் இல்லம் சென்று உரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன் பின்னர் Cassano all’Jonio நகர் பேராலயம் சென்று மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவிகளைச் சந்தித்து உரையாற்றினார்.
இச்சனிக்கிழமை மதிய உணவை, ஏழைகள் மற்றும் “Saman” போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலுள்ள இளையோரோடு அருந்தினார். ஓய்வுபெற்றோர் வாழும் “Casa Serena” என்ற இல்லத்துக்குச் சென்ற பின்னர் மாலையில் திறந்த வெளியில் திருப்பலியும் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென்
இத்தாலியில் மாஃபியா குற்றக்கும்பலின் மையமாக கருதப்படும் கலாபிரியா
மாநிலத்தில் 12 மணிநேரத் திருப்பயணத்தை முடித்து வத்திக்கான் திரும்புவது
அவரது பயணத்திட்டத்தில் உள்ளது.
“மன்னிப்புக் கேட்பதற்காக வருகிறேன்”என்ற தலைப்பில் இத்திருப்பயணம் நடைபெற்றது. Cassano allo Ionio நகர் ஏழைகள் அதிகம் வாழ்கின்ற நகரமாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. குற்றக்கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைகள் இனி ஒருபோதும் வேண்டாம், திருத்தந்தை
ஜூன் 21,2014. Cassano all'Ionio நகரில் மாஃபியா குற்றக் கும்பலால் கொலை செய்யப்பட்ட Coco என்ற
3 வயது சிறுவனுக்கு நேர்ந்ததுபோன்று சமுதாயத்தில் இனி எவருக்கும்
இடம்பெறக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரைச் சந்தித்தபோது இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திட்டமிட்டக் குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைகளை வன்மையாய்க் கண்டித்தார்.
மேலும், சிறுவன் Coco மற்றும் அவனின் பெற்றோருக்காகத் திருத்தந்தை செபிப்பதாக அந்நகர் ஆயர் Nunzio Galantino தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அருள்பணியாளர்க்கான 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சிக்கு திருத்தந்தை ஆசீர்
ஜூன்,21,2014.
அருள்பணியாளர்க்கான 24 மணி நேர செபமாலை பக்தி முயற்சி என்ற அமைப்பினரின்
5வது அனைத்துலக மாநாட்டுக்குத் தனது நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருஇதய வாழாவும், உலக அருள்பணியாளர் நாளுமாகிய இம்மாதம் 27ம் தேதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நியுயார்க் மற்றும் டப்ளின் நகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்புக்கு ஆயர் ஆலோசகராக இருக்கும் பேராயர் Michael Neary அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
ஐந்து
ஆண்டுகளுக்கு முன்னர் இருபது நாடுகளில் தொடங்கப்பட்ட இந்தப் பக்தி முயற்சி
தற்சமயம் 46 நாடுகளில் 85 திருத்தலங்களில் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
ஆதாரம் : Zenit
5. சிரியா நாட்டுப் புலம்பெயர்வோர்க்கு அமெரிக்காவின் மனிதாபிமான உதவிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும், ஆயர்கள்
ஜூன்,21,2014. மத்திய கிழக்கில், சிரியா நாட்டுப் புலம்பெயர்வோர் எதிர்நோக்கும் நெருக்கடி நிலை ஒரு மனிதாபிமானப் பேரிடர் என்று சொல்லி, அம்மக்களுக்கு
அமெரிக்க ஐக்கிய நாடு ஆற்றிவரும் மனிதாபிமான உதவிகள் விரிவுபடுத்தப்பட
வேண்டுமென்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அரசை விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன் 21, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக புலம்பெயர்வோர் நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுத் தலைவர் ஆயர் Eusebio Elizondo அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா
நாட்டிலிருந்து புலம்பெயர்வோரில் மிகவும் வறியவர்க்கு மீள்குடியேற்றம்
உட்பட பல நிவாரணப்பணிகளை அமெரிக்க அரசு செய்துவந்தாலும் அப்பணிகள்
அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
மேலும், மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறும் சிறாரின் நிலைமையும், புலம்பெயர்வோர் நிலைமையாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள ஆயர் Elizondo, தரமான வாழ்வுக்காக இந்நாட்டுக்கு வரும் இச்சிறாரை பாதுகாப்பு வழங்கும் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்தார்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை முப்பது இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என, ஐ.நா. கணக்கிட்டுள்ளது.
ஆதாரம் : CNA
6. ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு
ஜூன்,21,2014. அனைத்துலக புலம்பெயர்வோர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், உலகில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய மோதல்கள் நிறுத்தப்படவும், இப்போரினால் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவவும் வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
போர்களாலும், அடக்குமுறைகளாலும், மனித
உரிமை மீறல்களாலும் நாடுகளைவிட்டு வெளியேறியுள்ள ஐந்து கோடிக்கு மேற்பட்ட
மக்களின் நெருக்கடியான நிலைகளை நினைவுகூருமாறும் இச்செய்தியில்
கேட்டுள்ளார் பான் கி மூன்.
உலகில் புலம்பெயர்ந்துள்ளவர்களில் 86 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர் எனவும், இவ்வெண்ணிக்கை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 70 விழுக்காடாக இருந்தது எனவும் ஐ.நா. பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.
உலகில் போர்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டுக்குள்ளே 3 கோடியே 30 இலட்சம் பேரும், அண்டை
நாடுகளில் 1 கோடியே 67 இலட்சம் பேரும் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த
ஆண்டில் மட்டும் 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் புதிதாகப் புலம்பெயர்ந்தனர்.
ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு குடும்பம் வீதம் புலம்பெயர்ந்து வருகிறது.
ஆதாரம் : UN
7. மத்திய கிழக்கில் காணப்படும் இடர்கள் அப்பகுதியின் வரைபடத்தை மாற்றக்கூடும், மாரனைட் ஆயர்கள்
ஜூன்,21,2014. சிரியாவிலும் ஈராக்கிலும் இடம்பெறும் மோதல்கள் குறித்த கவலையை வெளியிட்டுள்ள அதேவேளையில், லெபனன் நாட்டில் அரசுத்தலைவர் இடம் காலியாக இருப்பது அந்நாட்டுக்கு மிகுந்த ஆபத்தை முன்வைக்கின்றது என, லெபனன் நாட்டு மாரனைட் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
லெபனன் அரசுத்தலைவர் மிஷேல் சுலைமான் அவர்களின் பதவிக்காலம் கடந்த மே 25ம் தேதி முடிவுற்றதிலிருந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து அரசியல் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இந்நிலை, மத்திய கிழக்குப் பகுதியின் வரைபடத்தை மாற்றுவதற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறினர்.
தங்களது ஆண்டுக் கூட்டத்தை இவ்வாரத்தில் நிறைவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள லெபனன் மாரனைட் ஆயர்கள், நாடு அரசுத்தலைவரின்றி இருப்பது, அந்நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஆபத்தாய் இருக்கின்றது என்றும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
லெபனன் நாட்டின் அரசியல் அமைப்பு 1943ம் ஆண்டின் தேசிய உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, அந்நாட்டின் அரசுத்தலைவர் மாரனைட் கத்தோலிக்கராகவும், பிரதமர் சுன்னிப் பிரிவு இஸ்லாமியராகவும், நாடாளுமன்ற சபாநாயகர் ஷியைட் பிரிவு இஸ்லாமியராகவும் இருக்க வேண்டும்.
ஆதாரம் : CNS
8. இந்தியா திரும்ப இயலாமல் ஈராக்கில் தவிக்கும் இந்தியர்கள் : ஆம்னெஸ்டி
ஜூன்,21,2014. ஈராக் நாட்டில் வன்முறை பாதித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள இந்தியர்கள், தங்களது கடவுட்சீட்டை திரும்ப பெற முடியாததால், அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் நிறுவனம் கூறியுள்ளது.
ராக் நாட்டில், கட்டடப் பணிகள் மற்றும் கட்டமைப்புத் துறைகளில், இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே, சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, அங்கு கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
ஈராக் நாட்டில் ஆளும் அரசிற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. வர்த்தக நகரமான மொசுலை கைப்பற்றிய பயங்கரவாதிகள், அடுத்து திக்ரித் நகரையும் கைப்பற்றினர். கடும் போராட்டத்திற்கு பிறகு, திக்ரித் நகரத்தை அவர்களிடமிருந்து மீட்ட இராணுவம், மறுநாளே, மீண்டும் திக்ரித் நகரத்தை, பயங்கரவாதிகளிடம் பறிகொடுத்தது. பயங்கரவாதிகள், தலைநகர்
பாக்தாத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். தலைநகர் பாக்தாத்தில் உள்ள
மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த
மருத்துவமனையில், இந்தியாவைச் சேர்ந்த 46 தாதியர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, எங்களைப்போன்ற தொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment